மலேசிய தமிழர்களின் முகம்



- மகேஷ்

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர் இந்தியாவை ஆட்சி செய்த காலகட்டத்தில் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய பஞ்சம் இங்கே வந்தது. கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் செத்துக் குவிந்தார்கள். இந்தியாவை விட்டு கோடிக்கணக்கானவர்கள் பிழைப்புதேடி வேறு நிலங்களுக்குச் சென்றார்கள். அன்று மலேசியா, ஆப்ரிக்கா, இலங்கை போன்ற பல நாடுகளில் வெள்ளையர் பெரிய தோட்டங்களை நிறுவிக் கொண்டிருந்தார்கள். அதில் பணியாற்ற ஏராளமான மக்கள் தேவைப்பட்டார்கள். அன்றெல்லாம் மக்கள் சொந்த ஊரைவிட்டும் உறவுகளை விட்டும் விலகிச்செல்லமாட்டார்கள். ஆகவே அந்தப் பஞ்சம் நல்லதுதான் என வெள்ளை அரசு நினைத்தது.

பஞ்சத்தை அடக்க அவர்கள் எதையும் செய்யவில்லை. இங்கிருந்து கிளம்பிய மக்களை கூட்டம் கூட்டமாக கப்பலில் ஏற்றிக் கொண்டுசென்றனர். ஓயாமல் மழைபெய்து கொண்டிருக்கும் அடர்காடுகளில் கடுமையாக வேலை செய்ய வைத்தனர். அவர்கள் மிகக்குறைந்த கூலிக்கு அடிமைப்பணி செய்தனர். மலேரியா போன்ற நோய்களில் செத்துமடிந்தனர். அப்படிச்சென்ற மக்களின் வம்சாவளியினர் இன்று உலகமெங்கும் உள்ளனர். ஆப்ரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் அவர்கள் தங்கள் மொழியை மறந்துவிட்டனர். ஆகவே அடையாளமில்லாமல் மறைந்துவிட்டார்கள். இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் அவர்கள் தமிழ்ச் சமூகமாகவே நீடிக்கின்றனர் அவ்வாறு அவர்களை தமிழ்ப்பண்பாட்டில் நிலை நிறுத்தியவர்கள் அங்குள்ள எழுத்தாளர்கள்.

அந்த வகையில் மலேசியாவின் தமிழிலக்கியத்தின் முக்கியமான முன்னோடிகளில் ஒருவர் சீ.முத்துசாமி. எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்களால் நடத்தப்படும் கோவை ‘விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்’ ஆண்டுதோறும் மூத்த இலக்கியவாதிகளுக்கு பரிசும் விருதும் வழங்கி கெளரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ‘விஷ்ணுபுரம் விருது’ மலேசியத் தோட்டக்காட்டின் துயரங்களை எழுதிய சீ.முத்துசாமிக்கு வழங்குகிறது. டிசம்பர் 16, 17ம் தேதிகளில் கோவையில் இரண்டுநாள் கருத்தரங்கும் விருது வழங்கும் விழாவும் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலுமிருந்து இருநூறுக்கும் மேற்பட்ட வாசகர்களும் எழுத்தாளர்களும் வந்து இரண்டுநாள் தங்கி இவ்விருது விழாவை பெரிய கொண்டாட்டமாக நடத்தவிருக்கிறார்கள்.

மலேசியாவில் உள்ள கெடா மாநிலத்தில் சீரங்கன்-முத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாக 1949ல் பிறந்த சீ.முத்துசாமி பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக எழுதி வருபவர். இவருடைய ‘மண்புழுக்கள்’ என்னும் நாவல் பெரிதும் பாராட்டப்பட்ட ஒன்று. மலேசிய இலக்கியச்சூழல் ஒரு சீரிய எழுத்தாளனுக்கு ஊக்கம் தரக்கூடிய ஒன்று அல்ல. சீ.முத்துசாமியின் பெயர் இந்த விருதுக்கு முன் தமிழகத்தில் எவருக்கும் தெரியாது. ஆகவே மனச்சோர்வடைந்து அவர் இருபதாண்டுக்காலம் எழுதாமலும் இருந்திருக்கிறார். அதற்கு அங்கிருந்த அரசியல் சூழலில் அவர் சந்தித்த கண்காணிப்பும் ஒரு காரணம். 

அதைப்பற்றி அவர் சொல்லும்போது “எனது இலக்கியவாழ்வில் நான் மிகத்தீவிரத்துடனும் உற்சாகத்துடனும் இயங்கியிருக்க வாய்த்த எனது முப்பதாவது வயதில் தொடங்கி ஓர் இருபதாண்டுக் காலத்தை எதிர்பாராது குறுக்கிட்ட ஒரு மடைமாற்றத்தால் தொலைத்தும், தொலைந்தும் போனேன். ஒருவேளை, அக்காலக்கட்டத்தில் இந்நாட்டு நவீன இலக்கியப் பரப்பில்  இளமைக்கே உரிய தனித்துவமான வீரியத்தின் முழு ஆற்றலுடனும் படைப்பூக்கத்துடனும் இயங்கியிருப்பேனானால், இப்போது நீங்கள் பேசிக்கொண்டிருப்பது வேறொரு முத்துசாமியாக இருப்பான்...” என்கிறார் மனவருத்தத்துடன்.

மலேசிய மக்களின் வாழ்க்கை இன்னல் மிக்கது. கடுமையான சூழலில் அவர்கள் தோட்டங்களில் வாழ்ந்தனர். இன்று எண்ணெய் வளத்தால் மலேசியா வளமான நாடாக ஆனபின்னரும் கூட தமிழரின் நிலை பரிதாபமாகவே உள்ளது. அதை கொந்தளிப்புடன் எழுதும் எழுத்தாளர்களில் ஒருவர் சீ.முத்துசாமி. ஆனால், தன் வெளிப்பாடு வெறும் கூச்சலாக ஆகிவிடக்கூடாது, அது கலைப்படைப்பின் சமநிலையுடன் வெளிப்படவேண்டும் என்று எப்போதும் கவனம் கொள்கிறார். துன்பத்தின் அலறல்களைத்தான் எழுதுகிறார். ஆனால், அதை ஆழ்ந்த அமைதியுடன் வெளிப்படுத்துகிறார். ஆகவேதான் அவரை அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் தங்கள் முன்னோடி என்று கொண்டாடுகிறார்கள்.