டிக்:டிக்:டிக் விமர்சனம்



நாட்டின் ஆபத்தைத் தவிர்க்க லோக்கல் திருடர்கள் மூன்று பேர் விண்வெளி வீரர்களாகி(!) வான்வெளி வரை சென்று வெற்றி சூடும் ஃபேன்டசியே  ‘டிக்:டிக்:டிக்’.

மிகப்பெரும் விண்கல் பூமியை நோக்கி, அதுவும் தமிழத்தின் ஒரு பகுதியைக் குறி வைக்கிறது. நாலு கோடி மக்களுக்கு கன்பார்ம் ஆபத்து  காத்திருக்கிறது. அந்த ஆபத்தை மக்களுக்கு பயம் காட்டாமல் சரிசெய்ய வேண்டும். விண்கல் வரும் வழியிலே அதை இரண்டு துண்டாக்கி, சிதற  வைத்தால் பூமி எஞ்சும். இதற்கான ஏவுகணை எதிரி நாட்டு ஆராய்ச்சி மையத்தில் இருக்கிறது. அதைத் திருடி(!) வந்து விண்கல் உடைக்கும் திட்டம்.

அதை லோக்கல் திருடர்களோடு சேர்ந்து விண்வெளி வீரர்கள் செய்து முடித்தார்களா? தமிழகத்தைக் காப்பாற்ற முடிந்ததா... என்பதே கதை. விண்வெளி, பிரம்மாண்ட கருவிகள், விண்கலன்கள் என்று பரபரப்பு கூட்டிய வகையிலும் இது நிச்சயம் தமிழுக்குப் புதுசு. குட்டிக் குட்டி ட்விஸ்ட்கள்  மற்றும் சுவாரஸ்யத் திருப்பங்களில் ரசிக்க வைக்கிறார் இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன். ஜெயம் ரவி விறைப்பும், முறைப்பும், கண்டிப்புமாக உயிர்  கொடுத்திருக்கிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக விண்வெளி வீரராக அக்கறை சேர்க்கும் இடங்கள், நிதானமாகப் பேசிக்கொண்டே சுறுசுறுப்பாக ஏவுகணையை(!) திருட  தயாராகும்போது காட்டும் வேகத்தின் ஊடே மன அழுத்தத்தின் படிகளை சரியாகக் காட்டுகிறார். மேஜிக்மேன், பாசக்கார அப்பா என அடுத்தடுத்து  ரசனை கூட்டுகிறார். பாந்தமாக, சாந்தமாக, தீர்க்கமாக என தெளிவான தேவதையாக வசீகரிக்கிறார் நிவேதா பெத்துராஜ். நடிப்புக்கும் கொஞ்சம்  வழிவகை பார்த்துக் கொண்டால், அடுத்த ஐந்து வருடங்களுக்கு அடித்துக் கொள்ள ஆளில்லை.

வான்வெளியிலேயே காமெடி என்ற ரகத்தில் ரமேஷ் திலக், அர்ஜுன் கலகலப்பு. யூகிக்க முடிந்தாலும் விண்வெளித் திட்டத்தின் பெரிய அதிகாரியாக  கடமையில் சிறந்து, கூடவே திகில் திட்டத்தோடு ஜெயப்பிரகாஷ் சிறப்பு. எந்த நிமிடத்தையும் வீணாக்காத முன்பாதி திரைக்கதை, பின் பாதியில் ஏன்  இத்தனை தடுமாறுகிறது! இன்னும் பச்சை வயரையும், சிவப்பு வயரையும் கட் பண்ணி பிரச்னை உண்டாக்கும் டெம்ப்ளேட் எதற்கு? சந்திரனில் போய்  இறங்கி விடுகிற கால அவகாசம் நகைச்சுவை.

ஆனாலும் அதன் காட்சி சிறப்பு கவனிக்கத்தக்கது. எதிரியின் விண்வெளி மையத்தில் சண்டையிட்டு, மேஜிக் துணையில் ஏவுகணையைக்  கைப்பற்றுவது, அத்தனை டெக்னிக்கலையும் நாலே நாட்களில் கற்றுக்கொள்வது எல்லாம் லாஜிக்கை துறந்தால் ரசிக்கலாம். இமானின் ‘குறும்பா’  பாடல் ஹிட் மிக்ஸ். விண்வெளி ஓடம், ராக்கெட் என கலை அமைப்பில் மூர்த்தி அற்புதம். வான்வெளி, பயண ஓடம் என எந்த ஆங்கிளிலும் பளிச்  ஸ்கோப் பிடிக்கிறது எஸ்.வெங்கடேஷின் கேமரா. புது முயற்சியை வரவேற்கலாம்.

குங்குமம் விமர்சனக்குழு