குட்டிச்சுவர் சிந்தனைகள்



-ஆல்தோட்ட பூபதி

நாட்டுல இன்னைக்கு தேதிக்கு கும்பகோணத்துல இருந்து கூடுவாஞ்சேரிக்கு ஒரே நாளுல வீட்டை மாத்திடலாம், சகிப்புத்தன்மை குறைஞ்சிடுச்சுன்னு நாட்டை மாத்திடலாம், ஆனா ஐநூறு ரூபா, ஆயிரம் ரூபா நோட்டை மாத்தத்தான் ரொம்பவே கஷ்டப்படணும் போல. இப்ப பிரச்சனையெல்லாம் ஒரே ஒரு 500 ரூபா வச்சிருக்கிறவனுக்கும் அளவுக்கு மேல 500 ரூபா வச்சிருக்கிறவனுக்கும் தான். இத்தனை நாளா பணம் இருக்கிறவன் நிம்மதியா இருந்தான், இன்னமும் கொஞ்ச நாளைக்கு பணமில்லாதவன் நிம்மதியா இருப்பான்.

ஆனா ஒண்ணு, ஒரு வாரமா,  ஐநூறு, ஆயிர ரூபா நோட்டுல இருக்கிற காந்திய விட நூறு ரூபா நோட்டு காந்தி கொஞ்சம் நக்கலாத்தான் சிரிக்கிறாரு. பூரா ட்ராபிக் போலீசும் பேங்க் வாசல்களில் ட்யூட்டி பார்த்துக்கிட்டு இருக்காங்க. எங்கூரு ஸ்டேட் பேங்க்குள்ள இருக்கிற கும்பலை பார்த்துட்டு, ஏதோ எக்ஸிபிஷன்னு பீஹாரி ஒருத்தன் பானிபூரி விற்க உட்கார்ந்துட்டான். இன்னமும் 2 வாரங்களுக்கு வங்கிகளில் பெரும் வரிசை நிற்கும் என்பதால், ரேஷன் பொருட்களை வங்கிகளில் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

2 ஐநூறு வச்சிருக்கிற நாமளே இப்படி தடுமாறுறோமே, திருப்பதி வெங்கடாஜலபதிலாம் நிம்மதியா தூங்கியிருப்பாரு? பாவம் உண்டியல் முழுக்க பழைய நோட்டுகளைச் சேர்த்து வச்சிருக்கிற கடவுளுக்குக் கூட மனுசன்தான் மாத்திக் கொடுக்கணும். இதுல புது 2000 ரூபா நோட்டுல ஜிபிஎஸ் இருக்கு, ப்ளூ டூத் இருக்கு, ஸ்கேனர் இருக்கு, பிரின்டர் இருக்குன்னு இவனுங்க கிளப்புற புரளி வேற.

ஒருத்தன்,  புது 2000 ரூபா நோட்டுக்கு நடுவுல இருக்கிற கம்பி தங்கமாம், சந்தேகமிருந்தா கிழிச்சுப் பாருங்கன்னு சொல்றான். ஏற்கனவே பொண்ணுங்ககிட்ட கொடுத்தா பணம் வராது, இதுல 2000 ரூபா நோட்ட pink, lilac கலர் காம்பினேஷன்ல அடிச்சிருக்காங்க, சோலி சுத்தம். 2000 ரூபா நோட்டுல கலர் போகுதுங்கிறான் ஒருத்தன். இவனுங்க புது நோட்டு வாங்குனானுங்களா இல்ல பொண்டாட்டிக்கு பாவாடை வாங்குனானுங்களா? பேங்க் ஆபீசர் சார், எங்க ஏரியா மளிகைக்கடைக்காரர் மாற்று நோட்டு / சில்லறை கேட்டு வரப்ப மொத்தத்துக்கும் சாக்லேட்  கொடுத்திடுங்க, புண்ணியமா போகும்.

பெட்ரோல் விலை எட்டணா ஏறப்போகுதுன்னு செய்தி வந்தா ரெண்டு மணி நேரம் பெட்ரோல் பங்க் வரிசைல நிற்க ஓடுறது நம்மாளுங்கதான்; துணிக்கடையில ஆயிரம் ரூபாய்க்கு துணியெடுத்தா ஐநூறு ரூபாய்க்கு இலவச கூப்பன் தர்றாங்கன்னு கேள்விப்பட்டா அந்தக்கடை வாசலில் நிற்க ஓடுறது நம்மாளுங்கதான்; எவ்வளவு வேலை வெட்டி இருந்தாலும் ரேஷன் கடையில இலவச வேட்டி சேலை தர்றாங்கன்னு சொன்னா, முதல் ஆளா வரிசைக்கு முந்துறது நம்மாளுங்கதான்;

புள்ளையார் பால் குடிக்கிறாரு, பெருமாளு மோர் குடிக்கிறாருன்னு எவனாவது கிளப்பிவிட்டா பயபக்தியோட கோவில் வாசல்ல க்யூல நிற்கிறதும் நம்மாளுங்க தான்; டிசம்பர் மாசக் கடைசி வரை டைம் இருக்குனாலும், இப்ப 500 ரூபாய், ஆயிரம் ரூபாய மாற்ற வங்கி வாசல்களிலும் ஏடிஎம் வரிசைகளிலும் நிற்கிறதும் நம்மாளுங்கதான். இப்படி வாழ்க்கை முழுக்க எங்க வரிசைனாலும் எந்த வரிசைனாலும் முதல் ஆளாய் போனாலும், வாழ்க்கை என்னும் வரிசையில் எப்பவும் கடைசி ஆளாய் இருப்பதும் இந்த மாதிரியான ஆளுங்கதான்.

ஓவியம்: அரஸ்