திருட்டுபயலே - 2



குங்குமம் விமர்சனக்குழு

பெரிய மனிதர்களின் பேச்சை ஒட்டுக்கேட்டு தகவல் சேகரிக்கும் போலீஸ் அதிகாரி, பாபி சிம்ஹா. முகநூலில் நுழைந்து பெண்களை தன் கட்டுக்குள் கொண்டு வரும் பிரசன்னா... இவர்களின் குரோதம், துரோகம், பழிவாங்குதலே ‘திருட்டுப்பயலே 2’.பாபி சிம்ஹாவின் பேச்சுக் குறிப்புகளை வைத்து அவரது மேலதிகாரி நிறைய ‘சாதித்து’க் கொள்கிறார். பாபியும் தன் பங்குக்கு ரகசியமாக சேர்க்கிறார். மறுபுறத்தில் பிரசன்னா தன் லீலைகளைத் தொடரும்போது பாபியின் மனைவி அமலாபாலும் லைனில் வர, விஷயம் விபரீதமாகிறது. அதையும் தெரிந்து கொள்கிறார் பாபி.

தன் குறிக்கோளில் பிடிவாதமாக இருக்கிறார் பிரசன்னா! இவர்களில், ஜெயித்தது யார் என்பதே பரபரப்பு க்ளைமேக்ஸ். அதிரடியாய் கொண்டு சேர்த்ததில் இயக்குநர் சுசி கணேசனுக்கு பெரும்பங்கு. இறுக்கமான தேகம், அலட்சியமாக, அதே நேரம் அடக்கமாக, பத்திரமாக பணம் சுருட்டுவது என சூது, சூழ்ச்சிகளுக்கு முற்றிலுமாக பொருந்துகிறார் பாபி. அதிகாரிகளுக்கு அடங்கிக்கொண்டு அவர்களின் குகைகளிலேயே ஆஜர் ஆகி கபளீகரம் செய்யும் இடங்களில் திகில் காட்டுகிறார்.  பத்து கோடியை ‘லபக்கு’வது எல்லாம் படத்தின் பவர்ப்ளே ஏரியா. போலீஸின் விறைப்பு, முறைப்பு காட்சிகளில் அவர் காட்டுவது பக்கா.

ஆனால், மனைவியே மாட்டிக்கொள்ளும் காட்சியில் அவர் முகத்தை ஒரே மாதிரி வைத்துக் கொள்ளும்போது தேசியவிருது நடிகரா என்று ஆச்சரியப்படுத்துகிறது. பிரசன்னா வசீகரம். பேசும் போதும், சரசத்திலும் கெட்டி. கொஞ்ச கொஞ்சமாக அமலாபாலை தளர்த்தி, அவரை தன் வழிக்கு வர வைக்கும் நிமிடங்களில் நடை, உடை, கடைக்கண் பார்வை, அளந்து பேசும் விதம் என ஆக்ரமிக்கிறார். இளஞ்சிரிப்பும் கொஞ்சும் இதழும் விழியுமாக ஆளை அசத்திப்போடுகிறார் அமலாபால். துள்ளும் இளமையில் அவர் காரைக்குடி வீட்டில் அறிமுகமாகும் காட்சியிலிருந்து, பாபியை சீண்டும்போதும், காதலில் அவருடன் உருகும் போதும் பொண்ணுக்கு இப்போ வரவர நடிப்பும் பிரைட்!

இறுதியில் பிரசன்னாவிற்கும், பாபிக்கும் இடையில் இருந்து துவளும் நெருக்கடி வேளையில் புகுந்து விளையாடியிருக்கிறார். அந்த குள்ள நரி மேலதிகாரி முத்துராமன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறார். ‘உன்னை என்றைக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என முதல் நிமிஷம் உறுதி அளிப்பதும், அடுத்த கணமே அயோக்கிய முகம் காட்டுவதுமாக அசல் காவாளித்தனம் காட்டும் காவல் அதிகாரியின் மனப்போக்கைப் பிரதிபலிக்கிறார். கொஞ்சம் தவறினாலும் தவறவிடக் கூடிய கதையை லாவகமாக கையாளுவதில் இயக்குநர் ஜெயிக்கிறார்.

செல்லத்துரையின் ஒளிப்பதிவு, ஓவிய நேர்த்தியின் உள்ளே நுழைகிறது. வித்யா சாகரின் ‘நீ பார்க்கும்...’ பாடல் சுகம். தொடர்ந்து பாபி, பிரசன்னாவின் சவால்கள் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. விறுவிறுப்பை ஆரம்பித்த அவர்களே குறைக்க முயற்சிக்கிறார்கள். விழித்துக் கொண்டு டைரக்டர் அதற்குப் பிறகு சமாளிக்கிறார். அடுத்தடுத்த டுவிஸ்ட்கள், முகநூலின் நவீன நிலவரம், வாழ்க்கைப்போக்கு... என மிகச் சில நிமிடங்களிலேயே தீப்பிடிக்கிறது திரைக்கதை. இன்னும் இறுக்கி நறுக்கியிருந்தால் வேற லெவல் படம்!