சின்னத்திரையில் பெண் டைரக்டர்கள் குறைவாக இருப்பது ஏன்?



தன் 18 வருட சின்னத்திரை அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் சுபா வெங்கட்

‘‘என்னதான் திறமை இருந்தாலும் சீரியலுக்கு திரைக்கதை, வசனம் எழுதறது ஆபீஸ் வேலை இல்லை. காலை 9 மணி முதல் மாலை 6 மணி  வரைனு இதை வரையறுக்க முடியாது. தினமும் குறைந்தது 15 மணி நேரங்களாவது மெகா தொடர்களுக்கு உழைக்க வேண்டி வரும். சமயத்துல  ஸ்பாட்டுக்கு போய் எழுதித் தர வேண்டிய சூழல் ஏற்படும். ஆண்கள் இதை சுலபமா செய்துடறாங்க. பெண்களுக்கு மனமும் திறமையும் இருந்தாலும்  குடும்ப சப்போர்ட் இல்லைனா சீரியலுக்கு எழுத முடியாது. குடும்பம், குழந்தைகள்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸோட பெண்கள் வாழறதாலதான்  சீரியலுக்கு எழுதற பெண்களோட எண்ணிக்கை குறைவா இருக்கு.

ஆனா, சமீப காலமா நிறைய பெண்கள் மெகா தொடருக்கு எழுத ஆரம்பிச்சிருக்காங்க. அவங்க நல்லாவும் எழுதறாங்க. கூடிய சீக்கிரம் இந்தப்  பெண்களோட எண்ணிக்கை அதிகரிக்கும்...’’ நிதானமாகப் பேசுகிறார் சுபா வெங்கட். சின்னத்திரையில் கிரியேட்டிவ் ஹெட் ஆக கோலோச்சும்  விரல்விட்டு எண்ணக் கூடிய பெண்களில் இவரும் ஒருவர். தனது 33 வருட அனுபவத்தில் 15 ஆண்டுகள் பத்திரிகைத் துறையிலும் 18 ஆண்டுகள்  சின்னத்திரையிலும் செலவழித்திருப்பவர்; முத்தெடுத்திருப்பவர்.

‘‘அக்மார்க் வடசென்னை வாசி. பாரீஸ் கார்னர்ல இருக்கிற பவளக்காரத் தெருவுல எங்க வீடு இருந்தது. அப்பா, ரயில்வேல வேலை பார்த்தார். அம்மா,  இல்லத்தரசி. ஒரு அண்ணன், இரண்டு தங்கைங்க - டுவின்ஸ்! இதுதான் எங்க குடும்பம். ஸ்கூல் டேஸ்ல பேச்சாளரா ஆகறது கனவா இருந்தது.  ஏன்னா, அடிக்கடி இலக்கிய விழாக்கள், சொற்பொழிவுகள் நடக்கும். என் இலக்கிய ஆர்வத்தைப் பார்த்து அப்பா சந்தோஷப்பட்டார். வீட்டுக்குப் பக்கத்துல  இருந்த மறைமலையடிகள் நூலகத்துக்கு கூட்டிட்டுப் போவார். புத்தகங்களை வாசிக்கிற பழக்கம் அங்க இருந்து தொடங்கினது.

பி.காம் படிச்சப்ப ஸ்போர்ட்ஸ், என்சிசி, பேச்சுப் போட்டினு பிசியா இருப்பேன்! அதுவும் பேச்சுப் போட்டினா அல்வா சாப்பிடற மாதிரி. நிறைய பரிசுகள்  வாங்கியிருக்கேன். இந்த நேரத்துலதான் நண்பர் ஸ்ரீதரன் வழியா ‘விகடன்’ மாணவப் பத்திரிகையாளர் திட்டம் பத்தி தெரிய வந்தது. விண்ணப்பிச்சு  தேர்வானேன். சென்னைல செலக்ட் ஆன ஒரே பெண் மாணவ நிருபர் அப்ப நான்தான்!’’ புன்னகைக்கும் சுபா வெங்கட், கல்லூரிப் படிப்பை முடித்த  மறுநாளே ‘விகடன்’ நிறுவனத்தில் ரிப்போர்ட்டராக சேர்ந்திருக்கிறார். ‘‘வேலைல சேர்ந்த அன்னைக்கு ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியம் சார் சொன்னது  இப்பவும் நினைவுல இருக்கு.

‘மாணவர் நிருபர் திட்டத்துல இருந்து முழு நேர வேலைக்குச் சேர்ந்திருக்கிற முதல் பெண் நிருபர் நீங்கதான்! உங்க செயல்பாடுகளைப் பார்த்துதான்  அடுத்தடுத்த வருடங்கள்ல இந்தத் துறைக்கு பெண்கள் வருவாங்க; வரணும். அவங்களுக்கான ரோல் மாடலா உருவாகுங்க...’ அந்த ஆசீர்வாதம் என்  பொறுப்பை உணர்த்துச்சு. 12 வருடங்கள் ‘விகடன்’ நிறுவனத்துல வேலை பார்த்தேன். பொறுப்பாசிரியர் அளவுக்கு உயர்ந்தேன். அப்புறம் ஃப்ரீலேன்சரா  பல பத்திரிகைகளுக்கு எழுதினேன். ‘குங்குமம்’ல ‘சிதம்பரம் பத்மினி’ பத்தி எழுதின ஸ்டோரி பரவலா பேசப்பட்டது...’’ என்று சொல்லும் சுபா வெங்கட்  காதல் திருமணம் செய்து கொண்டவர்.

‘‘‘விகடன்’ல இருந்தப்ப என் சீனியர் சுதாங்கன் சார் வழியா வெங்கட் அறிமுகமானார். அந்த நட்பு காதலா மலர்வதற்குள்ள எங்களுக்கு கல்யாணம்  ஆகிடுச்சு! உண்மையைச் சொல்லணும்னா சுபாவா சாதித்ததை விட, சுபா வெங்கட் ஆக சாதித்ததுதான் அதிகம்!’’ வெட்கம் கலந்த கம்பீரத்துடன்  சொல்லும் இவர், கே.பாலசந்தரின் கதைக்கும் திரைக்கதை எழுதியிருக்கிறார்! ‘‘டிவி மீடியால வேலை பார்க்கலாம்னு தோணினதும் ‘மின் பிம்பங்கள்’  பால கைலாசம் சார்கிட்ட போய் வேலை கேட்டேன். பத்திரிகையாளரா என்னை அவர் தெரிஞ்சு வைச்சிருந்தார்.

அதனால உடனே சேரச் சொல்லிட்டார். பின்நாள்ல சீரியல் ரைட்டரா, கிரியேட்டிவ் ஹெட்டா நான் உயர அவர்கிட்ட கத்துக்கிட்ட பாடங்கள்தான்  காரணம். அப்ப, அவங்க ‘மைக்ரோ தொடர்கள்’ தயாரிச்சிட்டிருந்தாங்க. அதோட அத்தனை கதைகள்லயும் ஒர்க் பண்ணினேன். அதுல ரா.கி.ரங்கராஜன்  எழுதின ‘தினம் ஒரு பொய்’ கதைக்கு திரைக்கதை எழுதினேன். முதல் சின்னத்திரை பயணம் அதுதான். அப்புறம் ‘அண்ணி’ தொடருக்கு வசனம் எழுதும்  வாய்ப்பு வந்தது. எல்லாவற்றுக்கும் சிகரம், பாலசந்தர் சாரோட கதையான ‘ரெக்கை கட்டிய மனசு’க்கு திரைக்கதை, வசனம் எழுதினது.

ஒன் உமன் ஆர்மியா ‘மின் பிம்பங்கள்’ல இருந்தேன். அப்புறம் வெளில வந்து குஷ்பு மேடத்தோட ‘கல்கி’ தொடருக்கு திரைக்கதை, வசனம் எழுதினேன்.  நல்ல ரீச். அடுத்து தெலுங்கில் கே.விஸ்வநாத் இயக்கிய ‘சர்வ மங்களா’ தொடருக்கு பங்களிக்கிற வாய்ப்பு கிடைச்சது. பிறகு ராதிகா மேடத்தோட  ‘ராடன்’ நிறுவனம் தெலுங்குல தயாரிச்ச ‘சூடாவனி உந்தி’ தொடருக்கு எழுதினேன். என் ஒர்க்கிங் ஸ்டைல் மேடத்துக்கு பிடிச்சுப் போச்சு. ‘ராடனோ’ட  தென்னிந்திய மொழிகளுக்கான கிரியேட்டிவ் ஹெட் ஆக என்னை நியமிச்சாங்க.

ஒரே நேரத்துல நாலு மொழிகள்ல ஆறு சீரியல்கள்னு பரபரப்பா வேலை பார்த்தது இனிமையான அனுபவம். ‘ராடன்’ல வெவ்வேறு காலகட்டங்கள்ல  இருந்திருக்கேன். ‘செல்வி’, ‘அரசி’, ‘செல்லமே’, ‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘சிவசங்கரி’, ‘சின்னபாப்பா பெரிய பாப்பா’னு பல பேசப்பட்ட சீரியல்கள்  கிரியேட்டிவ் ஹெட்டா நான் இருந்தப்ப வந்ததுதான். அங்க இருந்தப்ப சீரியல் தவிர ‘தங்க வேட்டை’, ‘திருவாளர் திருமதி’ மாதிரியான ரியாலிட்டி  ஷோக்களையும், வெளிநாட்டில் திரையுலக நட்சத்திரங்களை வைச்சு ‘வணக்கம் லண்டன்’ மாதிரியான ஸ்டார் நைட் புரோக்ராம்ஸும் நடத்தினது  ஸ்வீட் மெமரீஸ்.

ராதிகா மேம், ரொம்ப பெர்ஃபெக்‌ஷன் பார்ப்பாங்க. 360 டிகிரில விஷயங்கள் தெரிஞ்சிருக்கணும்னு அடிக்கடி சொல்வாங்க...’’ என்று சொல்லும் சுபா  வெங்கட், இடையில் ‘பிரமீட் சாய்மீரா’, ஏக்தா கபூரின் ‘பாலாஜி டெலிஃபிலிம்ஸ்’, இந்தோனேஷியாவில் உள்ள ‘எம்.டி. என்டர்டெயின்மென்ட்’ என பல  நிறுவனங்களிலும் கிரியேட்டிவ் ஹெட் ஆக பணிபுரிந்திருக்கிறார். ‘‘பிரமிட்ல இருந்தப்ப ‘ரேகா ஐ.பி.எஸ்.’, ‘சூப்பர் சுந்தரி’, ‘சிம்ரன் திரை’, ‘சரிகமப’னு  சீரியல்களும், நிகழ்ச்சிகளும் எழுதினேன். எழுத்தாளர்கள் தாமிரா - இப்ப இவர் இயக்குநரும் கூட, பாஸ்கர் சக்தியை சின்னத்திரைக்கு நான் கூட்டிட்டு  வந்தேன்.

இதுல ஒரு சின்ன சந்தோஷம் இருக்கு...’’ என்று சொல்பவருக்கு இயக்குநராவதில் விருப்பமில்லை. ‘‘எழுத்து சார்ந்த வேலைகள்தான் எப்பவும் பிடிக்கும்.  அதனாலதான் கிரியேட்டிவ் ஹெட் தவிர ரைட்டரா மட்டும் இருக்கேன். மத்த ரைட்டர்ஸ் தங்களுக்குனு ஒரு குழுவை வைச்சிருப்பாங்க. என் டீம்ல  வசீகரன் ஒருத்தர் மட்டுமே. கிரியேட்டிவ் ஹெட் சவாலான வேலை. டைரக்‌ஷன் டீம், ஆர்ட்டிஸ்ட் டீம், அட்மின் டீம்னு எல்லாரையும்  ஒருங்கிணைக்கணும். சினிமாவுல எக்ஸிகியூடிவ் புரொடியூசர் மாதிரி. நிறைய சேனல்களோடு நேரடியா பேசும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும். அந்த வகைல  தொடர் தயாரிப்பாளர்களுக்கும் ரைட்டர்ஸுக்கும் முழுச் சுதந்திரம் கொடுக்கிற சேனல்னா அது சன் டிவிதான்.

நாம பேசறதை காது கொடுத்துக் கேட்பாங்க. எந்த தலையீடும் இருக்காது. புரொடியூசர்சும் சம்பாதிக்கணும்னு நினைப்பாங்க...’’ என்ற சுபா வெங்கட்,  இப்போது வெப் சீரிஸில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ‘‘புதுசா ஒரு மெகா தொடர்எழுதிட்டு இருக்கேன். அடுத்து எஸ்.பி.பி.சரண் தயாரிப்புல வெப்  சீரிஸ் ஒண்ணு. இது தவிர மதன் சார், ராவ் சார் பங்களிப்பு செய்கிற ‘விகடகவி’ டிஜிட்டல் பத்திரிகைக்கு எடிட்டரா இருக்கேன். இவ்வளவு  உற்சாகத்தோட நான் இயங்க என் கணவர் வெங்கட் கொடுக்கிற சுதந்திரம்தான் காரணம்!’’ நெகிழும் சுபாவின் கணவர் வெங்கட், சினிமாவில் எக்ஸி  கியூட்டிவ் புரொட்யூசராக இருந்து நடிகராகி இருப்பவர். மகன் சித்தார்த், நியூசிலாந்தில் பி.காம் படித்துவிட்டு இப்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக  தயாராகி வருகிறார்.

மை.பாரதிராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்