1990களின் காதலுக்கு தனி அடையாளம் இருக்கு!



‘‘காதல் ஒரு இன்ஃபினிட்டி. அதாவது முடிவிலி. அதை யாரும் வரையறுக்கவோ, ஓர் எல்லைக்குள் அடக்கவோ முடியாது. சங்ககால  இலக்கியங்களிலிருந்து எஸ்எம்எஸ் சீசன் வரை இன்னும் சொல்லித் தீராத ஒரே விஷயம் காதல்தான்.

திரும்பி இணையர்கிட்டே இருந்து பதில் கடிதம் வராவிட்டால் எவ்வளவு தவிச்சுப் போயிருக்கோம். டெலிவரிக்கு தபால்காரர் வரும் நேரத்தில், அவர்  வந்து தாண்டிப் போகும்வரை மூச்சு படபடத்து அடங்குமே! காய்ச்சலே வரும்! மழை பெய்கிற நாளை விட மழைக்குப் பிந்திய நாள்தானே  அருமையானது. அப்படியொரு இடத்தில் ‘96’ வந்திருக்கு. இதில் பார்க்கிறது என்னோட, உங்களோட, நம்மோட வாழ்க்கை. நமக்கே நமக்குன்னு வந்து  நிற்கிற காதலைப் பல சமயம் நாமே கண்டுபிடிக்கிறது இல்லை. அந்தக் காதலின் மாய வடிவத்தை என்னால் முடிந்த அளவுக்கு இதில் வெளிச்சமிட்டு  காட்டப் போறேன்...’’ காதல் லெக்சர் தருகிறார் புதுமுக இயக்குநர் ச.பிரேம்குமார். ஏற்கனவே ‘பசங்க’ளில் ஆரம்பித்து சிறந்த ஒளிப்பதிவாளராக வலம்  வருகிறவர்.

தலைப்பே ‘96’. அது என்ன?

+2வில் எந்த வருஷ பேட்ச்னு கேட்போம் இல்லையா. அதுதான். இது ‘96’ பேட்ச். இப்பவே இது பள்ளிக்காதல் சம்பந்தப்பட்டதுன்னு தெரிஞ்சிடும்.  அதற்குப் பின்னான அடுத்த விளைவு... பிறகான வாழ்க்கையில் எப்படியெல்லாம் பாதிச்சிருக்கு என்பதுதான் ‘96’ன் மெல்லிய கதைச்சுருக்கம். அப்ப  காதல் ரொம்பவும் வெளிப்படையாக இருக்காது. அடுத்த கட்டத்திற்கு போறது ஆகப் பெரிய காரியமா இருக்கும். பொத்தி வைச்சு... பொத்தி வைச்சு  பாதுகாப்போம். எல்லோருக்கும் ஆசையாகவே இருக்கும்.

99% அது நடக்காது. அந்த காதல், நினைவில் தங்கிப் போறதுக்கே அமைஞ்ச மாதிரியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு காதல், நடக்காமல் போனதற்குக்  காரணம் என்னன்னு ரொம்ப நாளைக்குப் பிறகு தெரிய வந்தால் எப்படியிருக்கும்! அந்தக் காலகட்டத்தில் என்ன நடந்தது என்பதுதான் ‘96’.  தொண்ணூறுகளின் காதலுக்கு ஒரு தன்மையிருக்கு. உருகி, மருகி தவிச்சுப்போகிற கட்டம். அப்போது வந்த ‘இதயம்’ மாதிரி படங்களே சாட்சி. இப்ப  மாதிரி சேர்ந்து திரிகிற அனுபவம் முன்னே கிடைக்கலை.

அடுத்த லெவல் கொண்டு போவதற்குள் வருஷங்கள் ஓடிடும். இப்ப அந்த பிரச்சினை இல்லை. இரண்டு நொடி பரிதவிப்புதான், ஓகேவா? இல்லையா?  பதில் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்திடும். நமக்கு அப்படியில்லை. ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிட்டால் அழுது புலம்பி ஊரே சேர்ந்து  பிரச்னையானது உண்டு. 90ல் இருந்த காதலின் தாக்கம் இப்ப 2018ல் இருந்தது என்றால் அதன் வெளிப்பாடு எப்படியிருக்கும். அதுவும் ‘96’.

விஜய் சேதுபதி இதில் வந்தது எப்படி?

கதையை முன் வைச்சு எழுத ஒரு முகம் வேணுமில்லையா! சேது எனக்கு பத்து வருஷங்களாக நண்பன். அவர் கேரக்டர் ரோல் செய்ய ஆரம்பிச்ச  நாட்களிலிருந்து அதே அலைவரிசையில் இருக்கோம். அவரது stardom காரணமில்ல. அவரே மிகச் சிறந்த நடிகர் என்பதுதான் காரணம். அவர்கிட்ட ‘ஒரு கதை சொல்லலாமா...’னு கேட்டேன். கேட்டதும் அவர் கண்களில் ஒளி தெரிந்தது. ‘பிரேம், எப்படிடா இந்தக் கதை கேட்கிறதை  தட்டிக்கழிக்கிறதுன்னு நினைச்சேன். ஏன்னா விஷுவல் ப்யூட்டிக்கு ஒரு கதை சொல்லியிருப்பீங்க அல்லது ஒரு படத்தை காப்பி பண்ணி அப்படி இப்படி  மாத்தி ஒரு கதை பண்ணியிருப்பீங்கன்னு நினைச்சேன்.

ஆனால், ரொம்ப நல்லாயிருக்கு’னு சொல்லிட்டு போனவர் விடிகாலை நாலு மணிக்கு அவர் மனைவியை எழுப்பி கதை சொல்லியிருக்கார்.  அவங்களும் கூப்பிட்டுப்  பேசினாங்க. ஷூட்டிங் போன இடத்தில் அந்த டைரக்டர்கிட்டே பாராட்டியிருக்கார். அவங்களும் பேசினாங்க. ‘இந்தக் கதையை  ஏதாவது நல்ல டைரக்டர்கிட்டே கொடுக்கிறேன். பண்ணுறீங்களா...’னு கேட்டேன். ‘ஏன் இன்னொருத்தர்கிட்டே கொடுக்கிறீங்க? நீங்க செய்தால்  என்ன...’னு கேட்க, எனக்கு ஷாக். அதுவரைக்கும் டைரக்டராக நினைச்சது கிடையாது. அவருக்கு இவ்வளவு பிடிச்சுப்போன கதைக்கு நாம் உயிர்  கொடுக்க முடியும்னு தைரியம் வந்திருச்சு.

த்ரிஷா..?

‘மௌனம் பேசியதே’, ‘கிரீடம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மாதிரியான த்ரிஷாவின் சில படங்களை விரும்பியிருக்கேன். கேமராமேனாக அவங்க  கூட படம் பண்ணவில்லை. ஆனாலும் என் தயாரிப்பாளர் நந்தகோபால் அவர்களுக்கு த்ரிஷாவின் பரிச்சயம் இருக்க, அவரோடு பேசினேன். ஒரு நாளில் சந்தித்துப் பேச முடிவாக, எனக்கு அவ்வளவு பதட்டம். இந்தியாவின் பல மொழிகளில் நடித்தவர்.

பிரபல இயக்குநர்கள், நடிகர்களின் படங்களில் பிரதானமாக இருந்தவர். ‘கதை சொல்ல 20 நிமிஷம் போதுமா...’னு த்ரிஷா கேட்டார். ‘இரண்டு மணி  நேரம் கிடைத்தால் கதையை முழுக்கச் சொல்லிட முடியும். அதனால் உங்க சந்தேகங்களை சரி பண்ணிக்கலாம்...’னு சொன்னேன். பிறகான சந்திப்பில்  எந்த இடையூறும் இல்லாமல் கதை கேட்டார். அவரின் உயரத்திற்கான வேர் எங்கே இருக்கிறது என்று புரிந்தது. ஆடாமல், அசையாமல் கவனித்து  கேட்ட தன்மை ஆச்சர்யம்.

விஜய் சேதுபதி - த்ரிஷா காம்பி னேஷன்...

படத்தில் த்ரிஷா தைரியமானவங்க. சேது கூச்ச சுபாவம். கொஞ்சம் பழமையில் ஊறியவர். த்ரிஷாவுக்கு அன்றைக்குச் செய்யப்போகிற காட்சிகளை  சொல்லிட்டால் போதும், தடதடன்னு பிசகாமல் வந்து ஸ்பாட்டில் பின்னி எடுப்பாங்க. ஏதோ ஒரு கரெக்‌ஷன், லைட் பிரச்சினைன்னு அடுத்த டேக்  போனாலும் அவங்க நடிப்பு பிசகாது. சேதுபதி, த்ரிஷா இரண்டு பேரும் பெர்ஃபார்ம் பண்ணினால்தான் இந்தப் படம். இல்லாவிட்டால் ஒண்ணுமே  இல்லை.

அவங்க இரண்டு பேரின் நடிப்புலதான் இந்தப் படம் இருக்குன்னு கௌரவப்படுத்தலாம். அப்படியொரு இடத்தில் இருவரும் நின்னு காட்டியிருக்காங்க.  படத்தில் அவங்க இரண்டுபேருக்கும் எதிர்மறையான கேரக்டர்கள். ரசிகர்களுக்கு ட்ரீட்தான். என் அசோஸியேட் கேமிராமேன்கள் மகேந்திரன் ஜெயராஜ்,  சண்முகசுந்தரம் இரண்டு பேரும் ‘சார்... நீங்க முதல்ல டைரக்ட் பண்ற படத்தை நாங்கதான் ஒளிப்பதிவு செய்வோம்...’னு உரிமையாகச் சொல்வாங்க.  அந்த உரிமையை அவங்ககிட்டே கொடுத்திட்டேன்.

இசை கோவிந்த் வஸந்தா. முப்பது வயசுதான். பெரிய ஆள். படத்தை வாங்கி வெளியிடும் லலித்குமாருக்கு நன்றி. அந்தமானில் ஆரம்பித்து கல்கத்தா,  ராஜஸ்தான் சென்று ஹிமாச்சல் வரைக்கும் படம் பிடித்திருக்கிற சேதுவின் அறிமுகப் பாடல் அழகு. இன்னும் அழகிய வண்ணங்கள் காதலில்  கொட்டிக்கிடக்கு. ஓவியனா இருந்திருந்தா, தூரிகையை எடுத்திருப்பேன். இசைக்கலைஞனா இருந்தா வாசிச்சுக் காட்டியிருப்பேன். சினிமாக்காரனாக  இருப்பதால் படம் பிடிக்கிறேன்!

நா.கதிர்வேலன்