IITஅறிந்த இடம் அறியாத விஷயம்

காலை 10 மணி. சென்னை ஐஐடியின் கிண்டி நுழைவு வாயில். செக்யூரிட்டியிடம் வண்டிக்கான அனுமதிச்சீட்டுக்காக நின்றோம். உள்ளே செல்ல பேருந்துக்காக ஒரு கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.‘‘எங்கயும் திரும்பாம நேரா போங்க. கஜேந்திரா சர்க்கிள் வரும். அதை தாண்டினதும் அட்மின் பில்டிங். அதுக்கு எதிர்ல ஐசிஎஸ்ஆர் பில்டிங் இருக்கு. அங்கதான் வரச் சொல்லியிருப்பாங்க...’’ வழிகாட்டினார் செக்யூரிட்டி. அனுமதி பெற்றிருந்ததால் மீடியா செல் பிரிவைச் சேர்ந்த சாய்ராம் நமக்காகக் காத்திருந்தார்.

எத்தனையோ மாணவர்களின் கனவுப்பிரதேசமான சென்னை ஐஐடிக்குள் மெல்ல பயணித்தோம். மரங்களால் மட்டுமே சூழ்ந்த ஓர் இடம். அதுவும் விருட்சமாக தளைத்திருக்கும் பெரிய பெரிய ஆலமரங்கள். தவிர, பனை மரங்களும், ஈச்ச மரங்களும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. காடும், கட்டடமும் சார்ந்த இடமாக மிளிர்கிறது சென்னை ஐஐடி.முதலில் வரிசையாக வரவேற்கின்றன பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள். முதல் குறுக்குத் தெரு முதல் 15வது குறுக்குத் தெரு வரை பெயர்ப் பலகைகள் மின்னுகின்றன.

ஐஐடியின் இயக்குநர் வீடு, மேனேஜ்மென்ட் கல்வி கட்டடம் என நீண்டு செல்கிறது சாலை. பஸ்களும், கார்களும் வருவதும் போவதுமாக இருக்கின்றன. மாணவர்கள் சைக்கிளிலும், நடந்தும் செல்கிறார்கள். கூடவே, கலைமான்களும், புள்ளிமான்களும் புல்வெளிகளில் அங்குமிங்கும் மேய்கின்றன. சற்று தூரத்தில் வடக்கு தெற்காக நிற்கும் இரண்டு யானைகள் கொண்ட வட்டத்தின் அருகே நான்கு சாலைகள் பிரிகிறது. இதைத்தான் கஜேந்திரா சர்க்கிள் என்கிறார்கள். ஐஐடி வளாகத்தின் முக்கிய அடையாளம். ஐஐடிக்குள் நுழையும் எவரும் இந்த வட்டத்தைத் தொடாமல் பயணிக்க முடியாது. இடதுபக்கம் செல்லும் சாலை தரமணி ரிசர்ச் பார்க் நுழைவு வாயில் நோக்கி போகிறது.

வலது பக்கம் கேந்திரிய வித்யாலயா பள்ளி. நேரே செல்லும் சாலை வேளச்சேரி நுழைவு வாயில் பாதை.‘‘ஐஐடிக்குள்ள வர மொத்தம் மூணு நுழைவு வாயில் இருக்கு. அந்தந்தப் பக்கமுள்ள செக்யூரிட்டி தர்ற நுழைவுச்சீட்டு அந்தந்தப் பக்கம் மட்டுமே செல்லுபடியாகும். அதனால எந்த வழியா வந்தீங்களோ அந்தப் பக்கமாத்தான் வெளியேறணும்...’’ என்கிற சாய்ராமுடன் ஐஐடியின் முக்கிய இடங்களுக்குச் சென்றோம். ஐஐடியின் பழமை வாய்ந்த சிவில் எஞ்சினியரிங் கட்டடம் வரவேற்றது. ‘‘முதல் முதலா கட்டின கட்டடம். சென்னை ஐஐடியின் லோகோவும், பொன்மொழியும் இங்கதான் இடம் பெற்றிருக்கு...’’ என்கிற சாய், கட்டடத்தின் முன்னால் உள்ள தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த லோகோவைக் காட்டினார்.

ஓர் அகல்விளக்குதான் சென்னை ஐஐடியின் லோகோ. அதற்குக் கீழே, ‘சித்திர்பவதி கர்மஜா’ என இந்தியில் பொறிக்கப்பட்டிருக்கிறது. ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பது இதன் அர்த்தம். அங்கிருந்து சென்ட்ரல் நூலகத்தை நோக்கிச் சென்றோம். வாசலிலேயே வரிசையாக சைக்கிள்கள். ‘‘மாணவர்கள் யாரும் டூ வீலரோ, காரோ கேம்பஸ்குள்ள பயன்படுத்தக்கூடாது. ஐஐடி பஸ் அல்லது சைக்கிள் பயன்படுத்தலாம். ஸோ, இங்க மாணவர்கள் சேரும்போதே புதுசா சைக்கிள் வாங்கிடுவாங்க. இகோ ப்ரண்ட்லி. இந்த மரங்கள் உயிர்ப்போடு இருக்க இதுவும் ஒரு காரணம்...’’ என்கிற சாய், ‘‘ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. லைப்ரரில போட்டோ எடுக்க பெர்மிஷன் வாங்கிட்டு வந்துடுறேன்...’’ என வேகமாக உள்ளே சென்றார்.

மாணவர்கள் ஷார்ட்ஸ், டீ சர்ட்டில் உள்ளே நுழைவதும் வெளியேறுவதுமாக இருந்தார்கள். இங்கு டிரஸ் கோட் கிடையாது. எல்லாத் துறைகளிலும் தனித்தனியே ஒரு நூலகம் இருந்தாலும் இது பொது நூலகம். இன்டர்நெட் உள்ளிட்ட வசதிகளும் இங்குள்ளன. அருகில் 1962ல் கட்டப்பட்ட ஓபன் ஏர் தி யேட்டர். அப்போதைய மேற்கு ஜெர்மனி அதிபர் ஹெய்ன்ரிச் லுப்கே இதனை திறந்து வைத்திருக்கிறார். வாரம்தோறும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையில் இங்கே திரைப்படம் திரையிடப்படும்.

தொடர்ந்து அங்குள்ள தடகள மைதானம் பக்கமாக நடந்தோம். மரங்கள் அடர்ந்திருக்கும் ஓர் இடத்தில் மைதான வழிக்கான போர்டு மட்டுமே தென்படுகிறது. இரண்டு பேர் செல்லும் குறுகலான பாதை. நடுவிலுள்ள ஓடையைக் கடக்க நச்சென பாலம். கடந்ததும் பெரிய மைதானம். அடுத்து நடக்கவிருக்கும் இன்டர் காலேஜ் போட்டிகளுக்காக செயற்கையான தடகள தடம் அமைத்திருக்கிறார்கள். இதனை மேம்படுத்தித் தந்திருக்கிறார் பிரேம் வாட்ஸா என்கிற முன்னாள் மாணவர்.

‘‘அவரைப் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. கனடா பிசினஸ் மேக்னட். கூகுள்ல டைப் பண்ணி பாருங்க...’’ என்கிறார் சாய். கனடாவின் மிகப் பெரிய தொழிலதிபரான பிரேம் வாட்ஸா, ‘கனடாவின் வாரன் பஃபெட்’ என அழைக்கப்படுபவர்.அங்கிருந்து சென்டர் ஃபார் இன்னோவேஷன். ஐஐடி மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்காகவே 2008ல் உருவாக்கப்பட்ட பகுதி. ‘Raftar’ என்ற பெயரில் செயல்படும் இங்குள்ள மாணவர்கள் டீம் வடிவமைக்கும் ஃபார்முலா ரேஸ் கார்கள் உலகளவில் நடக்கும் டிசைன் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறது. தவிர, கடல் தொழில்நுட்பம், ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரிங் சம்பந்தமான புதுமை முயற்சிகளும் அந்த அறையை அலங்கரிக்கிறது.

அங்கிருந்து வெளியேறி அருகிலிருந்த கேம்பஸ் கஃபே உணவு விடுதிக்குள் ஒரு கப் டீ அருந்தினோம். இது பணியாளர்களுக்கான கேன்டீன். இங்கே பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன. மாணவ - மாணவிகளுக்கு 18 ஹாஸ்டல் இருக்கிறது. அடுத்து, கடல்சார் தொழில்நுட்பத் துறை பக்கமாக கரை ஒதுங்கினோம். இங்குள்ள ‘wave basin’ லேப் வித்தியாசமானது. பெரிய நீச்சல்குளம் போலிருக்கும் இந்த பேசின், முப்பது மீட்டர் நீளமும், முப்பது மீட்டர் அகலமும், மூன்று மீட்டர் ஆழமும் உடையது. இதில், அலைகளை செயற்கையாக உருவாக்கி அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி படிக்கிறார்கள்.

‘‘உதாரணத்துக்கு, கடல்நடுவே ஆஃப்ஷோர்ல பெட்ரோல் எடுக்கப்படுது. அந்த கட்டமைப்புகளை அலைகள் தாக்கும் போது ஸ்திரத்தன்மை, அதிர்வுகள் எல்லாம் எப்படியிருக்கும்? இயக்கம் என்ன மாதிரி அமையும்னு படிப்பாங்க. அப்புறம், கப்பல் மிதக்குறது, அசையிறது பத்தி ஸ்டடி பண்ணுவாங்க. பருவமழைக் காலம், புயல் நேரங்கள்ல அலைகள் அப்நார்மலா இருக்கும். அப்ப, கப்பல் எப்படி நிற்கும்னு பார்க்கணும். அதுமாதிரி, துறைமுகத்துல உள்ள அலைகளின் அழுத்தம்னு பல விஷயங்கள் இதுல இருக்கு. எல்லாத்தையும் ஸ்டடி பண்ணுவாங்க. இந்த மாதிரி முழு அளவிலான அனைத்து செட்அப்களும் இந்தியாவுல இங்கதான் இருக்கு...’’ என்கிறார் அங்கிருக்கும் தொழில்நுட்ப அதிகாரியான சந்தானம்.

‘‘தூத்துக்குடி பக்கத்துல இருக்கிற வான்தீவு 1986 கணக்குப்படி 16 ஹெக்டேர் பரப்பளவு இருந்தது. ஆனா, 2015ல் 1.5 ஹெக்டேரா சுருங்கிப்போச்சு. காரணம், பவளப்பாறைத் திட்டுகளை அழிச்சதுதான். 2014ல் மாநில சுற்றுச்சூழல் துறை ஐஐடிகிட்ட கேட்டுக்கிட்டதால இந்த கடல்சார் எஞ்சினியரிங் துறை ஒரு புரொஜெக்ட் மூலம் கடந்த ரெண்டு வருஷமா அந்தத் திட்டுகளை மறுஉருவாக்கம் பண்ணிட்டு வருது. இப்ப, 1.5 ஹெக்டேர்ல இருந்து 1.6 ஹெக்டேர் வரை வளர்ந்திருக்கு...’’ என்கிறார் சாய்ராம்.

அட்மின் பில்டிங் வாசலுக்கு வந்தோம். ஷோகேஸில் ஐஐடி மாணவர்கள் பெற்ற சான்றுகள், விருதுகள், கோப்பைகள் என பெருமிதங்கள் மிளிர்கின்றன. அங்கிருந்து ஒவ்வொரு துறையாகச் சுற்றி வந்தோம். ஆங்காங்கே பஸ்கள் நிற்க நிறுத்துமிடமும் அதன் அருகில் கால அட்டவணையையும் போர்டில் தெரியப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு துறையின் முன்பும் ஒரு பெரிய ஆலமரம் நிற்பது ஆச்சரியம் தருகிறது. திட்டமிட்டு வடிவமைத்திருப்பார்கள் போல!

வேளச்சேரி நுழைவுவாயில் வரை சென்றுவிட்டு பிறகு தரமணி பக்கமாக டூவீலரில் பயணமானோம். இந்தப்பக்கத்தில் உணவு விடுதிகள், குடியிருப்பு வாசிகளுக்கான கடைகள் இருக்கின்றன. சிவன் கோயில், துர்கா பீலியம்மன் கோயில், பிள்ளையார் கோயில் என மூன்று கோயில்கள் அலங்கரிக்கின்றன. நாலாப்பக்கமும் சுற்றிவிட்டு, வளாகத்தின் மிகப் பழமையான ஆலமரத்தின் அடியில் அமர்ந்தோம். விழுதுகள் எங்கெங்கோ பரவி அழகாகப் பரந்து விரிந்து நிற்கிறது, உலகெங்கும் உள்ள சென்னை ஐஐடி மாணவர்களைப் போல!

பொதுத் தகவல்கள்      
*630 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 240 ஏக்கரில் அமைந்திருக்கிறது வளாகம்.
*(மொத்தம் 574 ஆசிரியர்கள், 8966 மாணவர்கள். இதில், வெளிநாட்டு மாணவ - மாணவிகளும் அடக்கம்.
*சிவில், மெக்கானிக்கல், கெமிக்கல், கம்ப்யூட்டர்... என பதினாறு துறைகள். இதில், Humanities and Social Sciences பிரிவில் எம்.ஏ. கோர்ஸும் இருக்கிறது.
*1962 தொடக்கத்திலிருந்து இங்கே பெண்கள் சேர்ந்திருக்கிறார்கள். விஜயலட்சுமி, அன்னபூரணி என்ற இரண்டு பெண்மணிகள் எம்எஸ்சியில் சேர்ந்து பிஹெச்.டி முடித்து மற்ற பெண்களுக்கு முன்னோடியாக திகழ்ந்திருக்கிறார்கள்.
*வேதவல்லி என்ற பெண் மூன்றாண்டு பி.டெக் முடித்த முதல் பெண் எஞ்சினியரிங் பட்டதாரி.
*கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவிலுள்ள ஐஐடி மற்றும் எஞ்சினியரிங் கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடிதான் முதலிடம். இந்தியாவிலுள்ள மொத்த மத்திய அரசு கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் இரண்டாம் இடம். இதை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ‘நேஷனல் இன்ஸ்டிடியூஷனல் ரேங்கிங் ஃபிரேம்வொர்க்’ பட்டியலிட்டு சான்றிதழும் வழங்கி உள்ளது.

வரலாறு
ஐஐடியின் உள்ளே பாரம்பரியத்தை போற்றும் ஹெரிடேஜ் சென்டர் இருக்கிறது. இதன் தலைமை நிர்வாகியும், முன்னாள் மாணவருமான குமரன் சதாசிவத்திடம் பேசினோம்.‘1956ல் பிரதமர் ஜவகர்லால் நேரு மேற்கு ஜெர்மனி சென்றபோது உயர் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்க அழைப்பு விடுத்தார். பிறகு, இந்தோ - ஜெர்மன் ஒப்பந்தம் ஏற்பட்டு 1959ல் சென்னை ஐஐடி உருவாக்கப்பட்டது. இதை, மத்திய அறிவியல் மற்றும் கலாசாரத் துறைகளுக்கான அமைச்சர் ஹுமாயூன் கபீர் தொடங்கி வைத்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் லட்சுமணசாமி முதலியார் போர்டு ஆப் கவர்னர்ஸின் முதல் சேர்மனாக நியமிக்கப்பட்டார். ஐஐடியின் முதல் இயக்குநராக சென்குப்தா இருந்தார். அவரது உருவப்படத்தைத்தான் நுழையும் இடத்தில் வைத்திருக்கிறோம். அப்போது, இந்த இடமெல்லாம் வெறும் காடு. அதனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் நடந்திருக்கிறது. சைதாப்பேட்டையிலும், கிண்டியிலும் ரெண்டு ஹாஸ்டல் இருந்துள்ளது. அட்மின் பில்டிங் தோல் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து செயல்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் ஐஐடி 1951ல் கரக்பூரில் இந்தியர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

அதிலுள்ள சிக்கல்களைப் புரிந்து மேலும் மேம்படுத்த வெளிநாட்டு ஒத்துழைப்புடன் ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டது. அப்படித்தான் இரண்டாவதாக மும்பை ஐஐடி ரஷ்யா கூட்டுடனும், பிறகு சென்னை மேற்கு ஜெர்மனி, கான்பூர் அமெரிக்கா, தில்லி பிரிட்டிஷ் கூட்டுகளுடனும் கொண்டு வரப்பட்டன. முதலில் இங்கே ஐந்து வருட கோர்ஸ்தான் ஆரம்பிக்கப்பட்டது. அதனுடன், எம்.எஸ்சி இரண்டாண்டு கோர்ஸ் வந்தது. அந்நேரம் சீனப் போர் வந்ததால் மனிதவளம் அதிகமாக தேவைப்பட்டது.

அதனால், மூன்று வருட கோர்ஸ் கொண்டு வந்தனர். பிறகு, மறுபடியும் ஐந்து வருடமாக மாறி, 80களில் நான்கு வருட கோர்ஸானது. முதல் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த புகைப்படம் 1973ல் IBM 370 கம்ப்யூட்டர் தொடக்க விழாவில் எடுத்தது. அப்போது இதுதான் அட்வான்ஸ் கம்ப்யூட்டர்! அந்நேரம்தான் கம்ப்யூட்டர் துறையும் வந்தது. இங்கு பட்டமளிப்புக்கு வந்த ஒரே பிரதமர் இந்திராகாந்தி மட்டும்தான்!’’ என்கிறார் குமரன் சதாசிவம்.