கவிதை வனம்



வெறுப்பை பாவித்தல்

இந்த வெறுப்பை நான்
ஒரு காதலிபோல் நேசித்தேன்
தொட்டிச் செடி போல் வளர்த்தேன்
நாணயங்கள் போல்
வழியெங்கும் செலவழித்தேன்
சமயங்களில் வெறுப்பின் நகங்கள்
குளிக்கும்போது என் உடலையே கீறின
சிறிய பறவைகளுக்கு
தானியம் வீசுவதாய்
அதை உணர்ந்தேன்
விருந்து மேசையில்
என்னையே போல்
கோபமாய் இரைந்தது
நண்பனை விட்டுக்கொடுக்காதவனாக
நடந்துகொண்டேன்

என் இதயம் போலவே
ஒருத்தியை முத்தமிட முயன்றது
நான் அவளை
சமாதானப்படுத்தினேன்
கொடும்பகை அழிப்பது போல
நண்பனையே கொன்றது
அதற்கான தர்க்கங்களை
உருவாக்கினேன்
ஒரு சவப்பெட்டிக்காரனிடம்
தன்னை
என் பெயர் சொல்லி
அறிமுகம் செய்தபோதுதான்
மெல்ல அதிர்ந்தேன்

- இளங்கோ கிருஷ்ணன்