அண்ணாதுரை



- குங்குமம் விமர்சனக்குழு

தன்னால் சீரழிந்த குடும்பத்தை தானே மீண்டு எழுந்து மீட்பவரே ‘அண்ணாதுரை’.காதலியின் திடீர் மரணத்தால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார் அண்ணன் விஜய் ஆண்டனி. பகலில் டாஸ்மாக்கிலும், இரவில் காதலி புதைக்கப்பட்ட கல்லறையிலுமாக அவரது தினப்படி பொழுது கழிகிறது. அவ்வளவு நிறைபோதையிலும் ஒரு கும்பலை விரட்டி, ஒரு பெண்ணையும் காப்பாற்றுகிறார். அவரது நிலைகுலைந்த போதையில் தடுமாறுகிறது குடும்பம். அவரைப் போலவே இருக்கும் தம்பி விஜய் ஆண்டனி, ஆள் மாறாட்டத்திலும், அண்ணன் ஏற்படுத்திய கடனிலும் அவதிப்படுகிறார். எல்லாத் துயரங்களிலிருந்தும் விஜய் ஆண்டனி மீண்டாரா? குடும்பம் சமநிலைக்கு வந்ததா? என்பதே மீதிக்கதை.

இரண்டாம் தடவையாக இரட்டை வேடத்திற்கு முயற்சி செய்திருக்கிறார் விஜய் ஆண்டனி. ஆனால், அதற்கேற்ற சில மெனக்கெடல்களை இருத்திக் கொள்ள தவறிவிட்டார். கட்டிங், ஷேவிங் மட்டுமே வித்தியாசம், வேறு எந்த உடல்மொழியும் தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டார்போல. படத்தில் உள்ளவர்கள் போல், நாமும் யார் இவர் என யோசிக்கிறோம். கையில் பச்சை குத்தியிருக்கும் எஸ்தர் பலநேரங்களில் காப்பாற்றுகிறது. ஆனாலும் வெடித்துச் சிதறும் கோபத்திலும், காதலி இறந்த துயரத்தையும் தெளிவாக முகத்தில் கொண்டு வருகிறார் ஆண்டனி. சண்டைக்காட்சிகளில் மகா ரெளத்திரம்.

பி.டி. மாஸ்டராக வரும் தம்பி விஜய் ஆண்டனி நேர்த்தி. எல்லாப் புள்ளிகளும் சேர்ந்த இடங்கள் குழம்புவதால் பார்க்க கொஞ்சம் கவனம் தேவைப்படுகிறது. டயானா, ஜுவல் மேரி, மகிமா என மூன்று ஹீரோயின்கள் குவிந்திருந்தாலும், நமக்கு விஜய் ஆண்டனி கையிலிருக்கும் எஸ்தரை தேடத் தோன்றுகிறது. மனசுதானே... இல்லாததைத்தான் தேடும். டயானா பார்க்க மலர்ச்சியாக, புஷ்டியாக இருந்தாலும், அடுத்த படத்தில் அண்ணியாக மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. கொஞ்ச நேரமே வந்தாலும் இருந்த இடத்தை நிறைவு செய்கிறார் காளி வெங்கட். ராதாரவி இன்னும் பெரிதாக கெத்து காட்டுவார் என்று எதிர்பார்த்தால் உடனே பெவிலியன் திரும்பிவிடுகிறார். ‘இந்த ஊர் பழி சொல்லுமே தவிர வழி சொல்லாது’ என அடிக்கடி வெளிப்படும் சிறு வசனங்களில் அறிமுக இயக்குநர் சீனிவாசன் தலைகாட்டுகிறார்.

அவ்வளவு கறார் காட்டும் பி.டி. வாத்தியார் ஆண்டனி இப்படி கருணையற்ற அடியாளாக மாற முடியுமா? இடிக்கிறது. மொத்தமே குடும்பம் இடிந்து போயிருக்க, பணத்தைக் கொடுத்துவிட்டு, பத்திரத்தை வாங்க மறக்க முடியுமா? உயிரல்லவா அது. மாஸ் ஹீரோ பில்டப், ஓங்கி அடிக்கும் இடைவேளை என எல்லாமே பக்காவாக இருந்தும் இரண்டாம் பாதி தடுமாற்றமே. தில்ராஜின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி. அருண்பாரதியின் வரிகளில் ஈ.எம்.ஐ. பாடலும், அதற்கேற்ற ஒளிப்பதிவும் அழகு. சொன்ன விதத்தையும், சொல்லிய விஷயத்தையும் சரிபார்த்திருந்தால் ‘அண்ணாதுரை’ இன்னும் உயரத்திற்கு போயிருப்பார்.