கவிதை வனம்



டீடைம்

மண்புழு
மிருது கொண்ட
சிறிய விரல்கள்
தந்தையின்
வெறுங்கையை
பற்றியிருப்பது
நோயிலிருந்து
மீண்டவனின்
புன்னகையாய்
இருக்கின்றது
மீச்சிறு இடைவெளிக்குப்பின்
நிகழும் சித்திரமுறிவாய்
கஞ்சிராவை
தப்புக்குச்சிகளாலுரசி
இசைத்தலைத்
தொடருகிறாள் பெண்
நீண்ட சவுக்கை
சுண்டிச் சுழற்றுகிறார்
காலில் சலங்கை
பூட்டிய பேதையின் தந்தை
வாழ்வும் தண்டனையுமாய்
ஒரு குடும்பம்
வீதியில் நின்று நகர்கிறது
தாளம் தப்பாமல்
தசை கிழிந்து அந்தியை
மேலும் சிவப்பாக்குகிறது
ஒரு தேநீர் பருக
இதைவிடச்சிறந்த
தருணமேது.

- நிலா கண்ணன்

குருவி

இருக்கும் வரை
அரிசி போட்ட‌
ஆத்தாவின்
கருணை காண‌
தினம் தினம்
திண்ணைக்கு
வந்து வந்து
ஏமாந்து போகிறது
ஓர் ஊர்க்குருவி
அவள் ப‌றந்த
சேதி அறியாமல்.

- அ.வேளாங்கண்ணி