நியூஸ் வே



* உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சானுக்கு கடந்த வாரம் ‘கௌரவ ஆஸ்கர் விருது’ வழங்கப்பட்டது. விருது மேடையில் அவர், ‘‘நான் இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்பதை என்னால்  இன்னமும் நம்ப முடியவில்லை. ஒரு கனவைப் போல் இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு என் தந்தையுடனோ அல்லது தாயுடனோ ‘ஆஸ்கர் விருது’ வழங்கப்படும் நிகழ்ச்சியைக் காணும்போது, என் அப்பா ‘இவ்வளவு படத்தில் நடித்துவிட்டாய், எப்போது நீ ஆஸ்கர் விருது வாங்கப்போகிறாய்?’ எனக் கேட்பார். நான் அப்பாவைப் பார்த்துச் சிரித்துவிட்டு, ‘நான் காமெடி, ஆக்‌ஷன் படங்களில் நடிப்பவன்’ எனச் சொல்லி சமாளித்துவிடுவேன்.

23 வருடங்களுக்கு முன்பு நண்பர் சில்வஸ்டர் ஸ்டாலனின் வீட்டுக்குச் சென்றிருந்த போதுதான் இந்த விருதை முதல் முதலாகப் பார்த்தேன். அதை தொட்டுப் பார்த்து, முத்தமிட்டேன். அதில் இன்னும் என் கை விரல் ரேகைகள் படிந்திருக்கும் என நம்புகிறேன். அதற்குப் பிறகு எனக்கும் இந்த விருது வேண்டும் என்று அடிக்கடி எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். திரைத்துறைக்கு வந்து 56 வருடங்கள், 200க்கும் மேற்பட்ட படங்கள், பல ஏற்ற, இறக்கங்கள், பல எலும்புகள் முறிந்தபிறகு கடைசியாக இதை அடைந்திருக்கிறேன். இதயத்தின் அடியாழத்தில் இருந்து எல்லாருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’ என நெகிழ்ச்சியுடன் அவர் பேசப்பேச அரங்கமே அதிர்ந்தது.

* எல் என் ஜி (LNG) எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் முதல் பஸ்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது ேகரள மாநிலம். சமீபத்தில், மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் கொடியசைத்து இதனைத் தொடங்கி வைத்துள்ளனர். இந்த பஸ் ஐம்பது சதவீதத்திற்கும் குறைவான கார்பனையே உமிழும் என்பது இதன் சிறப்பு.

* முப்பது வயதை எட்டியிருக்கிறார் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இரட்டையர் மற்றும் கலப்புப் பிரிவில் ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர். ஆஸ்திரேலியா ஓபன் டைட்டில், இரட்டையர் பிரிவில் டாப் மோஸ்ட் எனக் கடந்த வருடம் அவருக்கு சிறப்பாக அமைந்திருந்தது. அது தொடர வேண்டும் என பெங்கால் முதல்வர் மம்தா பானர்ஜி, நடிகை த்ரிஷா உள்ளிட்ட பலரும் சானியாவுக்கு வாழ்த்துகள் சொல்லி உற்சாகப்படுத்தி உள்ளனர். மூக்குத்தி தேவதைக்கு வாழ்த்துகள்!

* ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த திட்டத்துக்கு மூலகர்த்தாவாக இருந்தவர் அவுரங்காபாத்தைச் சேர்ந்த ஆடிட்டர் அனில் பொகில்.   கறுப்புப் பணத்தை ஒழிக்க சரியான வழி 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிப்பதுதான் என்று தொடர்ந்து தன் சகாக்களிடம் சொல்லிவந்திருக்கிறார் அனில். கடந்த ஜூலை மாதம் மோடியை சந்தித்துப் பேசும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. இருவருக்கும் இடையே நிகழ்ந்த  உரையாடல்தான் மோடியின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பிள்ளையார்சுழி போட்டிருக்கிறது என்ற தகவல் கசிந்திருக்கிறது.

* நவீன வாழ்க்கைச் சூழலால் ஆட்டிஸம் போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்தக் குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றை உருவாக்கி வருகின்றனர் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள். இந்த ஆப் மூலம் இரண்டு வயது குழந்தைகளின் கண்களைக் கண்காணித்து அக்குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் ஆட்டிஸத்திற்கான அறிகுறிகள் ஏதும் உள்ளதா என துல்லியமாகக் கண்டறிய முடியும். இதனால் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சையளித்து அவர்களை குணப்படுத்த முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்!

* யோகா குரு பாபா ராம்தேவ், பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனும், தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சருமான தேஜ் பிரதாப்பை தனது சகோதரர் மகளுக்கு மணமுடிக்க முனைப்புடன் பேசி வருவதாக தகவல்கள் பரபரக்கின்றன. இதன்மூலம் பீகாரில் பதஞ்சலி பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஏற்கனவே, லாலுவின் மருமகன் பதஞ்சலியின் பீகார் ஏஜென்டாக இருக்கிறார். ஆனால், ராம்தேவ் பி.ஜே.பி அனுதாபி. அதற்கெதிராக செயல்படுபவர் லாலு. இருவரும் சேர்ந்தால் அரசியல் சூழல் எப்படி மாறும் என இப்போதே கணக்குப்போடுகின்றன ஊடகங்கள்!