கோல்டன் ஐடியாக்கள்



செய்தி: ‘தங்கக் காசு வேண்டுமா..? அப்படியானால் உங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்!’ பள்ளிப்பட்டு அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சொந்த செலவில் புதுமை முயற்சி! - இதுபோல் வேறு எங்கெல்லாம் ஊக்கப் பரிசை மேற்கொள்ளலாம்? ரூம் போட்டு யோசித்ததில் இருந்து...

பயணங்கள் முடிவதில்லை

அரசு பஸ்களில் குறைந்தபட்ச பயணத்துக்கு 100 ரூபாய் நோட்டை நீட்டுவதால் கண்டக்டரின் பிபி எகிறி, ‘பீப்’ வார்த்தைகளை உதிர்க்கிறார். இதனால்  பயணிகளின் பிபி எகிறுகிறது. பேருந்தும் ரணகளமாகிறது. இதை சீராக்க சரியான சில்லறையுடன் கண்டக்டரைத் தேடி வந்து டிக்கெட்  வாங்குபவர்களில் ஒருவரை குலுக்கல் முறையில் நடத்துனரே தினமும் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கலாம்! தொல்லை இல்லாமல் கண்டக்டரும்  வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பார்த்தபடி பஸ்சில் பயணம் செய்யலாம்!

தங்கப் பதக்கம்

எடுத்துச் செல்லும் லன்ச் பாக்ஸை கழுவ மறந்து வீட்டில் மனைவியிடம் திட்டு வாங்கும் கணவர்களே அதிகம். இதனால் நாற்றமெடுக்கும் லன்ச்  பாக்ஸை கழுவி முடிப்பதற்குள் மனைவிகளுக்கு போதும் போதும் என்றாகிறது. இதிலிருந்து தப்பிக்க நாள்தோறும் டிபன் பாக்ஸை கழுவி எடுத்து  வரும் கணவருக்கு வருட முடிவில் தங்கப் பதக்கம் அணிவித்து மனைவி கவுரவிக்கலாம்! இந்த தங்கப் பதக்கத்தையும் கணவரின்  பணத்திலிருந்துதான் வாங்க வேண்டும்!

ஆயிரத்தில் ஒருவன்

‘போகும் இடம் வெகு தூரமில்லை...’ எனப் பாடி அழைத்தாலும் இன்முகத்தோடு ஆட்டோவை நிறுத்தி ஏற்றிக் கொள்ளும் ஓட்டுனர்கள் குறைவு.  அதிலும் மீட்டரை ஆன் செய்து, ‘இதற்கு மேல் ஒரு காசு கூட வேண்டாம்...’ என்று ஷாக் கொடுப்பவர்கள் குறைவோ குறைவு.

இப்படி ஒருவர்  அகப்பட்டால் அந்த ஓட்டுநருக்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ பட்டம் கொடுத்து பொற்காசு வழங்குவதற்கான ‘தங்க நிற’ டோக்கனை அந்தத் தொகுதி  எம்எல்ஏ வழங்கலாம். இப்படிச் செய்தால் எல்லா எலக்‌ஷனிலும் அவரே அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். மற்றபடி வழங்கிய டோக்கனுக்கு  பதிலாக எப்போது பொற்காசு கிடைக்கும் என ஆட்டோ ஓட்டுநரும் கேட்க மாட்டார்; மக்களும் வினவ மாட்டார்கள். எனவே எம்எல்ஏ கவலைப்பட  வேண்டியதில்லை!

படிக்காதவன்

‘எவ்வளவு ஃபீஸ் கட்டினாலும் வகுப்பில் எதையும் குழந்தைகளுக்கு கற்றுத் தராமல் வீட்டுப் பாடம் என்ற பெயரில் நம் தலையிலேயே  கட்டுகிறார்களே...’ என ‘அநியாயத்துக்கு’ பள்ளியை பெற்றோர்கள் திட்டுகிறார்கள்; சபிக்கிறார்கள். ஒருசிலர் வேண்டுமென்றே வீட்டுப் பாடத்தை  செய்யாமல் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, ‘நீங்களே கற்றுத் தாருங்கள்!’ என சவால் விடுகிறார்கள். இம்மாதிரி அவலங்களில் இருந்து  பள்ளி நிர்வாகம் தப்பிக்க, ‘எல்லா பாடங்களையும் போதித்து, வீட்டுப் பாடங்களை தவறில்லாமல் செய்து அனுப்பும் பெற்றோர்களை’ குலுக்கல்  முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தங்கக் காசு வழங்கி கவுரவிக்கலாம்!

காசேதான் கடவுளடா

வங்கிகளில் சேமிக்கும் பணத்தை செல்வந்தர்கள் ஆட்டைப் போட்டு விடுகிறார்கள்! இல்லையென்றால் அந்தக் கட்டணம், இந்தக் கட்டணம் என்று  வங்கிகளே லபக்கி விடுகின்றன. இதை சமாளிக்க டிபாசிட் செய்த பணத்திலிருந்து குறிப்பிட்ட சதவிகிதத்தை இழக்கும் வாடிக்கையாளர்களை பட்டியல்  எடுத்து அதிலிருந்து ஒருவரை மாதம் ஒருமுறை தேர்வு செய்து வங்கியே அவருக்கு தங்கக் காசை வழங்கலாம்! இதனால் தங்கள் பணம் பறிபோவது  குறித்து வாடிக்கையாளர்கள் முணுமுணுக்க மாட்டார்கள். வங்கிக்கும் நல்ல பெயர் கிடைக்கும்!

எஸ்.ராமன்