பால்ய பொழுதொன்றில்



- குலசிங்கம் வசீகரன்

பருத்தித்துறை மருதடி வைரவர் கோயிலடியில் செழியன் நடந்தான். உயர்ந்து வளர்ந்திருந்த மருதமர நிழலில் வைரவர் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தார். மருதமர குளிர்மை வீதியின் வெம்மையை சற்றே தணித்தது. செருப்பைக் கழற்றிவிட்டு திருநீற்றை பூசி, நீர்த்தன்மை குறைந்திருந்த சந்தனத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டான். சூலத்தை கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்து விட்டு குனிந்த தலை நிமிராமல் நடக்கத் தொடங்கினான். வகுப்புக்குத் தேவையான கொப்பிகள் தோளில் உள்ள துணிப்பைக்குள். சீ.எம். இட்யூஷ னில் மூன்று மணிக்கு வகுப்பு. நிமிர்ந்து பார்க்காமலேயே நடந்தாலும் தன்னை தாண்டிப்போவது சைக்கிளா, மோட்டார்சைக்கிளா அல்லது வேறு வாகனமா என்பது செழியனுக்கு நன்றாக விளங்கியது.

யாராவது தெரிந்தவர்கள், தான் நடந்து போவதைப் பார்த்து, ‘‘வாடாப்பா... இறக்கிவிடுறன்...’’ என்று கேட்டு விடுவார்களோ என்ற எண்ணத்தில் தலையை நிமிர்த்தவேயில்லை. ‘எனக்கென்று சைக்கிள் இல்லை. அதனால் யாருடனும் டபிள்ஸ் போவதில்லை...’ மனசுக்குள் ஒரு வன்மம்.‘ஏன் கடவுள் எனக்கு மட்டும் இப்பிடி பண்ணிடறார்? கூடப்படிக்கிற கன பெடியள் சைக்கிள்ள வாறாங்கள். நான் மட்டும்தான் நடந்து போறன்...’ இதுதான் செழியனின் மனதிலுள்ள கோபம். செழியனின் தந்தை ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர். தாயாரும் ஓர் ஆங்கில ஆசிரியர்தான். செழியன் இரண்டாவது பிள்ளை. ஓர் அக்கா, ஒரு தங்கச்சி என அளவான குடும்பம்.

இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்றுவிட்டு இந்த வருமானத்தில் எவ்வாறு அவர்களைக் கரையேற்றுவது என்ற எண்ணத்தில் அரசாங்க உத்தியோகத்தில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டு வெளிநாடு செல்ல தீர்மானித்தார் செழியனின் தந்தை. ஆனால், தாய்க்கு அதில் சம்மதமில்லை. தந்தையோ தன் நண்பர்கள் சிலர் அவ்வாறு சென்று நல்ல வருமானத்தை ஈட்டுவதாகக் கூறி, தான் நினைத்தபடியே வெளிநாடு சென்றார். அதற்காக சில லட்சங்கள் கடனும் பட்டார். வெளிநாட்டு வருமானத்தில் விரைவிலேயே கடனையும் திருப்பிக் கொடுத்து பிள்ளைகளுக்கும் பணம் சேர்க்கலாம் என நம்பினார்.

ஆனால், போன நாட்டில் அவர் எண்ணியபடி வருமானத்தை ஈட்டமுடியவில்லை. கடனாக வாங்கிய பணத்திற்கான வட்டியும் முதலுமே அவரால் அனுப்பக் கூடியதாக இருந்தது. போதாததற்கு ஒருமுறை வங்கியில் போடுவதற்கென தபாலில் அனுப்பியிருந்த காசோலையை கொழும்பு தபாலகத்தில் வேலைபுரிந்தவர்கள் சிலர் எடுத்து காசாக்கியிருந்தார்கள். அதனால் ஒருமாதம் வட்டியும் முதலும் செலுத்த முடியவில்லை. கடந்தமுறை விடுமுறையில் வந்தபோது கொழும்பிலேயே நின்று பொலீசில் முறைப்பாடுகள் செய்து அலைந்து திரிந்து விட்டுத்தான் ஊருக்கு வந்திருந்தார். தாய்க்கு இவையெல்லாம் மிகவும் மன உளைச்சலையும் வேதனையையும் கொடுத்தது.

‘‘அப்பவே நான் சொன்னனான். உந்த வெளிநாட்டு வேலை ஒண்டும் தேவையில்லை, கஞ்சியோ கூழோ எல்லாரும் ஒண்டா இருந்து குடிப்பமெண்டு...’’தந்தைக்கு அது இப்போது விளங்கியிருந்தாலும் காலம் கடந்த ஞானமாகவே இருந்தது. இடைநடுவில் வேலையை விட்டுவர முடியாத நிலை. அவர் விடுமுறை முடிந்து செல்லும் முன்னர் காசோலையை மாற்றி பணத்தை எடுத்தவர்களை கண்டுபிடித்த பொலீசார் பணத்தை மீளவும் தந்தைக்கு வழங்கினார்கள். அதோடு அந்த பிரச்னை ஓரளவு ஓய்ந்தாலும், வட்டிப்பணம், முதல் என்பவற்றையே அவரால் ஒவ்வொரு மாதமும் அனுப்ப முடிந்தது. இப்போது தாயின் வருமானம் மட்டுமே வீட்டுச் செலவுகளுக்கு.

தந்தை வெளிநாட்டில் வேலை, தாய் அரச உத்தியோகம். ஆனாலும் வருமானம் அன்றாடச் செலவுகளுக்கே போதுமானதாக இருக்கிறது. பிள்ளைகளுக்கு அத்தியாவசிய விடயங்களில், முக்கியமாக சாப்பாட்டில் எந்தவித குறையும் விடக்கூடாது என்பதில் தாய் கவனமாக இருப்பார். அப்படி இப்படி என்று கொஞ்சம் மிச்சம்பிடித்து சேமித்தாலும் அதுதான் வருடப்பிறப்பு, தீபாவளி, பிறந்தநாள் என்று மேலதிக செலவுகள் வரும்போது கைகொடுக்கும். இருந்தாலும் அந்தமாதிரியான விசேட தினங்களுக்காக அனைவருக்கும் புது ஆடைகள் வாங்குவதென்பது கூட சிலவேளைகளில் முடியாமல் போய்விடுகிறது. இவ்வாறான நிலையில் செழியனின் மனக்குமுறலை தாயால் எவ்வாறு உடனடியாகத் தீர்த்து வைக்க முடியும்?

செழியன் இரவில் படுக்கையில் மற்றவர் அறியாவண்ணம் தன் நிலையை பெரிய சோகமாக நினைத்து வராத அழுகையை வலுக்கட்டாயமாக வரவைத்து அழுவான். அதேபோலத்தான் பாடசாலைக்கும் ட்யூஷனுக்கும் போகும்போதெல்லாம் யாரோடும் டபிள்ஸ் போக மாட்டான். எல்லாம் ஒருவித வீம்புதான். அக்காவிடம் மட்டும் தன் ஆசையைச் சொன்னான். தமக்கையாருக்கு தம்பி மீது பாசம் அதிகம். உருகி உருகி அன்பைப்பொழிவார். தம்பியார் படுக்கையில் அழுவதும் அதற்கான காரணமும் தமக்கைக்குத் தெரிந்தே இருந்தது. தம்பியுடன் கல்வி கற்கும் மற்றைய பெடியள் பலரும் சைக்கிளில் பாடசாலைக்கு, ட்யூஷனுக்கு எல்லாம் சென்று வரும் போது தன் தம்பி மட்டும் நடந்து போய் வருவது அவருக்கும் மிகப்பெரிய குறையாகவே தெரிந்தது.

இறுதியில் தம்பியும் வாய்விட்டு தனது விருப்பத்தைக் கேட்டதும், தாயிடம் சென்று, “அம்மா, தம்பிக்கு உடன சைக்கிள் ஒண்டு வாங்கிக் குடுங்கோ. அவனும் மற்ற பெடியள் மாதிரி சைக்கிள்ள போய்வரோணும்...” என்றார். தாய்க்கும் ஏற்கனவே ஓரளவு விஷயம் விளங்கியே இருந்தது. செழியன் நடந்தே எங்கும் போய்வருவதைப் பார்க்கும்போதெல்லாம் எப்படியாவது மகனுக்கு சைக்கிள் ஒன்று வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று  எண்ணியிருந்தார். மகள் வந்து சொன்னதும், ‘‘அவன் நடந்து திரியிறது எனக்கும் கவலைதான் பிள்ளை. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளட்டும். அடுத்த மாதம் அரியேர்ஸ் வர இருக்கு. வாங்கிக் குடுக்கிறன்...” என்றார்.

தாய் சைக்கிள் வாங்கித்தர சம்மதம் தெரிவித்து விட்டார் என்பதை அறிந்த நேரத்தில் இருந்து செழியனின் கால் நிலத்தில் படவில்லை. அடிக்கடி மருதடியில் இருந்த ராஜன் சைக்கிள் கடைக்கு போய் அங்கு நிற்கின்ற சைக்கிள்களைப் பார்ப்பதும், என்ன என்ன சோடனை செய்யலாம், ஒவ்வொன்றும் என்ன விலை என்று விசாரிப்பதிலுமே கூடிய நேரத்தை செலவிட்டான். அடுத்த மாத இறுதியில் அம்மாவின் சம்பள அரியர்ஸ் கிடைத்து சைக்கிள் வாங்கும் நாளும் வந்தது. மாலையில் செழியனையும் கூட்டிக்கொண்டு தாயார் கடைக்கு புறப்பட்டார்கள். தமக்கைக்கு கைகாட்டிவிட்டு துள்ளல் நடை நடந்தபடி தாயோடு புறப்பட்டான் செழியன். சைக்கிள் கடைக்கு இருவரும் சென்றார்கள்.

இவர்களைக் கண்டதும் முதலாளி, “என்ன டீச்சர், மகன் ஒவ்வொரு நாளும் கடைக்கு வந்து சைக்கிள்களை சுத்தி சுத்தி பாத்திட்டு போறார், சைக்கிள் ஒண்டு வாங்கிக் குடுங்கோவன்...” என்றார், “ஓம், அதுக்குதான் வந்தனாங்கள். நல்ல சைக்கிளா ஒண்டு தம்பி கேக்கிற மாதிரி வடிவா பூட்டிக் குடுங்கோ...’’ “அவற்ற விருப்பப்படியே நல்லதா ஒரு சைக்கிள் பூட்டிக் குடுக்கிறன் டீச்சர்...” என்று கூறியபடி கடையின் உள்ளே திரும்பி வேலைக்கு நின்ற பெடியனைப் பார்த்து, “தம்பியை உள்ள கூட்டிப்போய் எந்த சைக்கிள் வேணும் எண்டு கேட்டு, அதுக்குத் தேவையான சாமான்களையும் எடுத்துக்கொண்டு வா...’’ என்றார்.

செழியன் கடைப்பெடியனுடன் உள்ளே சென்று, தான் பார்த்துவைத்திருந்த லுமாலா சைக்கிளைக் காட்டினான். அதை கொண்டு வந்து கடைவாசலில் விட்டுவிட்டு உள்ளே சென்று சொக்கன்சோர், ரோலிங் பெல், ஒரிஜினல் லுமாலா சீட், பார் கவர், சில்லுக்குரிய பூக்கள், அழகிய மட்காட் லைட் என செழியன் கற்பனைசெய்து வைத்திருந்த சைக்கிளை உருவாக்கத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொண்டுவந்து கரியரில் வைத்தான்.
‘‘சேர்விஸ் பண்ணி எல்லாம் பூட்ட ஒன்பதினாயிரத்தி அறுநூறு வருது டீச்சர்...’’ என்றார் முதலாளி. அம்மா காசை எண்ணிக்கொடுத்து சீட்டை வாங்கினார்.

செழியன் சைக்கிளை பொருட்களுடன் சேர்த்து மெதுவாக உருட்டிக்கொண்டு கடையைச் சுற்றி பின்புறம் சென்றான். அங்குதான் சேகரம் அண்ணாவின் சைக்கிள் திருத்தும் கடை இருக்கிறது. ராஜன் சைக்கிள் கடைக்கு தேவையான சைக்கிள்களை பூட்டிக் கொடுப்பதும், தனியாக திருத்த வேலைகளும் செய்து கொடுப்பார்.

சேகரம் அண்ணா சைக்கிள் திருத்துவதை வகுப்பு முடிந்து வரும் வழியில் சில வேளைகளில் பாத்துக்கொண்டு நிற்பது செழியனின் பொழுதுபோக்கு. அதனால் ஏற்கனவே சேகரம் அண்ணாவுடன் செழியனுக்கு அறிமுகம் இருந்தது. அண்ணனைக் கண்டதும் மகிழ்ச்சிபொங்க, ‘‘சேகரம் அண்ணை, இது என்ர சைக்கிள். அம்மா வாங்கித்தந்தவ. வடிவா கழுவிப்பூட்டித் தாங்கோ. முதலாளி கழுவிப்பூட்டவும் சேர்த்து காசு எடுத்திட்டார்!’’ என்றான்.

(அடுத்த இதழில் முடியும்)

குதிரையில் பர்ச்சேஸ்!
மெக்சிகோவின் அகாபுல்கோவிலுள்ளது ஆக்‌ஷோ சூப்பர் மார்க்கெட். கஸ்டமர் ஒருவர் தனது வாகனத்தில் கடைக்குள்ளே வந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தனது குதிரையில் அமர்ந்தபடி கடைக்குள் வந்து பீர் பர்ச்சேஸ் செய்ய முயன்றார். பீதியான ஊழியர்கள் பீரைக் கொடுத்து குதிரைக்காரரை அனுப்பினார்கள். சிசிடிவியில் பதிவாகியுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைல்டு ஹிட்.

நாய் ஹாரன்!
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள நானைமோ பார்க்கில் ஒருவர் தன் காரை தன் செல்ல நாயுடன் நிறுத்திவிட்டு உலாவச்சென்றார். நாயும் எவ்வளவு நேரம் வெயிட் செய்யும்? நாய் அடித்த ஹாரனில் பார்க்கே மிரண்டது. பின் செக் செய்து பார்த்ததில், அப்பாவியாக ஸ்டீரிங்கில் பாதம் வைத்திருந்த நாய்தான் ஓனரை டென்ஷனாகி அலர்ட் செய்திருக்கிறது எனத் தெரிந்திருக்கிறது.

ஜிக்ஸா சாதனை!
அமெரிக்காவின் மசாசூசெட்ஸைச் சேர்ந்த ஜாக் ப்ரெய்ட் 6 அடி நீளம், 22 அடி அகலம் கொண்ட டிஸ்னி ஜிக்ஸாவை மூன்று மாதங்களாகப் போராடி தீர்த்திருக்கிறார். ஜெர்மனியின் ஜிக்ஸா நிபுணர் ராவன்பர்க்கரின் டிசைன் இது. 40,230 ஜிக்ஸா துண்டுகளை ஒன்றிணைத்து சாதனை படைத்த முதல் அமெரிக்கர் ஜாக்தான்.