COFFEE TABLEகுங்குமம் டீம்

சொறிந்து கொள்ள மிஷின்!
நம்ம ஊர்களில் கால்நடைகளைப் பராமரிக்கும் விதத்தை நினைத்தாலே பரிதாபம்தான். உதாரணத்துக்கு மாடுகள் தங்களின் மேல் மொய்க்கும் பூச்சிகளை விரட்டவும், அரிக்கும் முதுகை சொறிந்துகொள்ளவும் ரொம்பவே சிரமப்படும். மின்கம்பங்கள் அல்லது பெரிய தூண்களின் மீது உடலை உரசிக்கொள்ளும். ஆனால், வெளிநாடுகளில் அப்படியல்ல. அங்குள்ள பல மாட்டுப்பண்ணைகளில் இதற்காகவே அதிநவீன சொகுசு வசதிகள் இருக்கின்றன. மாடுகளின் முகத்தையும், முதுகையும் சுகமாக வருடிக் கொடுக்க ஸ்பெஷல் பிரஷ் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி மாடு ஒன்று பிரஷ் கம்பத்தில் தன் முகத்தை உரசிக்கொள்வதை மினி வீடியோவாக ஃபேஸ்புக்கின் ‘Farmers Guardian’ பக்கத்தில் ‘Yeah - That’s the spot right there’ என்ற தலைப்பில் தட்டிவிட, 21 லட்சம் பேர் பார்த்தும், நாலரை லட்சம் பேர் பகிர்ந்தும் வைரலாக்கியுள்ளனர்!

சூப்பர் கேர்ள் எமி
மகிழ்ச்சியில் மிதக்கிறார் எமி. கன்னடத்தில் சிவராஜ்குமார், சுதீப் நடிக்கும் ‘த வில்லன்’ படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு லண்டன் பறந்த எமி, அங்கே ‘Super Girl’ என்ற டிவி சீரியலில் கமிட் ஆனார். அதன் முதல் எபிசோட் சமீபத்தில் ஒளபரப்பாகி செம வரவேற்பை அள்ள, தொடர்ந்து சீரியல் ஆசையில் உள்ளார். இங்கே ‘2.0’வுக்குப் பிறகே தமிழில் கமிட் ஆவார் என்கிறார்கள்.

மொபைல் ஸ்கேனர்
அமெரிக்காவைச் சேர்ந்த ‘Vupoint’ நிறுவனம் கையடக்க ஸ்கேனர் கருவியை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போனுடன் இணைக்க வேண்டும். பிறகு ஸ்கேன் செய்ய வேண்டிய புத்தகம் அல்லது படத்தின் மீது வைத்து கைகளால் நகர்த்த வேண்டும். ஸ்கேன் செய்யப்படுகின்ற பக்கங்கள் அப்படியே இணைப்பிலுள்ள கம்ப்யூட்டருக்குள் வந்துவிடும். வண்ணங்களின் அடர்த்தியை குறைக்கவும், கூட்டவும் முடியும். வைஃபை முறையில் இயங்கும் இந்த ஸ்கேனரின் விலை ரூ.4500.

ராகிங்!
எவ்வளவு சட்டங்கள் வந்தாலும், எவ்வளவு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் இந்தியக் கல்லூரிகளில் சீனியர் மாணவர்கள் ஜூனியரை ராகிங் செய்வது குறையவில்லை என்கிறது ஓர் ஆய்வு. இந்தியா முழுவதும் 2016ல் மட்டும் பதிவு செய்யப்பட்ட ராகிங் வழக்குகளின் எண்ணிக்கை 515. ஆனால், கடந்த பத்து மாதங்களில் மட்டுமே 831 புதிய வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதில் 138 வழக்குகளில் பெண்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது கவலைக்குரியது. இதில் உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம் முன்னணியில் இருக்கின்றன. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் ராகிங் குறைவு என்பது ஆறுதல். ‘‘ராகிங் வழக்குகள் அதிகரித்திருந்தாலும், அதனால் ஏற்படுகின்ற அசம்பாவிதங்கள் முன்பைவிட இப்போது பெருமளவில் குறைந்திருக்கிறது...’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சாகசப் பிரியர்கள்
‘‘ஹாலிவுட் படங்களில் கூட இந்த மாதிரியான ஒரு சாகசத்தைப் பார்க்கவில்லை...’’ என்று வின்ஸையும், ஃப்ரட்டையும் ஐரோப்பிய மக்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள். என்ன விஷயம்? ஓடுகின்ற பேருந்திலும் ரயிலிலும் அடித்துப் பிடித்து ஏறியிருப்போம். ஆனால், வின்ஸும், ஃப்ரட்டும் ஏறியது ஆல்ப்ஸ் மலையின் உச்சியில்... அதுவும் 160 கி.மீ. வேகத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில்! பாராசூட் போல அந்தரத்தில் பறக்கவும், மிதக்கவும் உதவுகின்ற விங்ஸூட் உதவியுடன் இந்த சாகசத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

மலையின் உச்சியில் இருவரும் நின்றுகொண்டிருக்க, அந்த வழியாகப் பறந்து வருகிற விமானத்தின் கதவு திறக்கிறது. மலையில் இருந்து குதிக்கிற இருவரும் விமானத்தின் கதவு இருக்கும் திசையை நோக்கி 160 கி.மீ. வேகத்தில் பறக்கின்றனர். சரியான நேரம் பார்த்து திறந்திருக்கும் கதவுக்குள் ஒரு பறவையைப் போல புகுந்து விடுகின்றனர்! பிறகு, இதெல்லாம் எங்களுக்கு சர்வசாதாரணம் என்பதைப் போல விமானத்துக்குள் இருந்து இருவரும் புன்னகைக்கின்றனர்!