காட்ஃபாதர்போதை உலகின் பேரரசன்

யுவகிருஷ்ணா - 35

அந்த தேர்தலில் கொலம்பிய ஊடகங்கள் பாப்லோவை ஆதரித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆதரித்தால் லாபம். எதிர்த்தால் வம்பு. நமக்கென்ன போச்சு என்று, ‘கொலம்பியாவின் ராபின்ஹுட்’ என்று தலைப்பிட்டு எஸ்கோபாரின் அருமை பெருமைகளை பக்கம் பக்கமாக எழுதின.அதே நேரம் பழைய அரசியல் கட்சிகளான சுதந்திரக் கட்சியும், புதிய சுதந்திரக் கட்சியும் பாப்லோவின் அரசியல் நுழைவை மிகக்கடுமையாக எதிர்த்தன. அதுவரை நாகரிகமாக இவர்களை ‘கார்டெல்’ என்று சொல்லி அழைத்துக் கொண்டிருந்தவர்கள், நேரடியாக ‘போதை வியாபாரிகள்’ என்று குறிப்பிட ஆரம்பித்தார்கள். எதிரும் புதிருமான அந்த இரு கட்சிகளும் இணைந்து ‘போதை வியாபாரிகளுக்கா உங்கள் ஓட்டு?’ என்று ஒருமித்த முழக்கத்தை எழுப்பின.

தேர்தல் நாளன்று பாப்லோவின் ஊழியர்கள் பம்பரமாகச் சுழன்றார்கள். நிறைய பேருந்துகளை அமர்த்தி வாக்காளர்களை (குறிப்பாக ஏழைபாழைகளை) வாக்குச் சாவடிக்கு இலவசமாக அழைத்து வந்தார்கள். படுத்த படுக்கையாகக் கிடந்தவர்களைக் கூட ஸ்ட்ரெச்சர் வைத்து அழைத்து வந்து ஓட்டு போட வைத்தார்கள். பாப்லோதான் வென்றிருப்பார் என்பதை தனியாக உங்களுக்குச் சொல்ல வேண்டியதே இல்லை. அமோக வெற்றி. கொலம்பியாவின் காங்கிரஸுக்குள் (நம்மூர் பாராளுமன்றம் மாதிரி) முதன்முறையாக ஒரு போதைக்கடத்தல் மன்னன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நுழைகிறார்.

காங்கிரஸ் உறுப்பினர் (அதாவது நம்ம எம்.பிக்கள் போல) என்றால் விலையுயர்ந்த கோட் சூட் உடுத்தி, அழகாக டை கட்டியிருக்க வேண்டும். பொதுவாக டை கட்டும் வழக்கம் பாப்லோவுக்கு இல்லை. அவர் முதன்முதலாக பகோடா நகரில் இருந்த காங்கிரஸுக்குள் நுழைந்த அன்று, டை கட்டவில்லை என்று காரணம் கூறி அவரை வெளியே நிறுத்தினார் பாதுகாவலர். காங்கிரஸுக்குள் பாப்லோவுக்கு அனுமதி இல்லையென்றதுமே, அச்செய்தி ஃப்ளாஷ் நியூஸாக ரேடியோவில் அலறியது. பத்திரிகையாளர்கள் குவிந்தார்கள். பாப்லோ அவர்கள் மத்தியில் முழங்க ஆரம்பித்தார்.

“ஆடம்பரமான கோட் சூட், விலையுயர்ந்த டை அணிவதுதான் ஒரு காங்கிரஸ் உறுப்பினரின் அடையாளமா? மக்கள் பணத்தைத் திருடுவதற்காக இப்படி நாகரிகமான தோற்றத்தில் வருகிறார்கள். நான் அப்படி அல்ல. மக்களில் ஒருவன். மக்களுக்காக இங்கே வந்திருக்கிறேன்...”பாப்லோவை உள்ளே அனுமதிக்க மறுத்தார்கள் என்று கேள்விப்பட்டு மக்கள் ஆயிரக்கணக்கில் பேரணி மாதிரி காங்கிரஸ் கட்டடத்துக்கு முன்பாக அணி அணியாக வர ஆரம்பித்தார்கள். பாதுகாவலருக்கு தர்மசங்கடமாகப் போய்விட்டது.

“பாப்லோ சார். நீங்க பேசுவதெல்லாம் நியாயம்தான். ஆனால், நீங்கள் ‘டை’ அணியாத நிலையில் உங்களை உள்ளே அனுமதித்தால் என் வேலை போய்விடும். தயவுசெய்து என்னுடைய ‘டை’யையாவது அணிந்துகொண்டு முதலில் உள்ளே செல்லுங்கள். மற்ற விஷயத்தை அப்புறம் பேசிக்கொள்ளலாம்...” என்றார். பரிதாபகரமான அவரது நிலையைக் கண்ட பாப்லோ, அதுபோலவே செய்தார். உள்ளே சென்று தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார். கழுத்தில் இருந்த ‘டை’யைக் கழற்றி வீசி எறிந்தார். எல்லோரும் அவரையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“நான் பாப்லோ. மக்கள் பணி செய்வதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கே வந்திருக்கிறேன். என் பணியைச் செய்ய இந்த ‘டை’ தேவையில்லை. என் கொலம்பிய சகோதரர்கள் ஒட்டு போட்ட உடை அணிந்து கொண்டு ஒருவேளை சாப்பாட்டுக்கு சாலையில் நிற்கிறார்கள். நானோ இங்கு அலங்காரமாக கோட் சூட் டை அணிந்து உங்கள் மத்தியில் பஜனை செய்து கொண்டிருக்க முடியாது. நான் என்ன உடையை உடுத்த வேண்டும் என்பது என் தேர்வு. புரிகிறதா?”பாப்லோவின் கர்ஜனை அந்த பழமையான காங்கிரஸ் கட்டடத்தின் மூளை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. பழம் பெருச்சாளிகள் அத்தனை பேரும் பாப்லோவைக் கண்டதுமே ஓடி ஒளியத் தொடங்கினார்கள்.

பெரிய படிப்போ, அரசியல் வரலாறோ அறிந்தவர் இல்லை பாப்லோ. ஆனால், ஏழை மக்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவர் யாரும் அவரளவுக்கு அப்போது காங்கிரஸில் இல்லை. காங்கிரஸில் விவாதிக்கக்கூடிய அளவுக்கு மதிப்பில்லாத சிறிய விஷயங்கள் என்று ஒதுக்கப்பட்ட அத்தனை விஷயங்களையும் பாப்லோதான் பேசினார். ஏழைகளின் குரலாக, ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக பாப்லோ ஒருவர்தான் காங்கிரஸில் இருந்தார். அவருடன் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சகா ஒர்டேகாதான் இவருக்கு முழு ஆதரவு. பாப்லோ என்ன பேசினாலும் ‘ஆமாம் சாமி’ போட்டு தலையாட்டுவார்.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கும், கொலம்பியாவுக்கும் பாரம்பரிய ரீதியான உறவு உண்டு. அப்போது ஸ்பெயினில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரை நேரில் சந்தித்து கொலம்பிய காங்கிரஸ் உறுப்பினர்கள் குழு ஒன்று வாழ்த்தி சிறப்பிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அராஜகம் செய்து அந்த குழுவில் இடம்பெற்றார் பாப்லோ எஸ்கோபார். அலுவல்ரீதியான அவரது முதல் பயணம் ஸ்பெயினின் மாட்ரிட் நகரத்துக்குத்தான். காங்கிரஸ் உறுப்பினர் என்கிற முறையில் ஐரோப்பாவுக்கு வந்திருந்தாலும், அதை தன்னுடைய ‘பிசினஸ் ட்ரிப்’ ஆகவும் பயன்படுத்திக் கொண்டார் பாப்லோ.

ஸ்பெயினில் இருந்த பல்வேறு தொழிலதிபர்களைச் சந்தித்து தன்னுடைய பிசினஸ் டீலிங்கையெல்லாம் முடித்துக் கொண்டார். மேலும் சில ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த காங்கிரஸ் குழு சென்றது. குறிப்பாக மொனாக்கோ நாடு பாப்லோவை மிகவும் கவர்ந்திருந்தது. தன்னுடைய கடைசிக் காலத்தை மொனாக்கோவில் அமைதியாகக் கழிக்க வேண்டும் என்றும் அவருக்கு ஆசை பிறந்தது. ஊர் திரும்பியதுமே மெதிலின் நகரில், தான் கட்டிக் கொண்டிருந்த ஆடம்பர பங்களாவுக்கே மொனாக்கோ என்று பெயர் வைக்கக்கூடிய அளவுக்கு அந்நாட்டின் மீது அவருக்கு பாசம் ஏற்பட்டிருந்தது. கொலம்பிய காங்கிரஸுக்குள் நுழைந்தபிறகு பாப்லோவின் மனதில் நிறைய மாற்றங்கள்.

அதுவரை தன்னை மெதிலின் கார்டெல் தலைவர் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டவர், போதைத் தொழிலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது மாதிரி காட்டிக்கொள்ள விரும்பினார். உண்மையைச் சொல்லப்போனால், இதுபோன்ற நிழல் காரியங்களில் இருந்து விலகி நேர்மையான அரசியல்வாதியாக உருவெடுக்கவே ஆசைப்பட்டார். ஆனால் - அவர் பிடித்திருந்தது புலிவால் ஆயிற்றே? அவ்வளவு சுலபத்தில் விட்டுவிட முடியுமா? பல்வேறு விவாதங்களின் போது பாப்லோ ஏதேனும் பேசினால், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டாகச் சேர்ந்துகொண்டு, பாப்லோவின் போதைத் தொழிலைக் குத்திக் காட்டி அவரை இழிவுபடுத்தத் தொடங்கினார்கள்.

பாப்லோவின் பழைய கதைகளையெல்லாம் தோண்டியெடுத்து மக்கள் மேடைகளிலும் கிண்டலாகப் பேசத் தொடங்கினார்கள். தர்மசங்கடப்பட்ட பாப்லோ, “நான் ஒரு தொழிலதிபர். ரியல் எஸ்டேட் செய்து நேர்மையாக (!) பணம் சம்பாதித்தவன். அவ்வாறு சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவழிக்கவே அரசியலுக்கு வந்திருக்கிறேன்...” என்று விளக்கம் அளித்தார். கைப்புண்ணை பார்க்க கண்ணாடி எதற்கு? ஊர், உலகத்துக்கே தெரியும், பாப்லோ, ஒரு போதை கார்டெல் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார் என்று. கொலம்பியாவில் அப்போது நாகரிகமான ஓர் அரசியல் முறை இருந்தது. அமைச்சரவையில் எதிர்க்கட்சிக்கும் இடம் அளிப்பார்கள். அம்மாதிரி புதிய சுதந்திரக் கட்சியின் லாரா என்பவர், சட்டத்துக்கு பொறுப்பான அமைச்சராக இருந்தார்.

அவர்தான் பாப்லோ எஸ்கோபாருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். சட்ட அமைச்சர் என்பதால், பழைய ஃபைல்களைப் புரட்டிப் பார்த்து பாப்லோவை கிழிகிழியென்று கிழிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. ஒருமுறை காங்கிரஸில் குற்றம் சாட்டினார். “பாப்லோ, நீங்கள் ஒரு போதை வியாபாரி என்பதால்தான் அமெரிக்கா உங்களுக்கு விசா தர மறுக்கிறது...” பாப்லோ உடனே மறுத்தார். “இல்லை. எனக்கு அமெரிக்கா விசா தர மறுக்கவில்லை. அமைச்சர், உண்மைக்குப் புறம்பான தகவலை அவைக்குத் தருகிறார்...”சொல்லிவிட்டு வெளியே வந்த பாப்லோ, உடனடியாக சுற்றுலா என்று காரணம் கூறி அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்தார்.

அமெரிக்காவுக்கும், அமைச்சருக்கும் என்ன அண்டர்கிரவுண்ட் டீலிங்கோ தெரியவில்லை. பாப்லோவின் விசா விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்பட்டு, அதுகுறித்த செய்திக் குறிப்பையும் அமெரிக்க தூதரகம் ஊடகங்களுக்கு கொடுத்தது. அமெரிக்காவில் நிகழ்ந்த பல்வேறு போதைக் குற்றங்களின் சூத்திரதாரி பாப்லோ என்றும் நேரடியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் விசாரணைக்கு ஏதுவாக பாப்லோவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காங்கிரஸில் குரல் எழுந்தது. அரசியல் என்கிற தேன்கூட்டுக்குள் கை வைத்ததின் பலனை பாப்லோ அனுபவிக்கத் தொடங்கினார். எத்தகைய தொழில் சிக்கலையும், கண்மூடி கண் திறப்பதற்குள் தீர்த்துவிடும் பாப்லோ, அரசியல் களத்தில் அபிமன்யூவாக மனமுடைந்து நின்றார்.

(மிரட்டுவோம்)

ஓவியம்: அரஸ்