காட்ஃபாதர்-போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா-64

சிங்கம் சிறைப்படலாம். ஆனால், அதன் கர்ஜனை ஒலித்துக்கொண்டேதான் இருக்கும். சிறைக்குள் இருந்தாலும் தன்னுடைய வழக்கமான பணிகள்  எதுவும் பாதிக்கப்படாத வகையிலான ஏற்பாடுகளை பாப்லோ எஸ்கோபார் செய்திருந்தார். அவருடைய மெதிலின் கார்டெல் வழக்கமான ஜோரில்  இயங்கிக் கொண்டிருந்தது.

அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும் செல்ல வேண்டிய ‘சரக்கு’ பிசினஸ், தங்குதடையில்லாமல் நடந்துகொண்டிருந்தது. அரசு அதிகாரிகளுக்கும்,  அரசியல்வாதிகளுக்கும் என்னென்ன கிடைக்க வேண்டுமோ, அவையெல்லாம் தங்கு தடையின்றி முன்பைவிட கூடுதலாகவே கிடைத்துக்  கொண்டிருந்தது. தான் தங்குவதற்காக தானே உருவாக்கிய சிறையில் ஜம்மென்று ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார் எஸ்கோபார். அவருக்கென்று ஒரு  பெரிய அறை, அலுவலகமாக இயங்கியது. சிம்மாசனம் மாதிரி பெரிய இருக்கை.

நான்கைந்து உதவியாளர்கள், போன் என்று பக்காவான ஆபீஸ். கொலம்பிய அதிபரைப் பொறுத்தவரை பாப்லோ மீது சட்டப்படி நடவடிக்கை  எடுத்தாயிற்று; நாட்டில் அமைதியும் திரும்பிவிட்டது என்று அமெரிக்காவுக்கும், மற்றவர்களுக்கும் ‘கணக்கு’க் காட்டிவிட்டார். கொலம்பியாவில்  இருந்துதான் இன்னமும் போதை மருந்துகள் எங்கள் நாட்டுக்குள் வருகின்றன, இளைஞர்களைச் சீரழிக்கின்றன என்று அமெரிக்கா பாட்டுக்கும் ஒரு  பக்கம் கதறிக்கொண்டே இருந்தது.

அமெரிக்காவின் உருட்டல், மிரட்டலையெல்லாம் கொலம்பிய அதிபர் கவேரியா, கிஞ்சித்தும் மதிக்கவில்லை. வெளிநாட்டு  முதலீடுகளைக்கொண்டுவருவதில் அவர் மும்முரமாக இருந்தார். ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்த தொழிலதிபர்களை அழைத்துவந்து, தங்கள்  நாட்டின் தெருக்களில் அமைதி திரும்பி விட்டதைச் சுட்டிக் காட்டி, ‘தொழில் தொடங்குங்கள், சலுகைகளை வாரி வழங்கு கிறோம்...’ என்று இறைஞ்சிக்  கொண்டிருந்தார். கொலம்பியாவில் இனி உள்நாட்டுப் போர் என்கிற நிலைமைக்கு வாய்ப்பேயில்லை என்று கிடைக்கும் மேடைகளில் எல்லாம்  முழங்கிக் கொண்டிருந்தார்.

அவரது முயற்சிகளுக்கு வெற்றிகள் கிட்டாமல் போகவில்லை. பொதுவாகவே தென்னமெரிக்க நாடுகள் இயற்கை வளம் மிக்கவை. மற்ற நாடுகளின்  வளத்தைச் சுரண்டியே தம்மை வளப்படுத்திக் கொள்ளும் முதலாளித்துவ நாடுகளுக்கு கொலம்பியாவை காணும்போதெல்லாம் நாக்கில் எச்சில்  ஊறியது. அமெரிக்க முதலாளிகளும்கூட கொலம்பியாவில் தொழில் தொடங்க ஆர்வமாகவே இருந்தார்கள். சிறையில் டெலிபோன், ஃபேக்ஸ் உள்ளிட்ட  வசதிகள் இருந்ததால் பாப்லோ, போனிலேயே ஏகத்துக்கும் டீலிங்குகளை முடித்தார்.

கொலம்பிய ஏழை மக்களுக்குச் செய்ய வேண்டிய தான, தருமங்களை தொடர்ச்சி யாகச் செய்துகொண்டே இருந்தார். உதவி வேண்டும் மக்கள்,  அவருக்கு ஃபேக்ஸ் மூலமாக தங்கள் தேவையைத் தெரிவித்துக் கொண்டே இருந்தார்கள். வழக்கமான வேலை நேரம் போக மீதி நேரத்தில் நிறைய  நூல்களை வாசிக்க ஆரம்பித்தார். குறிப்பாக அரசியல் நூல்கள். வெளியே வந்தவுடனேயே அடுத்த தேர்தலிலேயே, தான் அதிபர் ஆகிவிட முடியும்  என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஏனென்று தெரியவில்லை. சிறையில் இருந்தபோது சீன மொழி கற்றுக்கொள்வதில் அதிகமாக ஆர்வம்  செலுத்தினார்.

இதற்காக மெதிலின் நகரில் இருந்து ஒரு சீன வாத்தியார் லொங்கு லொங்கென்று ஓர் ஓட்டை டூவீலரில் வந்து செல்வார். மெதிலின் கார்டெல்  முக்கியஸ்தர்கள் மற்றும் பாப்லோ குறித்த வழக்குகள் குறித்து விவாதிப்பதற்காக வழக்கறிஞர்கள் குழுவினர் தினமும் வந்து செல்வார்கள். எந்த  வழக்கை எப்படி ‘முடிக்க’ வேண்டுமென்று ஆலோசனை வழங்குவதோடு, அதற்குரிய பைனான்ஸ் உள்ளிட்ட விஷயங்களையும் பாப்லோ செய்து  கொடுத்துக் கொண்டிருந்தார். இரவு நேரங்களில் பொதுவாக ஜன்னல் அருகே போய் நின்றுகொண்டு, வெளியே கவனிப்பார்.

மின்விளக்குகளால் மினுக்கிடும் நகரத்தை மணிக்கணக்கில் பார்ப்பது பாப்லோவுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு ஆனது. அதுபோல அவர் ஜன்னல்  அருகே நிற்கும்போது, யாரும் எதற்காகவும் அவரைத் தொல்லைப் படுத்துவதில்லை. இதற்கிடையே காலி கார்டெல்லுக்கும், பாப்லோவுக்கும் சமரசம்  ஏற்படுத்த கொலம்பியாவின் கால்பந்து நட்சத்திரமான ஹிகூட்டா என்பவர் முயற்சித்துக் கொண்டிருந்தார். பாப்லோவின் தந்தையே நேரிடையாக காலி  கார்டெல் உரிமையாளர்களைச் சந்தித்து சமாதானம் பேசினார். எதுவும் பிரயோசனப்படவில்லை.

சிறையையே தகர்க்க ஒருமுறை காலி கார்டெல் முயற்சித்தது. ஒரு சிறிய விமானத்தில் 100 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளோடு சிறையை  மோதி வெடிக்கச் செய்ய அவர்கள் எடுத்த முயற்சி வெற்றிகரமாக மெதிலின் கார்டெல்லைச் சார்ந்தவர்களால் முறியடிக்கப்பட்டது. கொலம்பிய  ஊடகங்களில் பாப்லோ, சிறையில் ராஜவாழ்க்கை வாழ்வதாக பரபரப்பான கட்டுரைகள் எழுதப்பட்டன. டாய்லட் கூட தங்கத்திலேயே செய்யப்பட்டது  என்றெல்லாம் அடித்து விட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், சிறைக்கு நிறைய அழகிகள் வந்து சென்றது உண்மைதான்.

சிறையிலிருந்தவாறே டிவியில் பார்க்கும் அழகிகளை எல்லாம், என்ன செலவு ஆனாலும் நேரில் அழைத்து ‘பழகிப் பார்ப்பது’ என்பது பாப்லோவின்  பொழுதுபோக்காக இருந்தது. தன்னுடன் சிறையில் இருந்த மற்ற சகாக்களும் அவரவர் முயற்சியில் அழகிகளை அழைத்து ‘பழகிப் பார்ப்பது’ குறித்தும்  அவர் ஆட்சேபணை எதுவும் தெரிவிக்கவில்லை. ஒருகட்டத்தில் சிறையில் அடிக்கடி ‘நைட் பார்ட்டி’ நடக்க ஆரம்பித்தது. வெளியே என்னென்ன  வசதிகள் தங்களுக்குக் கிடைக்குமோ, அவை அனைத்தையும் தாங்கள் இருக்கும் சிறைக்கூடத்துக்கே வரவழைத்து அனுபவித்தார்கள்.

பாப்லோவின் பிரத்யேக சிறையறையில் மூன்று படுக்கைகள், குஷன் வைத்த மெத்தையோடு போடப்பட்டிருந்தன என்றால் பார்த்துக்  கொள்ளுங்களேன். மினி பார் ஒன்றும் எப்போதும் சரக்குகள் நிரப்பப்பட்டு அவருக்காக இயங்கிக் கொண்டிருந்தது. அந்த கதீட்ரல் சிறையில் ஏராளமான  நிகழ்ச்சிகள் நடந்தன. உள்ளேயே சிலருக்கு திருமணம்கூட நடந்திருக்கிறது.

யாருக்காவது பிறந்தநாள் என்றால், பார்ட்டி நிச்சயம். பாப்லோ, சிறையிலிருந்தபோதுதான் தன்னுடைய 42வது பிறந்தநாளையே கொண்டாடினார்.  கொலம்பியாவின் தலைசிறந்த இசைக்குழுவினர், சிறைக்கே வந்து இவர்களுக்கென்று இசைப்பார்கள். உலகக் கோப்பைக்காக தங்களைத் தயார்  செய்துகொண்டிருந்த கொலம்பிய அணியினர், சிறைக்கு வந்து பாப்லோவிடம் ஆசி பெற்றார்கள். “உங்களுக்கும் எங்களுக்கும் மேட்ச் வெச்சுக்கலாமா?”  என்று குறும்போடு அவர்களிடம் கேட்டார்.

அவர்களும் சம்மதிக்க, ‘கொலம்பியா vs மெதிலின் கார்டெல்’ போட்டி கதீட்ரலில் இருந்த மைதானத்தில் நடந்தது. ஆரம்பத்தில் கொலம்பிய அணி 3 -  0  என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருக்க, பாப்லோவின் சகாக்கள் நடுவர்களை கண்களாலேயே மிரட்டினார்கள். போட்டி 5 - 5 என்று  டிராவில் முடிந்தது! இதையடுத்து அடிக்கடி கால்பந்து போட்டிகள் நடந்தன. நாட்டில் இருந்த பெரிய கால்பந்து கிளப் அணிகள், ‘சிவனே’யென்று வந்து  விளையாடி பாப்லோ குழுவினரிடம் ஜாலியாக தோற்றுவிட்டுச் செல்வார்கள். இந்தக் கூத்தெல்லாம் மிகச்சரியாக 396 நாட்களுக்கு நடந்தது. ஆம்.  அத்தனை நாட்கள்தான் சிங்கம், தானே விரும்பி சிறைக்குள் இருந்தது.

(மிரட்டுவோம்)
ஓவியம் : அரஸ்