தற்கொலையைத் தூண்டுகிறதா ஸ்மார்ட்போன்?மனிதன் போனை கண்டுபிடித்து முதன் முதலில் ‘ஹலோ...’ சொன்னபோது தெரிந்திருக்காது, அவன் பேசியது எமனுடன் என்று...இந்த வரிகளை மடக்கி எழுதினால் கவிதை போலத் தோன்றும். அடடே எனப் பாராட்டவும் நினைப்போம். ஆனால், இதன்பின் உள்ள உண்மை மறுக்க முடியாதது. போன் நமக்கு வரம் என்றால் ஸ்மார்ட் போன் நமக்கு சாபம் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை சீரழிந்திருக்கிறது. கற்கால மனிதன் கல் ஆயுதங்களுடன் திரிந்தான். இன்றும் அன்றைய மக்கள் தொகையைவிட அதிகமான கல் ஆயுதங்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன.

இந்த கல் ஆயுதங்களுக்கு அடுத்தபடியாக மனித குலம் ஏதேனும் ஒரு பொருளை நேசிக்கிறது என்றால் அது அவரவர் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன்தான் என்கிறார்கள் நிபுணர்கள். ஸ்மார்ட் போனுக்கு அடிமையான ஒருவர் சராசரியாக ஒருநாளைக்கு 300 முறைக்கு மேல் தன் போனை எடுத்துப் பார்க்கிறாராம். ஸ்மார்ட்போன்களின் மூலமாக டீன் ஏஜினருக்கு ஏற்படும் மனஅழுத்த தற்கொலைகள் உலகை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றன. சென்னையைச் சேர்ந்த ஹைஸ்கூல் மாணவியான அம்ரதா, எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ளும் ஜாலி டீன்.

அப்படிப்பட்டவர் மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயற்சித்தார் என்பதை அவரது பெற்றோர், நண்பர்கள் என யாருமே நம்பவில்லை. ‘‘எனக்குள் மெல்ல சோகம் உருவாகி மனஅழுத்தமாக மாறியது எப்படி என இன்னுமே ஆச்சரியமாக இருக்கிறது...’’ எனத் தெளிவாகப் பேசுகிறார் அம்ரதா. தொடர்ச்சியான கவுன்சலிங் தெரபிகள் அவரது முகத்தில் சோகம் துடைத்து மலர்ச்சியைக் கொண்டு வந்திருக்கின்றன. தற்கொலை முயற்சிக்குக் காரணம் அம்ரதா, தான் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யும் மாடலிங் பெண்களின் உடல் போல தன் உடல் ஷேப்பாக இல்லையே என தாழ்வுணர்ச்சி கொண்டதுதான். இது அம்ரதாவின் கதை மட்டுமல்ல; உலகில் உள்ள ஜென் தலைமுறையினர் பலரும் ஏறத்தாழ இதே சூழலில்தான் தவிக்கிறார்கள்.

டிவி, வீடியோ கேம்ஸ் கடந்து ஃபேஸ்புக், ஸ்னாப்சாட்,  இன்ஸ்டாகிராம் ஆகியவை டீன் ஏஜ் இளைஞர்களின் மனதிலும் அறிவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. 2016ம் ஆண்டில் அமெரிக்காவில் மக்கள் சுகாதார சேவைத்துறை (HHS) செய்த ஆய்வில், 13 சதவீத டீன் ஏஜினர் மனஅழுத்தப் பிரச்னையில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2010ம் ஆண்டில் இதன் அளவு 8 சதவீதம். அதிலும் 10 - 19 வயதுக்கு இடைப்பட்டவர்களின் தற்கொலை அளவும் ஷார்ப்பாக அதிகரித்து வருவது ஃப்யூச்சர் பயங்கரம்.

‘‘2010ம் ஆண்டுக்குப் பிறகு டிஜிட்டல் பொருட்களுடன் இளைஞர்கள் செலவழிக்கும் நேரம் அதிகரித்துள்ளது என்பதை மனஅழுத்தம், தற்கொலை ஆகியவற்றோடு இணைத்தால் மட்டுமே விளைவின் தீவிரம் உங்களுக்குப் புரியும்...’’ என தீர்க்கமாகப் பேசுகிறார் சாண்டியாகோ பல்கலைக்கழக பேராசிரியரான ஜீன் ட்வெங்கே. இவர் 2010 - 2015 வரையில் 5 லட்சம் இளைஞர்களிடம் செய்த சர்வேயில், மூன்று அல்லது நான்கு மணி நேரத்துக்கு அதிகமாக போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு 34 - 48 சதவீத அளவில் தற்கொலை எண்ணங்கள் ஊற்றெடுப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்.

‘‘போனில் மெசேஜ், சாட்டிங், பேச்சு, வீடியோ என ஒரே நேரத்தில் ஹைப்பர் ஆக்டிவிட்டியில் மூழ்குபவர்களுக்கு மூளையில் உள்ள உணர்வுகள் மற்றும் முடிவெடுக்கும் திறன் கொண்ட Anterior Cingulate Cortex (ACC) மெல்ல மழுங்கிப் போவதோடு, சோஷியல் தளங்கள் மூளையில் டோபமைன் சுரப்பை அபரிமிதமாக்குவதால் ஸ்மார்ட்போன் கைவிடமுடியாத போதையாகிறது...’’ என எச்சரிக்கிறார் ஜீன் ட்வெங்கே. ‘சின்ன வயசுலயே என் பையன் (அ) பேரன் போனில் கேம் விளையாடுறான்’, ‘போன் பண்ணுறான்’ எனப் பெருமைப்படும் பெருசுகளும், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் பின்னாளில் சமூகத்துடன் ஒன்ற முடியாமல் தனிமைப்பட்டுப் போவதை உணர்வதே இல்லை.

‘‘இளைஞர்களின் உணர்வு சார்ந்த விஷயங்கள் 20 வயதில் முழுமை பெற்றிருக்காது. அப்போது திடீரென அறிமுகமாகும் டிஜிட்டல் பொருட்களின் ஈர்ப்பு அவர்களின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது...’’ என்கிறார் கான்சாஸ் பல்கலையின் உளவியல் பேராசிரியர் பால் ஆட்செலி. மாணவர்கள் மீதான ஸ்மார்ட்போன்களின் பாதிப்பைக் கண்டு உஷாரான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், கேம்பஸ்களில் போன்களைப் பயன்படுத்தக் கூடாது என கண்டிப்பு காட்டத் தொடங்கிஉள்ளனர். ‘‘மனிதர்களின் பரிணாம வளர்ச்சி என்பது பேசுவது, தொடுவது உள்ளிட்டவற்றின் மூலமே சாத்தியமானது என்பதை மறந்துவிடக் கூடாது...’’ என அலர்ட்டாய் எச்சரிக்கிறார் பிட்ஸ்பர்க் பல்கலையின் இயக்கு நரான பிரையன் பிரைமேக்.

அம்ரதா மனஅழுத்தப் பிரச்னையில் சிக்கி, தற்கொலைக்கு முயற்சி செய்தது அவரது பள்ளியில் இன்று கவர்ஸ்டோரி ஆகிவிட்டது. பிரச்னை குறித்து அவரது தோழிகள் தீவிரமாக விவாதிப்பது, மனஅழுத்தம் அனைவருக்குமானதாக மாறிவிட்டதன் அறிகுறியே. ‘‘நான் பிரச்னையிலிருந்து சரியான டைமில் கவுன்சிலிங் மூலம் மீண்டுவிட்டேன் என்றாலும், அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பது இல்லை. இது குறித்து நாம் விரிவாக விவாதிக்க
வேண்டிய நேரம் இதுவே...’’ உறுதியான குரலில் சொல்கிறார் அம்ரதா.

மகிழ்ச்சி நிச்சயம்!
*பெட்ரூமில் கணினிகள், ஸ்மார்ட்போன்களுக்கு தடா சொல்வது இன்ஸோம்னியா போன்ற பிரச்னைகளுக்கு குட்பை சொல்லும். ஸ்மார்ட் போன்களை சிறுவர்களுக்குக் கொடுக்கும்போது, ஆபாச தளங்கள், ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை பார்க்கமுடியாதவாறு செட் செய்து கொடுக்கலாம். போனில் செலவு செய்யும் நேரத்தைக் குறைப்பதோடு அவர்களை கண்காணிப்பதும் அவசியம்.
*வீட்டில் டைனிங் டேபிளில் ஸ்மார்ட் போன்களை குட்டீஸ்கள் பயன்படுத்தக் கூடாது என்று ரூல்ஸ் கொண்டு வந்தால், வயிறும் மனமும் உற்சாகத்தாலும் மகிழ்ச்சியாலும் நிறையும். அட்வைஸோடு பெற்றோரும் இதே விதிகளை ஃபாலோ செய்தால் அபார பயன்கள் தரும்.
*பேசும் வசதி மட்டும் கொண்ட சிம்பிள் போனை மனமுவந்து சிறுவர்களுக்குத் தரலாம். இதனால் போன்களிலேயே கண்களை மேயவிடாமல் மற்ற விஷயங்களை நம் செல்லங்கள் கவனிப்பார்கள்.

- ச.அன்பரசு