மொபைல் லைப்ரரி



அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இலவசமாக இயங்கும் நூலகம் இது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஓர் அரசுப் பள்ளி. மதிய உணவு இடைவேளை. ஆனால், குழந்தைகள் யாரும் சாப்பிடச் செல்லாமல் பள்ளிக்கு அருகிலிருக்கும் மரத்தடியில் கால் கடுக்க நிற்கின்றனர். வெகுநாட்கள் கழித்து சந்திக்கப்போகிற நண்பனுக்காக காத்துக்கொண்டிருப்பது போல அவர்களின் முகத்தில் ஏக்கமும் ஆர்வமும் பளிச்சிட்டன. அப்போது குழந்தைகளை நோக்கி டாடா ஏஸ் வண்டி வந்து கொண்டிருந்தது. வண்டி தங்களை நெருங்கி வருவதைப் பார்த்த குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர். அந்த வண்டியில் ஒரு கன்டெய்னர் பொருத்தப்பட்டிருந்தது.

அதை பல்வேறு புத்தகங்களின் அட்டைப்படங்களும், ‘இதோ! உங்கள் புதிய நண்பர்கள்...’ என்ற வாசகமும் அலங்கரித்திருந்தது. உற்றுப்பார்த்தபிறகுதான் தெரிந்தது அது வெறும் வண்டியல்ல; அழகான நடமாடும் நூலகம் என்று! குழந்தைகள் வரிசையாக நின்று தங்களுக்குத் தேவையான புத்தகங்களை முறைப்படி பெற்றுக்கொண்டு அதை நெஞ்சோடு அணைத்தபடி பள்ளி வளாகத்துக்குள் திரும்பினார்கள். இது எப்பவாவது நடக்கும் அரிய நிகழ்வு அல்ல. தினந்தோறும் திருவண்ணாமலையின் கிராமப்புறங்களில் இருக்கும் அரசுப் பள்ளியில் அரங்கேறும் அழகான நிகழ்வு! இந்த நடமாடும் நூலகம், ‘ரேகன்போக் இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமானது.

நடமாடும் நூலகம் மட்டுமல்ல, நடமாடும் மருத்துவமனை, மாலைநேரப் பள்ளி, சுற்றுச்சூழல் பராமரிப்பு... என பல்வேறு சமூகம் சார்ந்த சேவைகளில் இந்த தொண்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.‘‘நமக்கெல்லாம் கிடைத்த நல்ல விஷயங்கள் எதுவுமே நம் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. எவ்வளவோ அருமையான விஷயங்களை நம்முடைய குழந்தைகள் இழந்து வருகின்றனர். அதில் முக்கியமானது வாசிப்புப் பழக்கம். சமுதாயத்தில் நிகழ்கின்ற பல்வேறு பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது நம்மிடையே குறைந்துபோன வாசிப்புப் பழக்கம்தான். அதனால் குழந்தைகளிடம் அப்பழக்கத்தை ஏற்படுத்த ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றியது.

அதற்கான சிறுமுயற்சிதான் இந்த நடமாடும் நூலகம்...’’ மிளிரும் கண்களுடன் பேசுகிறார் மதன்மோகன். ரேகன்போக்கின் நிர்வாகி. பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில், பை நிறைய சம்பளத்தில் இருந்தவர். பத்து வருடங்களுக்கு முன்பு வேலையை உதறிவிட்டு சமூக சேவையில் இறங்கிவிட்டார்.‘‘இந்த நடமாடும் நூலகத்தை ஆரம்பித்து ஐந்து வருடங்களாகின்றன. நூலகத்துக்காகவே டாடா ஏஸ் வண்டியை பிரத்யேகமாக வடிவமைத்தோம். ஆனால், டாடா ஏஸ் வண்டியால் நிறைய கிராமங்களுக்குள் நுழைய முடியவில்லை. சரியான சாலை வசதிகள் அங்கில்லை.

அது மாதிரியான கிராமங்களுக்குள்ளும் நடமாடும் நூலகத்தை எடுத்துச் செல்வதற்காக ‘மோட்டார் சைக்கிள் லைப்ரரி’யை ஆரம்பிக்க உள்ளோம். அதற்கான முன்னோட்டம் போய்க் கொண்டிருக்கிறது. கடந்த வருடம் மட்டும் 11 ஆயிரம் புத்தகங்களை குழந்தைகளிடம் விநியோகித்திருக்கிறோம். நூலகத்துக்குத் தேவையான புத்தகங்களை நாங்களும் வாங்குகிறோம். பவா.செல்லதுரை, சைலஜா, என்.சொக்கன் போன்ற எழுத்தாளர்களும், மற்ற நல்ல மனிதர்களும் நிறைய புத்தகங்களை எங்களுக்கு கொடையாக வழங்கியிருக்கின்றனர். நாங்கள் செய்வதைப் பார்த்து மற்ற ஊர்களில் இருப்பவர்களும் செய்யத் தொடங்கினாலே போதும். அதுவே எங்களுக்குக் கிடைத்த வெற்றிதான்.

போலவே நிறைய வீடுகளில் பரண்களில் பல வருடங்களாக பல புத்தகங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறது. அவற்றை எங்களுக்குக் கொடுத்தால் அதை குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்போம்...’’ என்கிற மதன் மோகனைத் தொடர்ந்து நூலகர் மற்றும் நடமாடும் நூலகத்துக்குப் பொறுப்பாளராக இருக்கும் ஜெயராமனிடம் பேசினோம்.‘‘ஆரம்பத்தில் காய்கறி வைக்கும் பிளாஸ்டிக் பெட்டியில் புத்தகங்களை வைத்து கிராமம் கிராமமாக பழைய பைக்கில் செல்வேன். அதற்கு முன் எந்த கிராமத்துக்கு செல்லப் போகிறேனோ அந்த கிராமத்துக்கு சென்று புத்தகம் வரப் போகும் தகவலை முன்கூட்டியே சொல்லிவிடுவேன். அவர்களும் தங்கள் குழந்தைகளிடம் விஷயத்தை தெரியப்படுத்தி விடுவார்கள்.

குறிப்பிட்ட கிராமத்துக்கு சென்று விசாலமான இடத்தில் புத்தகங்களைப் பரப்புவேன். தங்களுக்குத் தேவையான நூல்களை ஆர்வத்துடன் குழந்தைகள் எடுத்துக் கொள்வார்கள். இப்படி ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கிராமம். இந்த வகையில் திருவண்ணாமலையில் இருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் சென்றிருக்கிறேன். மழை வரும்போது அணிந்திருக்கும் சட்டையைக் கழற்றி புத்தகப் பெட்டியை மூடி பாதுகாப்பேன்...’’ உணர்வு பெருக்கெடுக்க பேசும் ஜெயராமன் புத்தகங்கள் கொடுப்பதோடு குழந்தைகளிடம் கதைகளையும் சொல்கிறார்.

மற்ற நூலகங்களைப் போலவே இந்த நடமாடும் நூலகமும் சில விதிமுறைகளுடன் செயல்படுகிறது. இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கானது. இதில் உறுப்பினராகச் சேரும் குழந்தைகளுக்கு மட்டுமே புத்தகங்களை விநியோகம் செய்கிறார்கள். உறுப்பினர் அட்டையையும் அவர்களுக்கு வழங்குகிறார்கள். திருவண்ணாமலையில் இருக்கும் அரசுப்பள்ளியில் ஆறாவது முதல் ஒன்பதாவது வரை படிக்கும் 90% குழந்தைகள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். புத்தகத்தை எடுக்கும் குழந்தை அதை 15 நாட்களுக்குள் திருப்ப வேண்டும். நேரடியாக புத்தகங்களை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கிறார்கள். மட்டுமல்ல, உறுப்பினராக கட்டணம் எதுவுமில்லை!

திங்கள் முதல் வெள்ளி வரை பள்ளி நாட்களில் மட்டும் இந்த நடமாடும் நூலகம் செயல்படுகிறது. புத்தகம் பெறுதல், திருப்பித் தருதல் போன்றவற்றை கம்ப்யூட்டரில் பதிவு செய்கிறார்கள். ‘‘இந்த வண்டியில் நானும், டிரைவரும் பள்ளிக்கு செல்கிறோம். சில நேரங்களில் தன்னார்வலர்களும் கலந்து கொள்வார்கள். காலை 10 மணிக்கு கிளம்பினால் மாலைதான் திரும்புவோம். காலையில் ஒன்று, மதியம் ஒன்று என குறைந்தபட்சம் இரு பள்ளிகளுக்காவது ஒவ்வொரு நாளும் சென்றுவிடுவோம். ஆசிரியர்களும், தலைமையாசிரியர்களும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்...’’ என்று சொல்லும் ஜெயராமன், கொடுத்த புத்தகத்தை திருப்பி வாங்கும்போது சம்பந்தப்பட்ட குழந்தை அந்நூலை படித்திருக்கிறதா என்று கேள்விகள் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்கிறார்!