மீன லக்னம் குரு - கேது சேர்க்கை தரும் யோகங்கள்கிரகங்கள் தரும் யோகங்கள்

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் - 120


வேதங்களுக்குரிய குருவும், ஞானத்தேடலுக்குரிய கேதுவும் சேரும்போது இந்த உலக வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் இருப்பார்கள். விரததாரியாக இருந்து நிறைய விரதங்களை கேது இருக்கச் செய்வார். அடுத்தவருடைய சொத்துக்கு ஆசைப்படமாட்டார்கள். அநாவசியமாகவும் வாரி வழங்கிவிட மாட்டார்கள். குண்டு துளைக்காத கவசம்போல, பிரச்னைகளால் சோர்ந்து விடாதவர்கள் இவர்கள். எப்போதும் ஒரு தேடல், புதுமை என்று இருப்பார்கள். ஆழ்கடல் அலையாததைப்போல எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டார்கள். அதிமேதாவிகள் பேசினாலும் பேச்சின் தொடக்கத்தை வைத்தே, இதைத்தான் சொல்லப்போகிறார், இப்படித்தான் முடிப்பார் என்று யூகித்துச் சொல்வார்கள்.

மேலே சொன்னவை பொதுவான பலன்களாகும். ஆனால், ஒவ்வொரு ராசியிலும் லக்னாதிபதியான குருவும் கேதுவும் தனித்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா? மீன லக்னத்திலேயே, அதாவது ஒன்றாம் இடத்திலேயே குருவும் கேதுவும் சேர்ந்திருந்தால் மிக நேர்மையான மற்றும் துடுக்குத்தனமான கருத்தால் எளிதாக எதிரிகளை  சமாளிப்பார்கள். குடும்பத்தின் மீது தான் பாசமாக இருப்பதுபோல, தன் மீது அவர்களுக்கு பாசமும் அன்பும் இல்லையே என்று ஆதங்கப்படுவார்கள். கடுஞ்சொற்கள் பேசி இவர்களே இவர்களை பகையாளியாக சமூகத்தில் காட்டிக் கொள்வார்கள். சிறந்த ஆன்மிகவாதிகளாகவும் அலங்காரமான பேச்சு மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

பணத்தின் பின்னால் ஓட மாட்டார்கள். மனிதர்களை வகைவகையாகப் பிரித்துக்கொண்டு அவர்களுக்குத் தகுந்தமாதிரி உரையாடி அசத்துவார்கள். இரண்டாம் இடமான மேஷத்தில் குருவும் கேதுவும் நின்றால் இவர்களின் இயல்பே அறிவாற்றல் சேர்ப்பதில்தான் இருக்கும். நெருக்கடி நேரத்தில் மட்டும்தான் பணத்தைப்பற்றிய சிந்தனையே வரும். அபாரமான மன ஆற்றலைப் பெற்றவர்களாக இருப்பார்கள். சப்ஜெக்ட்டை மீறி யோசிப்பார்கள். உங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் மற்றவர்கள் திணறுவார்கள். நன்கு வாதிடக்கூடியவராக இருப்பார்கள். படித்து பட்டம் பெற்று வேலையில் அமர்ந்த பின்னரும் கூட தனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களை மறக்க மாட்டார்கள்.

மூன்றாம் இடமான ரிஷபத்தில் குருவும் கேதுவும் இருந்தால் தான் புடிச்ச முயலுக்கு மூணுகால் என்று பிடிவாதம் பிடிப்பவர்களாக இருப்பார்கள். கேள்விஞானம் அதிகமுள்ளவர்களாக இருப்பார்கள். சிறிய வயதிலேயே சித்தர்கள், கோயில்கள், மகான்கள் என்று தேடலோடு இருப்பார்கள். இளைய சகோதர, சகோதரிகள் மிகவும் அனுகூலமாக இருப்பார்கள். நிறைய நண்பர்கள் இருந்தாலும் யாரேனும் ஓரிருவரே நெருக்கமாக இருக்க முடியும். இவர்களுக்கு பொதுவாகவே காது பிரச்னை இருந்தபடி இருக்கும். அதனால் அவ்வப்போது மருத்துவரை சென்று சந்திப்பது நல்லது. உலகியல் இன்பங்களைத் தூண்டிவிட்டு அதன் உச்சத்திற்கு கொண்டு செல்லும்போதே கேது தலையிட்டு இதெல்லாம் ஒன்றுமில்லை என்று உணர்த்தும்.

முயற்சியைத் தவிர தெய்வத்தின் அருளும் வேண்டும் என்று பல இடங்களில் உணர்ந்திருப்பதாகக் கூறுவார்கள். நான்காம் இடமான மிதுனத்தில் குருவும் கேதுவும் இருந்தால் குருட்டு நம்பிக்கைகள் நிறைய இருக்கும். ‘எங்கம்மா சொன்னாங்க...’ என்று அவ்வப்போது தாயாரைக் குறித்து பேசியபடி இருப்பார்கள். இவர்களில் சிலருக்கு கண்களில் அவ்வப்போது வலி வந்து நீங்கியபடி இருக்கும். மருத்துவரிடம் காட்டுவது நல்லது. இது சுக ஸ்தானமாக இருப்பதால் மனதை சுகமாக இருக்க வைப்பார். மரபான விஷயங்களை ஒதுக்காமல் இப்போதைக்கு அதன் தேவை என்னவென்று யோசிப்பவராக இருப்பார். தாயாருக்கு சிலசமயம் உளவியல் சம்பந்தமான குழப்பங்கள் வந்துபோகும்.

ஐந்தாமிடமான கடகத்தில் குருவும் கேதுவும் நின்றிருந்தால், பூர்வீகச் சொத்து எடுபடாது. இவர்களிடம் தங்காது. தாமதமாக குழந்தை பாக்கியம் கிட்டும். எல்லாவற்றிலும் முன்னிலைப்படுத்த முயற்சி செய்வார்கள். கனவிலேயே பல விஷயங்களை சூட்சுமமாகத் தெரிந்து கொள்வார்கள். தவறான வழியை ஒருகாலும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். வாக்கு கொடுத்துவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் ஏதேனும் அசட்டுத்தனமான காரணங்களைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆறாம் இடமான சிம்மத்தில் குருவும் கேதுவும் இருந்தால் கடன் என்றாலே காத தூரம் ஓடுபவர்களாக இருப்பார்கள். விவாதம் செய்வது என்பது இவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல்போல இனிக்கும்.

எதிராளி எல்லா நல்ல விஷயத்தையும் மறந்துவிட்டு இதை மட்டுமே மனதில் வைத்திருப்பார். மர்ம ஸ்தானத்தில் நோய் வரும் வாய்ப்புண்டு. கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்னை வரும்போது மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தற்பெருமையாகக் கூட எல்லோரிடமும் தன்னிடமுள்ள சொத்துகளைக் குறித்தெல்லாம் பேசிக் கொண்டிருக்கக்கூடாது. வாழ்க்கை என்பதே நிலையாமைதான் என்பதில் மிகவும் தீர்மானமாக இருப்பார்கள். முதுகுத்தண்டுவடத்தில் சிறிய வலி வந்தால்கூட உடனே பார்த்துவிடுவது நல்லது. ஏழாம் இடமான கன்னியில் குருவும் கேதுவும் இருந்தால் திருமண விஷயத்தில் தோஷமில்லாது சுத்த ஜாதகமாகப் பார்த்துச் சேர்க்க வேண்டும். சிறியதாக ஏதேனும் குறையுள்ளவராக வாழ்க்கைத்துணைவர் இருந்தால்கூட நல்லதே.

கூட்டுத்தொழிலைச் செய்யும்போது எச்சரிக்கை உணர்வு அவசியம். திருமணத்திற்கும் நிச்சயதார்த்தத்திற்கும் இடைவெளி கொடுக்கக்கூடாது. பெரும்பாலும் இவர்கள் இந்த வாழ்க்கையைவிட ஆன்மிகமயமான வாழ்க்கையையே வாழ வேண்டுமென்று விரும்புவார்கள். அவ்வப்போது காடு, மலை என்றெல்லாம் சுற்றிவிட்டு வருவார்கள். கடுங்கோபம் கொள்ளுதலை இவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். எட்டாமிடமான துலா ராசியில் குருவும் கேதுவும் இடம் பெற்றிருந்தால் உடல்நிலையில் ஏதேனும் தொந்தரவு இருந்தபடியே இருக்கும். பணத்தை தண்ணீர் போன்று செலவழிப்பார்கள். எதையும் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சேமிப்பு குறித்த விழிப்புணர்வு இவர்களுக்கு மிகவும் முக்கியமாகும். ஒரு காரியத்தை தவம் செய்வதுபோல செய்து நடத்திக்கொள்வார்கள். சமூகப்புரட்சிக்காக ஆரம்ப நாட்களில் சிறைக்கெல்லாம் சென்று வருவார்கள்.

இவர்களில் சிலர் கோயில் ஓவியங்களை வரைவதில் நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். மந்திரதீட்சை பெற்றுக்கொண்டு ஜபிப்பார்கள். யாரையேனும் ஞானகுருவாக வரித்துக்கொண்டு வழிபடுவார்கள். கோயில், தலங்கள், புண்ணிய நதிகள், மகான்கள் என்று எப்போதும் ஈடுபாட்டோடு இருப்பார்கள். ஒன்பதாம் இடமான விருச்சிகத்தில் குருவும் கேதுவும் இருந்தால் திடீர் பயணம், கொஞ்சம் ஊதாரித்தனம் போன்றவை இருக்கும். காடு, மலை என்று தொடர்ந்து சஞ்சரித்தபடியே இருப்பார்கள். விருச்சிகத்தில் கேது உச்சமடைவதால் தான் சொல்வதுதான் சரியென்கிற உறுதிப்பாடு இருக்கும். இல்லற வாழ்க்கையில் எல்லா விஷயத்திற்கும் விவாதம் செய்துகொண்டே இருந்தால் நன்றாக இருக்காது. சிலசமயம் தந்தையை எதிர்த்து சில வேலைகளைச் செய்வார்கள். கேட்டால் தந்தையார் தன்னைப் புரிந்துகொள்ள முடியாது என்பார்கள்.

வாழ்வின் இரண்டாம் அத்தியாயம் எனப்படும் மத்திம வயதில் சந்நியாசியைப்போல் இருப்பார்கள். தனக்கென்று எதையுமே வைத்துக்கொள்ள மாட்டார்கள். பத்தாம் இடமான தனுசில் குருவும் கேதுவும் இடம் பெற்றிருந்தால் எப்போதும் ஒரு பிரபலமானவரோடு தன்னை இணைத்துப் பேசுவதில் மிகுந்த விருப்பமுண்டு. பப்ளிகேஷன்ஸ், வழக்கறிஞர், பத்திரிகை ஆசிரியராகவும் இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலோர் கெமிக்கல் இன்ஜினியராக வருவார்கள். தர்ம ஸ்தாபனங்கள், கோயில்கள் போன்றவற்றில் முக்கிய பொறுப்பில் அமர்வார்கள். சித்தா டாக்டர், உப்பு தயாரித்தல் போன்ற தொழில்களை மேற்கொள்வார்கள். கண்ணாடி, பீங்கான், எவர் சில்வர், ஐஸ் க்ரீம் என்று தொழில் தொடங்கி சாதிப்பார்கள்.

பதினோராம் இடமான மகர ராசியில் குருவும் கேதுவும் சேர்க்கை பெற்றால் மூத்த சகோதரரோடு இணக்கமாக இருக்க முடியாது. மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்குரிய இடத்தினை தேர்ந்தெடுத்து அதில் தீர்வு சொல்பவர்களாக இருப்பார்கள். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட போராடி முடிப்பார்கள். ஆன்மிகமாகட்டும், புதிர் கணக்குகளாகட்டும் எந்த ஒரு தத்துவமாகட்டும் உடனே அறிந்து கொள்ளும் ஆற்றலும், உதாரணங்களோடு ஒப்பிட்டு எளிமையாக்கிச் சொல்லும் பரந்த அறிவும் இருக்கும். அடுத்தவர்கள் தன்னை ஆலோசனை கேட்கத் தயங்கினாலும் தாங்களே முன் சென்று பேசி பிறரின் வருத்தங்களைக் கேட்டறிந்து தீர்வு சொல்வார்கள்.

பன்னிரண்டாம் இடமான கும்ப ராசியில் குருவும் கேதுவும் இருந்தால் மறுபிறவியே இல்லை என்று சொல்லலாம். மணிக்கணக்கில் பேசினாலும் அடிமனதை அவ்வளவு எளிதில் வெளிக்காட்டமாட்டார்கள். தன்னைப்பற்றிய பலவீனத்தை உள்ளத்தின் அடியில் குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள். கேதுவின் ஞானம் தந்த நிதானத்தால் எத்தனை சாதித்தாலும் நிலைகுலையாமல், அகங்காரமில்லாமல் இருப்பார்கள். இந்த அமைப்பு நேர்மையானவர்களாக இருக்க வைக்கும். பசியில் இருப்போனுக்கு எதற்கு தத்துவ உபதேசங்கள் என்று அன்னமிடுவார்கள். சொல்லிக்கொடுக்கிற சொல்லும், கட்டிக்கொடுக்கிற சோறும் கடைசி வரைக்கும் உதவாது என்ற கொள்கையில் திடமாக இருப்பார்கள்.

சமூகத்தில் நிலவும் சில வறட்டு நம்பிக்கைகளுக்கெல்லாம் எதிர்க்குரல் கொடுப்பார்கள். சில சமயம் உங்களின் அமைதியான நடத்தை, உங்களை அலட்சியவாதியாகக் காட்டும். ஆனால், அதேசமயம் தன்னுடைய கறாரான விஷயங்களை மற்றவர்களின் மீது திணிக்கும்போது எதிராளிகள் இவர்களைக் கொடுமையாளர்களாக நினைப்பார்கள். இதனால் இவர்களோடு யாரும் ஒத்துப்போகாத நிலை வரும். மன உளைச்சல் அதிகமாகும். எனவே, இவர்கள் எப்போதுமே மகான்களின் ஜீவசமாதியை தரிசிப்பது நல்லதாகும். எனவே, திருவண்ணாமலையிலேயே வெகுகாலம் வாழ்ந்து சித்தியடைந்த ஞானியான யோகிராம்சுரத்குமார் அவர்களின் ஜீவசமாதியை தரிசித்து வாருங்கள். திருவண்ணாமலை ரமணமகரிஷியின் ஆசிரமத்திற்கு சற்று தொலைவிலேயே இவரின் ஜீவசமாதி ஆலயம் அமைந்துள்ளது.

(கிரகங்கள் சுழலும்)

ஓவியம்: மணியம் செல்வன்