ப்ளீஸ்...போகாதீங்க சார்!
ஆசிரியரின் டிரான்ஸ்ஃபரை தடுத்த மாணவர்கள்
கூகுளில் ஆசிரியர் என்று தட்டினாலே பகவானின் படங்களும் அவரைப் பற்றிய செய்திகளும்தான் வந்து விழுகின்றன. அந்தளவுக்கு ஆசிரியர் பகவானின் பெயர் இன்று உலகெங்கும் வைரல். அவருக்கு இடமாறுதல் என்றதுமே அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிட்டனர் வெளியகரம் கிராமக் குழந்தைகள். அதோடு, பெற்றோருடன் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவமும் ஹாட் நியூஸானது.
‘சாட்டை’ சமுத்திரக்கனி போல ஓர் ஆசிரியர் என விஷயம் சமூக வலைத்தளங்களிலும் தீயாகப் பரவ, அவரது இடமாறுதல் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது பள்ளிக் கல்வித்துறை. திருத்தணியிலிருந்து 35 கிமீ தொலைவில் ஆந்திரா எல்லையில் இருக்கிறது வெளியகரம். பார்டர் என்பதால் பெரும்பாலும் ெதலுங்கு பேசும் மக்களே இங்கு அதிகம். இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 280 மாணவ - மாணவிகள் படிக்கின்றனர். 19 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளிக்குத்தான் 2014ல் பி.ஏ.பி.எட் முடித்த பகவான் ஆங்கில ஆசிரியராக வந்தார்.
அன்றிலிருந்து குழந்தைகளுடன் மட்டுமல்ல; அவர்களின் குடும்பத்தினருடனும் இரண்டறக் கலந்துவிட்டார் மனிதர். ‘‘பகவான் சார் வந்த பிறகுதான் எங்க குழந்தைங்க இங்கிலீஷ்ல நல்ல மார்க் எடுக்க ஆரம்பிச்சாங்க. முன்னாடியெல்லாம் இங்கிலீஷ் படிக்க ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. அவரை எதுக்காக டிரான்ஸ்ஃபர் பண்றாங்கனு தெரியல...’’ என உணர்வுபூர்வமாக ஆரம்பித்தார் வெளியகரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி. ‘‘பாடத்தை பசங்களோட பசங்களா இருந்து சொல்லித் தர்ற மனிதர். அதனால அவர்மேல பசங்களுக்கு ரொம்ப பிரியம்.
வீட்டுலயும் குழந்தைகள் இவரைப் பத்தி பேசிட்டே இருப்பாங்க. பசங்களுக்கு ஒண்ணுன்னா உடனே அவங்க அம்மா, அப்பாவைக் கூப்பிட்டுப் பேசுவார். இப்ப அவருக்கு டிரான்ஸ்ஃபர்னு சொன்னதும் பசங்களால தாங்க முடியல. இரண்டு நாளா சரியாக்கூட சாப்பிடல. அழுதுட்டே இருந்தாங்க. அதனாலேயே இடமாறுதலை எதிர்த்து எல்லா கிராம மக்களும் ேசர்ந்து போராடினோம். அவர் இருந்தாதான் குழந்தைங்க ஜெயிப்பாங்க...’’ அழுத்தமாகச் சொல்கிறார் லட்சுமி. வியப்புடன் பகவானைப் பிடித்தோம். ‘‘அருகிலுள்ள அருங்குளம் மேல்நிலைப்பள்ளிக்கு கவுன்சிலிங் மூலமா பணி மாறுதல் கிடைச்சது.
அதுக்கான ரிலீவிங் ஆர்டர் வாங்கத்தான் என் பள்ளிக்கு வந்தேன். அங்க மாணவர்கள் ெராம்ப உருக்கமா ஆர்ப்பாட்டம் நடத்திட்டு இருந்தாங்க. ‘போகாதீங்க’னு என்னை கட்டித்தழுவி அழ ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. ரொம்பவே உணர்ச்சிவசமான நிகழ்வா மாறிடுச்சு...’’ எனக் கண் கலங்கிய பகவானிடம், ‘இப்படியொரு அன்பு எப்படி சாத்தியமானது..?’ என்றோம். ‘‘மாணவர்களை ஊக்கப்படுத்திட்டே இருப்பேன். அவங்ககிட்ட எதிர்மறையான எண்ணங்களைத் தோன்ற விட்டதில்ல. ஆசிரியரின் பாராட்டுதான் ஒரு மாணவனை மேல கொண்டு வரும்.
அதை சரியா செய்றேன்னு நம்புறேன். பொதுவா, மாணவர்கள்கிட்ட கேள்வி கேட்டா யாரும் கை தூக்கமாட்டாங்க. நான், முதல்ல எந்திரிச்சு நின்னு பதில் சொல்றதையே பாராட்டுவேன். அடுத்தமுறை வகுப்புக்குப் போகும் போது நிறைய பேர் கை தூக்கி ‘நான் சொல்றேன் சார்’னு சொல்வாங்க. இப்படித்தான் என் அணுகுமுறை அவங்ககிட்ட இருந்துச்சு. அவங்களோட தரையில் உட்கார்ந்து வகுப்பு எடுப்பேன். விஷயத்தை எளிமையா புரிய வைப்பேன். எந்த மாணவனுக்காவது உடல்நிலை சரியில்லைன்னா அவன் பெற்றோருக்கு போன் பண்ணி தகவல் சொல்வேன்.
இதெல்லாம்தான் அவங்ககிட்ட என்னை கொண்டு சேர்த்துச்சு. என்னை அவங்கள்ல ஒருத்தனா நினைக்க ஆரம்பிச்சாங்க. அவங்க வீடுகள்ல ஸ்பெஷலா உணவு செஞ்சா எனக்கும் கொண்டு வந்து கொடுப்பாங்க. என் பாடத்துல கடந்தாண்டு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றாங்க. இதுக்கெல்லாம் காரணம் எனக்கு வாய்த்த ஆசிரியர்கள்தான். எனக்கு ஆரம்பப் பள்ளியில உமாபதினு ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் வருகைக்காக பள்ளி வாசல்லயே காத்திருப்போம். மாணவர்கள்கிட்ட நெருக்கமா இருந்து பாடம் சொல்லித் தர்றதுல அவருக்கு நிகர் அவரே! அப்புறம், ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில தியாகராஜ்னு ஒரு ஆசிரியர்.
என் கற்பனைத்திறனை வளர்த்தவர். மாணவர்கள் அளவுக்கு கீழ இறங்கி வந்து சொல்லிக் கொடுப்பார். நிறைய ஊக்கப்படுத்துவார். இவங்கதான் என் முன்மாதிரி. அவங்க மாதிரி நானும் என் மாணவர்கள்கிட்ட இருக்கேன். அவ்வளவுதான்...’’ எனப் பணிவாகப் பேசும் பகவான் தன் குடும்பத்தைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார். ‘‘சொந்த ஊர் பொம்மராஜபேட்டை. அப்பா கோவிந்தராஜ், அம்மா தெய்வானை, அண்ணன், அக்கா, தம்பினு என்னோட சேர்த்து ஆறு பேர். அண்ணன் ராஜேஷ் பெங்களூர்ல பிளம்பர் வேலை பார்த்து தான் என்னை படிக்க வச்சார்.
ஆசிரியர் பயிற்சி முடிச்சதும் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிச்சேன். எனக்கு சின்ன வயசுலயே இலக்கியம் படிக்குற ஆர்வத்தை ஆசிரியர்கள்தான் தூண்டிவிட்டாங்க. தவிர, நூலகம் நிறைய போவேன். கவிதைகள் எழுதுவேன். ‘குங்குமம்’ இதழ்ல கூட ரெண்டு வாரத்துக்கு முன்னாடி என் கவிதை வெளியாகியிருக்கு. இப்ப சிறுகதையும் எழுதிட்டு இருக்கேன்...’’ என்கிற இந்த ஆங்கில ஆசிரியரின் பேச்சில் தூய தமிழ் அழகாக இழையோடுகிறது. ‘‘நான் அரசுப் பள்ளி ஆசிரியர். அதனால, அரசு ஆணைக்கு எப்பவும் கட்டுப்படுவேன். இடமாறுதல் கொடுக்கிற இடத்துல என் பணியை சிறப்பாகச் செய்வேன்...’’ என்கிறார் பகவான் நெகிழ்வாக.
பேராச்சி கண்ணன் படங்கள்: பி.பாஸ்கர்
|