எளிமையான வாழ்க்கையின் சுவாரஸ்யமான பக்கங்கள்...‘Tolet’ பயணத்தை விவரிக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன்

தமிழ் சினிமாவிற்கு சர்வதேச அடையாளங்கள் வாங்கித்தருவதில் இது ஒளிப்பதிவாளர் செழியன் முறை.  அவர் இயக்கிய ‘டூலெட்’ கொல்கத்தா திரைப்பட விழாவில் இந்தியாவின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. கிடைத்த கொண்டாட்டமான வரவேற்பு அவரை மேலும் மலர்த்தியிருக்கிறது. இசை ஆர்வலராகவும், உலக சினிமாவை துல்லியமாக அறிமுகப்படுத்தியவராகவும் அவர் கைகள் ரசனையைப் பற்றிக்கொள்ள எப்பொழுதும் தயாராக இருப்பவை. அவரிடம் பேசுவது எப்போதும் அனுபவம்.

ஒளிப்பதிவாளரின் சுவாரஸ்யம் எதிலிருந்து தொடங்குகிறது?
திரைக்கதையை காட்சியாக மாற்றுவதுதான் ஒரு படத்தின் ஆக்கத்தில் இருக்கும் மிகவும் சந்தோஷமான பகுதி. எனவே ஒளிப்பதிவாளராக எனது பணியை மிகவும் விரும்பிச் செய்கிறேன். பத்து படங்கள் ஒளிப்பதிவு செய்தபிறகுதான் ஒளியின் சூட்சுமமே புரிகிறது. ஒரு காட்சியில் நாம் பயன்படுத்தும் ஒளியின் அளவு கொஞ்சம் கூடினாலும் காட்சியின் தன்மை மாறிவிடுகிறது.

ஒரு காட்சியை எடுப்பதற்கு, அதற்கு ஒளியமைப்பதற்கு இருபதுக்கு மேற்பட்ட வழிகள் இருக்கின்றன. இந்த இருபது வழியையும் ஒவ்வொன்றாக முயற்சித்துப் பார்த்து கடைசியில் சரியானதைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு சுவாரஸ்யமும் இல்லை. ஒரு காட்சியை எடுப்பதற்கான சிறந்த வழி எது என்பதை பார்த்தவுடன் கண்டுபிடிக்க வேண்டும். நாடியைப் பிடித்து உங்கள் உடலைப் பற்றி சொல்வதைப் போல ஒரு நுட்பமான பயிற்சி இது. அந்தப் பயிற்சியை முதல் படத்திலிருந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன். இப்போதுதான் அதன் சூட்சுமம் புரிகிறது.

நீங்கள் ஒளிப்பதிவு செய்யும் படங்களின் படப்பிடிப்பு திட்டமிடுவதைவிட மிகக் குறைந்த நாட்களில் முடிந்துவிடுகிறது... எப்படி?
ஒளிப்பதிவில் நான் மினிமலிஸம் எனப்படும் மிகக் குறைந்த சாத்தியங்களில் எப்படி பணிபுரிவது என்றுதான் யோசிக்கிறேன். ‘மூன்று வார்த்தைகளில் சொல்வதை நான்கு வார்த்தைகளில் சொல்லாதீர்கள்...’ என்ற சுந்தர ராமசாமியின் கூற்றிலிருந்தும், லாரி பெக்கரின் கட்டடக்கலையிலிருந்தும்தான் இது வருகிறது. லாரி பெக்கரின் கட்டட எளிமை காந்தியிடம் இருந்து வருகிறது. ஒரு கட்டடத்திற்குள் சூரிய வெளிச்சம் இயல்பாகவே இருக்க வேண்டும்.

ஓர் இயல்பான வெளிச்சம் டிஜிட்டல் டெக்னாலஜியில் ஒரு படத்தை எடுக்கப் போதுமானது. எனவே ஒளியமைப்பிற்காக நான் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. கண்ணில் பார்த்தவுடனேயே காட்சிகள் கட்டம் கட்டமாகப் பிரிந்துவிடும். இயக்குநர் காட்சியைச் சொன்னதுமே ரெடி சொல்லிவிடுவேன். அவர்கள் ஒத்திகை பார்த்து நடிகர்கள் தயராவதற்குள் ஒளியமைப்பு தயாராகிவிடும்.

நம் சினிமாவிலிருக்கும் மிகையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அந்த மிகை தரும் சுவாரஸ்யம்தான் கமர்ஷியல் சினிமாவின் அடிப்படை. கதையில் மிகை, நடிப்பில் மிகை, ஒப்பனையில் மிகை, வண்ணத்தில் மிகை, ஒலியில் மிகை... இதனால்தான் ஒளிப்பதிவும் மிகையாக இருக்கிறது. சில இடங்களில் மிகை அழகாக இருக்கும்... கல்யாணப் பெண் மேக்கப் மாதிரி. வீட்டில் இருக்கும்போதும், அதே மேக்கப் என்றால் கஷ்டம்தான். நீங்கள் மொழியை மிகவும் நேசிப்பவராக இருந்தால் ஒரு கொச்சையான எழுத்தை வாசிக்கும்போது எப்படி உணர்வீர்கள்? அதுபோலத்தான் வண்ணத்தை, ஒளியை நீங்கள் நேசிப்பவராக இருந்தால் நம் படங்களையும் உணர்வீர்கள். ஒரு முறை பாலமகேந்திரா ‘இந்த டி.ஐ. வந்தாலும் வந்தாச்சு. கலர் கண்ணெல்லாம் கூசுதுப்பா. புல்லு இவ்வளவு பச்சையாவா இருக்கும்..?’ என்று கேட்டார்.

முதன் முதலில் சினிமாவில் வண்ணம் வந்தபோது கதாநாயகர்கள் சிவப்பு பேண்டும் மஞ்சள் சட்டையும் போட்டது மாதிரிதான் இதுவும். தொழில்நுட்பம் தருகிற வசதிகள் நம் கட்டுக்குள் இருக்க வேண்டும். கண்டுகொண்டேன் என்று திருமங்கையாழ்வார் சொன்னதன் பொருள் இப்போதுதான் புரிகிறது. என்றைக்கும் அதிரடியாக உங்களை வெளிப்படுத்திக் கொண்டதில்லை...கலையும் அதிரடியும் இயல்பிலேயே நேர் எதிரானவை. இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம். அதிரடியான ஓவியர் என்று யாரும் இருக்கிறார்களா? பொதுவாக கலைஞர்கள் யாரும் அதிரடியாக தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் சிலர் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதே இல்லை.

‘டூலெட்’ எப்படி வந்திருக்கு..?
அதை நீங்கதான் பாத்துட்டுச் சொல்லணும். தமிழ்ல இருக்கிற பல இயக்குநர்கள் ‘நான் முதல் படமா எடுக்கிறதுக்குன்னு வேற ஸ்கிரிப்ட் வச்சிருந்தேன். கமர்ஷியலுக்காக இப்படி எடு்த்தேன்’னு சொலறதைக் கேட்டிருக்கேன். அதையே நானும் சொல்லணுமா? நிறைய சர்வதேசப் படங்கள் பாக்குறோம். எளிமையாக அழகா, சொல்ல வர்ற விஷயத்தைத் தெளிவாக சொல்றாங்க. இது அவருக்குப் பிடிக்கணும் இவருக்குப் பிடிக்கணும்னு எந்த விஷயத்தையும் சேர்க்கிறது இல்லை. முதலில் எடுக்கிறவருக்குப் பிடிக்கணும். அதுதான் முக்கியம்.

தயாரிப்பாளருக்காகப் பாட்டு வச்சேன். காமெடி வச்சேன்னு இல்லாம கதைக்கு நேர்மையா என்ன வைக்கிறோம்... அதுதான் முக்கியம்னு நினைச்சு ஒரு படத்தை எடுத்தோம். அதுதான் ‘டூலெட்’.படத்தைப் பார்த்ததுக்குப் பிறகு நாம் பேச நிறைய விஷயம் இருக்கும்னு நம்புறேன். அதற்கு முன்னாடி இப்படி வந்திருக்கு, அப்படி வந்திருக்குன்னு சொல்ல கூச்சமா இருக்கு. ஓர் எளிமையான சினிமா. இந்தமாதிரி இண்டிபெண்டன்ட் முயற்சியை உலகத்தில் எல்லோரும் செய்து பார்த்திட்டாங்க.

இண்டிபெண்டன்ட் சினிமா..?
நிறுவனங்கள் சாராத சுதந்திரமான சினிமா. சின்ன வயசில கூட்டாஞ்சோறு ஆக்குற மாதிரி ஒரு சினிமா எடுக்கிறது. கதை சொல்லும் முறையில், மற்ற நுட்பங்களில் சர்வதேசத்தரம் இருக்கும். சமரசம் இருக்காது. வழக்கமான ஃபார்முலா இருக்காது. ஆனால், சுவாரஸ்மான சினிமா. சுவாரஸ்யம்கிறது பாட்டுல, சண்டையில, குரூப் டான்ஸில் மட்டும் இல்ல; இயல்பான வாழ்க்கையிலயும் இருக்குனு சொல்ற சினிமா.

இந்தப்படம் விருது வாங்கியது பற்றி?
இந்தியாவில் இன்றைக்கும் யதார்த்த சினிமாவை நேசிக்கிற அனைவருக்கும் இன்ஸ்பிரேஷன் சத்யஜித் ரேயும், ரித்வித் கட்டக்கும்தான். அவர்களின் இடத்தில் ‘டூலெட்’ சிறப்பு பெற்றதை பெருமையாகக் கருதுகிறேன். சிறந்த படமாக தேர்ந்தெடுத்த நடுவர்கள் மூவரும் வெளிநாட்டுக்காரர்கள். விருது வாங்கி மேடையிலிருந்து இறங்கியதும் மூன்று பேரும் சேர்ந்து கையெழுத்திட்டு ‘எளிமையான கதையை அதீதமான சினிமா உயரத்துக்கு எடுத்து சென்றுவிட்டீர்கள்’ என்று எழுதிய கடிதத்தைக் கொடுத்தார்கள்.

‘டூலெட்’டின் பங்கெடுப்பாளர்கள்?
படத்தைத் துவங்குமுன் பணமெல்லாம் செல்லாமல் போய்விட தயாரிப்பாளர் பின்வாங்கிவிட்டார். என்ன செய்வதென்று குழப்பத்தில் இருந்தபோது இதை நாமே எடுப்போம் என்று சொன்ன என் மனைவி பிரேமா இதன் தயாரிப்பாளர். என் உதவியாளர் சந்தோஷ், ஷீலா, சிறுவன் தருண் மூவரும் முக்கிய கதாபாத்திரங்கள். இந்தியாவின் முக்கியமான திரைப்பட ஆளுமை ஸ்ரீகர் பிரசாத் இந்தப் படத்தின் எடிட்டர். தபஸ் நாயக் இதன் ஒலி வடிவமைப்பாளர். மற்றும் என் நண்பர்கள் ‘உயிர் எழுத்து’ சுதிர் செந்தில், சிவக்குமார், சுப்பு, மணி, பாண்டியராஜன், சுருளி, ராஜபாண்டி, ராஜன், முகுந்தன், ரெஜின் என எங்கள் அணி உபரி வீரர்கள் சேர்ந்த ஒரு கபடி அணியை விடச் சிறியது.

- நா.கதிர்வேலன்