விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 56

பெரும்படையுடன் புறப்பட்ட மாலிக்காபூர், தென்னாட்டின் அரசரான தேவகிரியாதவர், துவார சமுத்திரத்து ஹொய்சாளர், பாண்டிய நாடு... என சகலத்தையும் கடந்து ராமேஸ்வரம் வரை வந்தார்... ஏராளமான செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றார்...இப்படி பதிவு செய்திருக்கும் பன்மொழிப் புலவரான கா.அப்பாத்துரையார், இதை எல்லாம் இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களும் பதிவு செய்திருப்பதை குறிப்பிட்டிருக்கிறார்...இதையெல்லாம் தன் நினைவு சேகரத்தின் அடுக்கில் இருந்து எடுத்து சரசரவென ரிவிஷன் செய்த கிருஷ்ணனின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. ஏதோ ஓர் உண்மையை நெருங்கி விட்டதுபோலவும் அது நழுவி நழுவி பயணப்படுவது போலவும் இருந்தது. வெகு லாவகமாக வலை வீசி மீனைப் பிடிக்காவிட்டால் ஒருபோதும் நெருங்கிவிட்ட உண்மையை தரிசிக்க முடியாது.

இந்த முடிவுக்கு வந்ததுமே மாலிக்காபூர் குறித்து தன் நினைவுக்கு வந்த பகுதியிலிருந்தே அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தான். முத்துக் குளித்து முத்தெடுக்க முற்பட்டான். ஏராளமான செல்வங்கள்... ஆம். மாலிக்காபூர் கொள்ளையடித்தவை அதிகம். ஒரேயொரு கோயிலிலிருந்து 612 யானைகள், 96 ஆயிரம் மணங்கு பொன், 20 ஆயிரம் குதிரைகள்... இந்த யானைகள் மற்றும் குதிரைகளின் மீது ஏற்றிச் செல்லப்பட்ட முத்து அணி மணிப் பெட்டிகளின் தொகை பல்லாயிரம் இருக்கும்...சட்டென்று கிருஷ்ணனின் நடை தடைப்பட்டது.‘‘ம்...’’ பின்னால் வந்த மாஸ்டரின் ஆள் தள்ளினான். யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக குனிந்து தன் காலை சரிசெய்வதுபோல் சமாளித்துவிட்டு மீண்டும் சுரங்கத்தில் நடக்கத் தொடங்கினான்.

இந்த இடைப்பட்ட நொடிகளில், ஐஸ்வர்யா உஷாரானாள். க்ருஷ் எதையோ கண்டுபிடித்திருக்கிறான்... இறுக்கம் விலகியது. ரிலாக்ஸாக நடக்க ஆரம்பித்தாள். கூடவே அப்படி எந்த மர்மத்தை க்ருஷ் விலக்கியிருப்பான் என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கான பதிலைத்தான் கிருஷ்ணன் தேடிக் கொண்டிருந்தான். முத்தெடுப்பதில் மும்முரமானான். ஒரு கோயில்... ஒரேயொரு கோயிலில் மாலிக்காபூர் கொள்ளையடித்த செல்வங்கள் இவை என வரலாற்றாசிரியர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அந்தக் கோயில் எது? மூச்சை அடக்கி இன்னும் இன்னும் மூழ்கினான். முத்து தட்டுப்பட்டது.

ஸ்ரீரங்கம் கோயில்!
மூச்சு முட்டி மைக்ரோநொடியில் வெளியேற முற்பட்ட சுவாசத்தை தம் கட்டி உள்ளுக்குள் அடக்கினான். அமீபா அளவுக்குக் கூட தங்களை அழைத்துச் செல்லும் மாஸ்டருக்கும் அவரது அடியாட்களுக்கும் சந்தேகம் வந்துவிடக் கூடாது. இதுவரை இருந்த நிதானம் முக்கியமில்லை. ரகசியம் வெளிப்படவிருக்கும் இந்த கடைசி விநாடியில்தான் முன் எப்போதையும்விட எச்சரிக்கையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். எமோஷனல் இன்டெலிஜன்ஸ் அதுதான். அடங்கு மனமே அடங்கு... ஆம். ஸ்ரீரங்கம் கோயிலேதான். இதுகுறித்து தமிழில் கூட ஒரு நாவல் வந்திருக்கிறதே...ஆழ்கடலில் மின்னல் அடித்தது.

யெஸ்... எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை தனது ஒரிஜினல் பெயரான ஸ்ரீவேணுகோபாலன் என்ற நாமத்தில் ‘திருவரங்கன் உலா’ என்ற சரித்திர நாவலை எழுதியிருக்கிறார். அந்த நாவலின் களம் இதுதான்...இல்லை. இன்னமும் பூரணமாகவில்லை. ஏதோ குறைகிறது. தென்படுவது முத்துதான். ஆனால், கையில் எடுப்பது முத்தல்ல. என்ன செய்யலாம்...‘திருவரங்கன் உலா’ நாவல் வெறும் படையெடுப்பு, கொள்ளை பற்றி மட்டும் குறிப்பிடவில்லையே... உலா... கரெக்ட். ரங்கநாதர் விக்கிரகத்தின் பயணம்...சுண்டி விட்டதுபோல் உடம்பிலிருந்த ஒவ்வொரு செல்லும் அதிர்ந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் பொக்கிஷங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டால் கூட பரவாயில்லை. ரங்கநாதரின் விக்கிரகம் காப்பாற்றப்பட வேண்டும் என மக்கள் மெனக்கெட்டிருக்கிறார்கள்.

தங்கள் உடல், பொருள், ஆவி என சகலத்தையும் இதற்காக அர்ப்பணித்திருக்கிறார்கள். மாலிக்காபூரின் படைகளுக்கு தெரியாதபடி ரகசியமாக அரங்கரை எடுத்துச் சென்று பாதுகாத்திருக்கிறார்கள்... இதுதான் ‘திருவரங்கன் உலா’ வரலாற்று நாவலின் மையம். சர்வநிச்சயமாக இது முழுக்க முழுக்க எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை என்கிற ஸ்ரீவேணுகோபாலனின் கற்பனை அல்ல. சரித்திர நிகழ்வு. இதுகுறித்து ‘South India and her Mohammadan Invaders’ என்ற நூலில் இருக்கும் ‘The Sack of Srirangam’ (ஸ்ரீரங்கம் கொள்ளை) என்ற பகுதி விரிவாகவே விளக்குகிறது. தில்லி சுல்தானியர்களின் தென்னிந்திய படையெடுப்பால் ரங்கம் பட்ட பாட்டையும், திருவரங்கனின் விக்கிரகத்துக்கு ஏற்பட்ட தொல்லைகளையும் இப்புத்தகத்தில் டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் பதிவு செய்திருக்கிறார்.

இந்த வரலாற்றுக்கு வலு சேர்க்கிறது 14ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ‘மதுரா விஜயம்’ என்னும் நூல். இந்தப் பிரதியின் ஓலைச்சுவடியை 1916ம் ஆண்டில் திருவனந்தபுரம் ‘வடமொழி மான்யுஸ்க்ரிப்ட்’ அலுவலகத்தில் பேராசிரியர் திருவேங்கடாச்சாரி பார்த்திருக்கிறார். கிரந்த எழுத்தில் எழுதப்பட்டிருந்த அந்த ஏட்டை பூச்சி அரித்து 10 பக்கங்கள் (ஓலைகள்) மறைந்துவிட்டன. எஞ்சியதில் நிறைய பிழைகள். பல செய்யுள்கள் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் இருந்த ‘மதுரா விஜயம்’ நூலிலுள்ள ஏடுகளை ஆராய்ந்து மொழிபெயர்க்கும்படி பேராசிரியர் திருவேங்கடாச்சாரியை ஊக்குவித்தவர் அப்போது திருவனந்தபுரம் சமஸ்தான திவானாக இருந்த சர்.சி.பி.ராமஸ்வாமி அய்யர்.

அதன்படியே ஏட்டை பிரதி எடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் பேராசிரியர் திருவேங்கடாச்சாரி. இந்த ஆங்கில மொழியாக்கத்தை 1957ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் வெளியிட்டது...ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய ‘திருவரங்கன் உலா’ மற்றும் இதன் தொடர்ச்சியான ‘மதுரா விஜயம்’ ஆகிய இரு சரித்திரத் தொடர்களுக்கும் ‘South India and her Mohammadan Invaders’ மற்றும் ‘மதுரா விஜயம்’ ஆகிய நூல்கள்தான் அடித்தளம். மனிதகுலம் தோன்றியது முதல் ஒவ்வொரு உயிருக்கும் அவரவர் உள்ளுணர்வுகள் வழிகாட்டியபடியே இருக்கின்றன. வரும் அபாயங்களை முன்கூட்டியே எச்சரிக்கின்றன.

உள்ளுணர்வின் குரலை கேட்பவன் வாழ்க்கைக் கடலில் மூழ்காமல் நீந்திக் கரையேறுகிறான். அந்தவகையில் இப்போது தனது உள்ளுணர்வு நினைவின் அடுக்கில் புதையுண்டிருந்த இந்த விவரங்களை எல்லாம் வெளிக் கொண்டு வந்திருக்கிறது. ஏன்? ஒருவேளை ‘விஜயனின் வில்’லுக்கும் இதற்கும் தொடர்பிருக்கிறதா..? அதனால்தான் ஸ்ரீரங்கத்தையே சுற்றிச் சுற்றி வருகிறோமா..? கிருஷ்ணனின் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. அதற்கேற்பவே அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்தேறின.

(தொடரும்)

ஓவியம் : ஸ்யாம்