ஹிப் ஹாப் ஷர்ட்ஸ்!



- ஷாலினி நியூட்டன்

ஹிப் ஹாப் சாங்ஸ் தெரியும். ஹிப் ஹாப் டான்ஸ் தெரியும். ஏன்... நம்மூர் ஹிப் ஹாப் ஆதியைக் கூட தெரியும். ஆனால், ஹிப் ஹாப் ஸ்டைல் ஃபேஷன் தெரியுமா? இதோ ஆண்களின் ஃபேஷன் உலகில் அமைதியாக அடியெடுத்து வைத்திருக்கிறது அடுத்த ட்ரெண்ட்... ஹிப் ஹாப் ஸ்டைல் அல்லது சமச்சீரற்ற (Asymmetrical)

ஆண்கள் சட்டைகள்!
‘அடடே! பார்க்க வித்யாசமா இருக்கே...’ புருவம் உயர பிடித்தோம் டிசைனர் தினேஷை. ‘‘இந்த வருடம் என் கான்செப்ட்டே இந்த லாங் ஏசிம்மெட்ரிகல் ஷர்ட்ஸ்தான். இதுல நான் சில ராஜாக்கள் கால டிசைன்களையும் சேர்த்திருக்கேன்...” என ஜாலியாக ஆரம்பித்தார் தினேஷ். ‘‘என் கணிப்பு சரினா இந்த ஸ்டைல் அடுத்த பத்து வருஷங்களுக்கு நிற்கும். ஆனாலும் இப்ப ஒரு சின்ன தயக்கம் இருக்கு. இந்த ஸ்டைல் ஷர்ட்ஸ், பெண்கள் பயன்படுத்தற குர்தா மாதிரி இருந்திடுமோ... ஒரு பெண்ணுக்கான சாயல் கொடுத்திடுமோன்னு நினைக்கிறாங்க.

ஆனா, இது பக்கா மேன்லி உடை. காரணம் எந்த உடை போட்டாலும் ஆண்களுடைய நீண்ட உடல் வடிவம் தெரிஞ்சாதான் கம்பீரம் மிளிரும். சாதாரண ஷர்ட் அணியறப்ப பின்பக்கம் தானா தூக்கிக்கும். ஆனா, இந்த ஸ்டைல்ல அந்தப் பிரச்னையே இல்ல. பரந்த தோள்பட்டை, நீண்ட உடல்வாகு, ஸ்லிம் ஃபிட்னு ஹேண்ட்சம் லுக் தானாக கொடுத்துடும். இன்னொண்ணு தெரியுமா? உயரம் குறைவான நபர்களையும் நீண்ட உடல்வாகு இருப்பதா இந்த உடை காட்டும். சாதாராண மனிதனை ‘விஐபி’யாக மாத்துறதுதான் என் கான்செப்ட்.

இந்த உடை கொஞ்சம் விஐபி லுக்கோட வயது குறைந்த தோற்றமும் கொடுக்கும். ஆண்களோட பெரிய பிரச்னை என்ன தெரியுமா? அவங்ககிட்ட எக்கச்சக்கமா ஷர்ட்ஸ், டி ஷர்ட்ஸ் இருக்கும். ஆனா, ஜீன்ஸ், பேண்ட் எல்லாம் கொஞ்சமா இருக்கும். இந்த சூழல்ல இந்த ஹிப் ஹாப் ஷர்ட்ஸ் கை கொடுக்கும். எந்த ஜீன்ஸ் அல்லது பேண்ட்டுக்கும் இது சூட் ஆகும். சட்டை என்ன நிறமோ அதுக்கு ஏத்த மாதிரி லோஃபர் ஷூஸ் அணிஞ்சா டிரெண்டியா இருக்கும். இப்பவே இந்த உடையை வடக்குல பாப் பாடகர்களும், ஹனி சிங்கும் அணியத் தொடங்கிட்டாங்க. அவ்வளவு ஏன்... நம்ம அனிருத் கூட இந்த ஷர்ட்டை அணியறார்...’’ என்கிறார் தினேஷ் குமார்.

மாடல்கள்: சந்தோஷ் பிரதாப் (நடிகர்), தணிகை, ரஃபாத், அனிருத், நிஷு ஸ்டெயின், ரவி, ரவி கணேஷ், ஷேஷு வரதன், வீரா.
Co-Ordinator: அஹ்மத் அன்சாருதீன் & விசாகன்.
ஸ்டைலிஸ்ட் மற்றும் டிசைனிங்: தினேஷ் குமார்.
படங்கள்: shutter spark s2 studios