ஜீவாவை கழற்றிவிட்டு யோகிபாபுவோடு கூட்டணி வைத்த சிம்பன்ஸி!



கொரில்லா சுவாரஸ்யங்கள்

‘‘படத்தோட டைட்டில் ‘கொரில்லா’. உடனே ‘கிங்காங்’ மாதிரி படம்னு நினைச்சுடாதீங்க. கொரில்லா குரங்குக்கும் இந்தப் படத்துக்கும் எந்த தொடர்பும்  இல்ல! இது ஒரு வித்தியாசமான காமெடி ஜானர். மறைஞ்சிருந்து எதிர்பாராம தாக்குவதற்கு பெயர்தான் ‘கொரில்லா தாக்குதல்’. அப்படியொரு அட்டாக்  கதைல நடக்குது! சில புதிய முயற்சிகளை டிரை செய்திருக்கோம். லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... படத்துல சிம்பன்சி குரங்கு ஒண்ணு மெயின் ரோல்  பண்ணியிருக்கு!

புன்னகையும் பூரிப்புமாகப் பேசுகிறார் டான் சாண்டி. ஜீவா, ஷாலினி பாண்டே நடிக்கும் ‘கொரில்லா’ படத்தின் அறிமுக இயக்குநர். ‘‘ஸ்கிரிப்ட்டை எழுதி முடிச்சதும், ஜீவா சார்தான் மனசுல வந்து நின்னார். கதைப்படி ஹீரோ சென்னை மொழி பேசறவர். ஏற்கனவே ஜீவா சார்,  ‘எஸ்எம்எஸ்’, ‘ஈ’ படங்கள்ல இந்த ஏரியாவுல கலக்கியிருப்பார். அதனாலதான் அவரை அப்ரோச் பண்ணினேன். கதை கேட்டதுமே ‘உடனே ஷூட்டிங்  கிளம்பலாம் சாண்டி’னு ரெடியானார்...’’ நெகிழ்கிறார் டான் சாண்டி. இது மூணு திருடர்கள் பத்தின கதைனு சொல்றாங்களே..? ஓரளவு கரெக்ட்.

இது Heist காமெடி ஜானர். ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா இவங்க மூணு பேரும் ஃப்ரெண்ட்ஸ். அவங்களுக்கு பணத்தேவை ஏற்படுது. அதுக்காக,  ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க திட்டமிடறாங்க. அவங்க கூடவே ஒரு குரங்கும் இருக்கு! இந்தக் கூட்டணி பேங்க்ல கொள்ளையடிச்சாங்களா?  இல்ல போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டாங்களா..? இதுதான் ஒன்லைன். முழுக்க முழுக்க பேங்க் ராபரி பத்தின படம். இப்படி ஹாலிவுட்ல நிறைய  வந்திருக்கு. ஆனா, தமிழுக்கு கொஞ்சம் புதுசு. ஜீவாவுக்கு ஜோடியா ஷாலினி பாண்டே.

இவங்க தவிர ராதாரவி சார், சுவாமிநாதன், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன்னு நிறைய பேர் இருக்காங்க. இது சென்னைல நடக்கும் கதை.  சிம்பன்ஸி வரும் போர்ஷனை தாய்லாந்துல ஷூட் பண்ணியிருக்கோம். அந்நாட்டு விலங்குகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு குரங்கை நடிக்க  வச்சிருக்கோம். வழக்கமா ஒரு சிம்பன்ஸி குரங்கு எப்படி நடந்துக்குமோ அப்படியே அது இயல்பா இருக்கறதுதான் படத்துக்கும் தேவையா இருந்தது.  சிம்பன்ஸி காட்டு விலங்குதான். ஆனாலும் அது செல்லப்பிராணி! ஆல்ரெடி நிறையப் படங்கள்ல நடிச்ச சிம்பன்சியைத்தான் நடிக்க வைச்சிருக்கோம்.

ஸோ, அதுகிட்ட வேலை வாங்கறது சுலபமா இருந்தது. குரங்குக்கு ‘காங்’னு பெயர் வச்சிருக்கோம். அதோட லூட்டி குழந்தைகளைக் கவரும்.  கதைக்குள்ள சிம்பன்ஸி வந்ததே எதிர்பாராம நடந்ததுதான். ஸ்கிரிப்ட்டை எழுதி முடிச்ச டைம்ல ஒரு நாள் ‘ஹேங் ஓவர் 2’ போஸ்டரைப் பார்த்தேன்.  அதுல மூணு நண்பர்களும், ஒரு சிம்பன்ஸியும் ஜாலியா போஸ் கொடுத்திட்டிருந்தாங்க. அப்பத்தான் குரங்கையும் கதைக்குள்ள கொண்டு வரலாமேனு  ஸ்பார்க் அடிச்சது. உடனே ஸ்கிரிப்ட்டை மாத்தியமைச்சேன். ஆனா, ‘ஹேங் ஓவர் 2’க்கும் இந்தக் கதைக்கும் எந்தத் தொடர்பும் இல்ல.

அந்தக் குரங்கு தாய்லாந்தைச் சேர்ந்தது. இந்த விஷயத்தை தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா சார்கிட்ட சொன்னதும், ‘அங்கயே போய் ஷூட்  பண்ணிக்கலாம்’னு பச்சைக்கொடி காட்டினார். தமிழ்ல இதுக்கு முன்னாடி ‘மசாலா படம்’, ‘ரம்’ படங்களை தயாரிச்சவர் அவர். ‘காஞ்சனா 2’  ஆர்.பி.குருதேவ் சார், ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ‘விக்ரம் வேதா’ சாம் சி.எஸ்., இசையமைக்கறார். பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கார். எடிட்டர்  ரூபனுக்கு சவாலான வேலைகள் காத்திருக்கு. ஜீவா - சிம்பன்ஸி கெமிஸ்ட்ரி எப்படி? சூப்பரா ஒர்க் அவுட் ஆகியிருக்கு.

என்னை மாதிரி அறிமுக இயக்குநருக்கு ஜீவா, இவ்வளவு சுதந்திரம் கொடுப்பார்னு நினைச்சுக் கூட பார்க்கல. அதேபோல சிம்பன்ஸி. தாய்லாந்து  மொழிக்குப் பழக்கப்பட்ட குரங்கு. அதனால அந்த நாட்டு டிரெயினரை வைச்சே நடிக்க வச்சிருக்கோம். ஜீவா சாருக்கு சிம்பன்ஸியோடு காம்பினேஷன்  சீன்ஸ் நிறைய இருந்ததால, ஷூட்டிங் தொடங்கறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே அவரை குரங்கோடு பழக வைச்சோம். ஒரு கட்டத்துல ரெண்டு  பேரும் செம ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க. ஆனா, அதெல்லாம் யோகிபாபு வரும் வரைதான்! அவருக்கும் குரங்கு கூட காம்பினேஷன் சீன்ஸ் நிறைய  இருக்கு.

யோகி பாபுவைப் பார்த்ததும்  குரங்கு உற்சாகமாகிடுச்சு. ஜீவா சாரை கழற்றிவிட்டுட்டு அவரோடு லூட்டி அடிக்க ஆரம்பிச்சுடுச்சு! யோகிபாபு,  தாய்லாந்தை விட்டுக் கிளம்பின பிறகுதான் மறுபடியும் ஜீவா சாரோட ஒட்டிக் கிச்சு! கடைசிநாள் ஷூட் முடிஞ்சு கிளம்பறப்ப எல்லாருமே  கண்கலங்கிட்டோம். என்ன சொல்றாங்க ஷாலினி பாண்டே? ஜீவாவுக்கு ஜோடியாக இதுவரை நடிக்காதவங்க யாருனு யோசிச்சப்ப ஷாலினி பாண்டே  ஃப்ளாஷ் ஆனாங்க. தெலுங்குல அவங்க நடிச்ச ‘அர்ஜுன் ரெட்டி’ எங்க எல்லாருக்குமே பிடிச்சிருந்தது.

அந்தப் பட அளவுக்கு இதுல அவங்களுக்கு நடிக்க ஸ்கோப் இல்ல. அதையும் மீறி அசத்தியிருக்காங்க. கதையோட திருப்புமுனையா அவங்க கேரக்டர்  இருக்கும். சாஃப்ட்வேர் கம்பெனில ஒர்க் பண்றவங்களா படத்துல வர்றாங்க. இன்னும் அவங்களுக்கு தமிழ் பேச வரல. ஆனா, நாம பேசறதை  புரிஞ்சுக்கறாங்க. கோலிவுட் ஒர்க்கிங் ஸ்டைல் அவங்களுக்கு பிடிச்சிருக்கு. ராதாரவி சார் கொடுத்த ஒத்துழைப்பை மறக்கவே முடியாது. சென்னைல  பிரமாண்டமா செட் போட்டு ஒரு போர்ஷனை எடுத்தோம். அக்னி நட்சத்திரம் கொளுத்தின நேரம்.

கிட்டத்தட்ட 10 நாட்கள் வெட்ட வெளிலதான் ஷூட். கொஞ்சமும் முகம் சுளிக்காம ராதாரவி சார் நடிச்சுக் கொடுத்தார். உங்களப் பத்தி..? அடிப்படைல  இடதுசாரி சிந்தனையாளன். ஒரிஜினல் பெயரே டான் சாண்டிதான். வடசென்னைக்காரன். தாம்பரம் எம்சிசில பி.ஏ. எகனாமிக்ஸ் படிச்சிருக்கேன்.  ‘டைரக்டர் ஆகணும், சாதனை பண்ணணும்’னு இந்தத் துறைக்கு வரல. காலேஜ் படிக்கிறப்ப நிறைய கதைகள் சொல்வேன். பெற்றோர் இறந்த பிறகும்,  அதே மாதிரி கதைகள் சொல்லிட்டிருந்தேன். ஒரு கட்டத்துல சுத்தி இருந்தவங்க ‘நீயெல்லாம் சினிமாவுக்குத்தான் லாயக்கு’னு விளையாட்டா  சொன்னாங்க. அதை சீரியஸா எடுத்துட்டு இங்க வந்துட்டேன்!


மை.பாரதிராஜா