COFFEE TABLE



ஹேர் டாட்டூ

ஒரே நாளில் கால்பந்து ரசிகர்களின் ஹீரோவாகிவிட்டார் மரியோ. செர்பியாவைச் சேர்ந்த ஹேர் ஸ்டைலிஸ்ட்டான மரியோவுக்கு பிரபலங்களின்  முகங்களை பின்னந்தலையில் ஹேர் டாட்டூவாக வரைவது கைவந்த கலை. உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடந்து கொண்டிருப்பதால்  தங்களுக்குப் பிடித்த வீரர்களின் முகங்களை வரைந்து கொள்வதற்காக ரசிகர்கள் அதிகாலையிலேயே மரியோவின் கடை முன் ஆஜராகிவிடுகின்றனர்.  ஒரு நபருக்கு ஹேர் டாட்டூ செய்ய ஏழு மணி நேரம் எடுத்துக் கொள்கிற மரியோ, இதற்காக 12 ஆயிரம் ரூபாயை வசூலிக்கிறார்.

தயாரிப்பாளர் ஸ்ருதி!

ஹீரோயின்களும் புரடியூசர் ஆகும் காலம் இது. இப்போது ஸ்ருதிஹாசன் சீஸன். தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘இஸிட்ரோ மீடியா’ என்று பெயர்  வைத்திருக்கிறார் ஸ்ருதி. ‘லென்ஸ்’ பட இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிக் கொண்டிருக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஃஸபி’தான்  ஸ்ருதியின் முதல் தயாரிப்பு. ஏற்காட்டில் நடந்து வரும் படப்பிடிப்புக்கு இடையே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்ருதி  தட்டிவிட, வாழ்த்துகள் குவிகின்றன.

ப்யூட்டி டிப்ஸ்

பெண்களுக்கான அழகுக் குறிப்பு வீடியோக்கள் யூ டியூப்பில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனாலும் ஃபேஸ்புக்கில் புதுப்புது பியூட்டி டிப்ஸ் கிளிப்பிங்குகளுக்கு எப்போதும் பஞ்சமில்லை. உதாரணத்திற்கு, ஹை ஹீல்ஸ் செருப்பை போட்டுக்கொண்டு புல்வெளி யில் நடந்து போவதில் சிக்கலா?  முகத்தில் கரும்புள்ளி தொல்லையா? கைவிரல் களில் உள்ள நெய்ல்பாலீஷ் சரியாக உலரவில்லையா..? இப்படி எல்லா பெண்களும் சந்திக்கும்  பொதுவான பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்கிறது ஃபேஸ்புக்கின் ‘Bright Side’ பக்கத்தில் ‘Ingenious Beauty Tips For Girls’ என்ற தலைப்பில்  இடம்பெற்றுள்ள வீடியோ ஒன்று. பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 11 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி வைரலாகி வருகிறது இந்த வீடியோ.

பாக்கெட் ஸ்பீக்கர்

இசைக் காதலர்களுக்காக நவீன ரக ஸ்பீக்கர்களை சந்தையில் தொடர்ந்து அறிமுகப்படுத்திவருகிறது ‘ஷியோமி’ நிறுவனம். ‘பாக்கெட் ஸ்பீக்கர் 2’ இதன்  புது வரவு. புளூடூத் தொழில்நுட்பத்துடன் சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்பீக்கரை சட்டைப்பையில் கூட நீங்கள் வைத்துக் கொள்ள  முடியும். ஒரு முறை பேட்டரியை முழுதாக சார்ஜ் செய்துவிட்டால் 7 மணி நேரம் இடைவிடாமல் பாடல்களைக் கேட்கலாம். கருப்பு, வெள்ளை என்று  இரு வண்ணங்களில் கிடைக்கின்றது. விலை ரூ.1,499.

ஆன்டி பயாட்டிக் ஆபத்து

‘‘கடந்த வருடம் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் சரியாக வேலை செய்யாததால் இறந்து  போயிருக்கின்றனர்...’’ என்று அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஓர் ஆய்வு. ‘‘நாம் பயன்படுத்தும் பல அழகு சாதனப் பொருட்களில் டிரிக்லோசன்  (Triclosan) என்னும் இரசாயனம் உள்ளது. இந்த இரசாயனத்தை அதிகமாக நுகரும்போது ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வேலைசெய்யாமல் போகலாம்...’’  என்று கண்டுபிடித்திருக்கிறது அந்த ஆய்வு. தவிர, ‘‘நாம் தினசரி உபயோகிக்கும் பற்பசையில் கூட இந்த டிரிக்லோசன் உள்ளது...’’ என்று  எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

குங்குமம் டீம்