உறவெனும் திரைக்கதை



ஈரோடு கதிர்

சாகாவரம் பெற்ற கூடுதல் நஞ்சு இங்கு எத்தனை பூசி மெழுகினாலும் எல்லாமும் எல்லாருக்கும் சமமில்லை. சமமின்மை சட்டத்தில் இருக்கிறதோ இல்லையோ மக்கள் மனதில் நிரம்பியிருக்கின்றது. அந்தச் சமமின்மை எனும் தராசை வைத்துத்தான் ஒவ்வொரு முறையும் எடை போடுகிறோம். குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் தரப்பிற்கு அவகாசம் கொடுக்காமல், அவர்களின் கருத்தை ஒருபோதும் கேட்காமல், தன் போக்கில், தன் விருப்பத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கும் நீண்ட நெடிய வழக்கத்தை மனித சமூகம் ஒருபோதும் கைவிட விரும்புவதில்லை.

அதுவும் பெண்ணுக்கெதிராக பெண்ணுடல் சார்ந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்படும்போது அவளிருக்கும் தட்டு ஒருபோதும் சமநிலையைச் சந்திக்க அனுமதிக்கப் படுவதில்லை. அந்த சமமின்மையைக் காணும் எவருக்கும் அதை நேர்மையாக விவாதிக்கவும் பகிரவும் துணிவிருப்பதில்லை. அந்தச் சமமின்மை அவளை வெகு எளிதாகக் குற்றவாளியாக்கி தண்டித்துவிடுகிறது.

பதினான்கு வயதுச் சிறுமியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பும் அலிக்கு, நான்கு குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும் மனைவி சொரயாவைப் பிடிக்கவில்லை. விவாகரத்து செய்தால் பணம் கொடுக்க வேண்டுமென்பதால் விலக்கிவிட விரும்புகிறான். மிரட்டலுக்கு உட்படும் மதகுரு முல்லா துணைபோகிறான். கணவனின் வதை தாங்காமல் இரு மகள்களோடு தன் அத்தையிடம் அடைக்கலமாகிறாள்.

பிள்ளைகளைக் காக்க வேண்டிய சூழலில், இறந்துபோன தோழியின் பிள்ளை, கணவனுக்கு சமைத்துப்போடும் பணியை முல்லாவின் தீர்மானத்தின்படி ஏற்றுக்கொள்கிறாள். இதை வாய்ப்பாகக் கருதும் அலி, தோழியின் கணவனோடு சொரயாவுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்துகிறான். குற்றத்தை நிரூபிக்க தோழியின் கணவனை மிரட்டி அவனை ஒரு சாட்சியாகவும், தன்னை ஒரு சாட்சியாகவும் அலி முன்னிறுத்துகிறான். முல்லாவின் விருப்பத்திற்கேற்ப ஊரின் மேயர் சொரயாவைக் குற்றவாளியாக அறிவிக்கிறார்.

பொது இடத்தில் கல்லால் அடித்துக் கொல்லுமாறு தீர்ப்பு வழங்கப்படுகிறது. ‘‘ஒருபோதும் அந்த வீட்டில் குற்றமிழைக்கும் சந்தர்ப்பத்தை தான் உருவாக்கவில்லை. ஒரு வார்த்தை கூடுதலாகப் பேசவில்லை, ஒரு நிமிடம் கூடுதலாக இருக்கவில்லை. எப்போதும் வீட்டின் கதவு திறந்தே இருந்தது.தான் குற்றமிழைக்கவில்லை. குற்றத்தை நிரூபிக்கச் சொல்லுங்கள்” எனக் கதறுகிறாள் சொரயா.

வழக்குகளில் கணவன் குற்றம் சுமத்தினால், மனைவிதான் தன் நேர்மையை நிரூபிக்க வேண்டும்; கணவன் மீது மனைவி குற்றம் சுமத்தினால், குற்றம் சுமத்தும் மனைவிதான் அந்தக் குற்றத்தை நிரூபிக்க வேண்டும் எனும் ஆணாதிக்க வரைமுறைகளைக் கொண்டது குப்பாயா எனும் ஈரான் நாட்டின் அந்தக் கிராமம். எழுத்துபூர்வ தீர்ப்பு வீட்டிற்கு அனுப்பி ஒப்புதல் கேட்கப்படுகிறது, ஸஹ்ரா தீர்ப்பு நகலைக் கசக்கி திருப்பியனுப்புகிறாள்.

பயப்படுறியா? எனக் கலங்கும் ஸஹ்ராவிடம், சாவு பயமில்லை, ஆனால் சாவு நிகழும் முறை, எறியப்படும் கற்கள் மற்றும் வலி குறித்து அச்சமாக இருக்கிறதெனக் குலைகிறாள் சொரயா. தன் நகைகளை மகள்களுக்கு அணிவித்து, என்றும் நலம்வாழ வாழ்த்துகிறாள். அவளை அடிப்பதற்கான கற்களை சிறுவர்கள் கொண்டாட்டமாய் சேகரிக்கிறார்கள். பலியிடத்திற்கு சொரயா அழைத்து வரப்பட, கற்களைச் சேகரித்த பிள்ளைகள் இரண்டு கைகளிலும் கற்களைத் தட்டிக் கொண்டாடுகிறார்கள்.

குற்றவாளியென அறிவித்த சொரயாவைத் தண்டிக்க எறியும் கல்லின் மூலம் புனிதம் கிட்டுமென முல்லா அறிவிக்கிறான். கல் எறியும் முன் அவளைப் பேச அனுமதிக்கின்றனர். கூட்டத்தினரையும் குடும்பத்தையும் நோக்கி, “எப்படி இதைச் செய்ய முடிகிறது? நீங்கள் என்னை அறிந்திருக்கும் சாத்தியம் கூடக் கிடையாது. நான் சொரயா, உங்கள் வீடுகளில் இருப்பவள். உங்களோடு உணவு பகிர்ந்து உண்டிருக்கிறேன். நாம் நண்பர்கள்.

உங்களால் இதை எப்படி எனக்குச் செய்ய முடிகிறது? உங்கள் அண்டை வீட்டுக்காரி நான். அன்னையாக, மகளாக, மனைவியாக வீட்டில் இருந்தவள். இதை எப்படி யாரோ ஒருவருக்கு உங்களால் செய்ய முடிகிறது?” என்பவளின் குரலை மனதில் வாங்காத கூட்டம், இது கடவுளின் ஆணை எனக் கத்துகிறது. கைகள் பின்னால் கட்டப்பட்டு, குழியில் நிறுத்தி இடுப்பு மட்டத்திற்கு மூடுகிறார்கள்.

சொரயாவின் தந்தையின் கையில் கற்கள் தரப்படுகின்றன. “அவள் கெட்டுப்போனவள், என் மகளே அல்ல, வாழத் தகுதியற்றவள்” என அந்தத் தந்தை எறியும் நான்கு கற்களும் அவள்மேல் படவில்லை. ஸஹ்ரா, “இது கடவுள் உணர்த்தும் குறிப்பு. இந்த தண்டனை தவறு. அவளை விட்டுவிடுங்கள்” எனக் கதறுகிறாள். கல்லை வாங்கும் அலி, வெறியோடு வீச அது சொரயா நெற்றியைத் தாக்குகிறது. கூட்டத்திலிருக்கும் பெண் ஓங்காரமாய் வெற்றி முழக்கமிடுகிறாள்.

மகன்களின் கையில் கொடுத்து கல் எறிய வைக்கிறான். முல்லா எறிகிறான். ஊர் கல் எறியத் துவங்குகிறது. நிறைவாய் சொரயாவைக் கொன்று, இரத்தத்தில் குளித்த உடலை அப்படியே விட்டுவிட்டு வெற்றியோடு கலைகிறார்கள். ஈரானில் சொரயா எனும் பெண்ணை  கல்லால் அடித்துக் கொலை செய்த உண்மைச் சம்பவத்தை வைத்து 2008ம் ஆண்டு பெர்சிய மொழியில் எடுக்கப்பட்ட ‘ஸ்டோனிங் ஆஃப் சொரயா எம்’ திரைப்படம் ஒட்டுமொத்த பெண் மீதான அநீதிக்கு ஒரு சோற்றுப் பதம்.

உடலளவில் ஆணை விட பெண் பலவீனமாகத் தெரியலாம். எனினும் தான் பலமானவள் என்பதை பெண் எப்போதும் உணர்த்திக்கொண்டே இருக்கிறாள். அந்த ரகசிய உணர்த்துதல் ஆணுக்கு ஏதோ ஒரு புள்ளியில் அச்சத்தைத் தந்திருக்கலாம். ஆண் தரும் ஒரு துளி உயிர்த்திரவத்தை வைத்து, அதைக் கருவாக்கி, உயிராக்கி பிரசவிக்கும் பெண் இயற்கையின் ஒரு மாய ஆளுமை என்பதை மறுக்க முடியுமா? தான் எதனினும் பலம் வாய்ந்தவள் என்பதை ஒவ்வொரு குழந்தைப் பிறப்பிலும் அறிவிக்கிறாள். இயற்கையின் நியதி அதுதானெனினும், ஒரு ஆண் பிரசவ வலி தாங்க முடியுமா என்பதில் சந்தேகம் உண்டு. 

ஆண் ஏதோ ஒரு கட்டத்தில் ஏதேதோ காரணங்களால் பெண்ணைக் கண்டு அஞ்சியிருக்க வேண்டும். அவளை வீழ்த்த திட்டங்கள் வகுத்திருக்கலாம். பெண்ணை எதிர்கொள்ள, வீழ்த்த, தன் கட்டுக்குள் வைக்க அவன்  வகுத்த எளிய வழி பெண்ணின் ஒழுக்கம் குறித்த கற்பிதங்களை நேர்த்தியாக நிறுவியது. அதில் அவன் அடைந்த மிகப்பெரிய வெற்றியென்பது பெண்ணிற்கு எதிராகப் பெண்ணையே பல இடங்களில் நிறுத்தியதுதான். சொரயாவின் நெற்றியை அலியின் கல் தாக்கி அவளைப் பின்னோக்கி வீழ்த்தும்போது ஒரு பெண் கொக்கரிப்பதும்கூட அதன் ஒரு உதாரணம்தான்.

பெண்ணின் ஒழுக்கம் குறித்த புகார்களில், வதந்திகளில், தீர்ப்புகளில், தண்டனைகளிலும்கூட பெண்ணுக்கு எதிராக பெண்ணே நிற்பதை வரலாறெங்கும் காண முடியும். இருபதுகளில் கணவனை இழந்த பெண்ணொருத்தி, எல்லாக் கடமையும் முடித்து நிமிர்ந்து நிற்கையில் உறவுக்கார ஆணோடு நட்பு ஏற்படுகிறது. அந்த நட்புக்குள் பிறழ்வு ஏதும் இருக்கின்றதா என எவருக்கும் உறுதியாய்த் தெரியாது. அந்த நட்பு, சமூகம் கட்டமைத்திருக்கும் புனிதங்களுக்குள் முழுக்க உள்ளடங்கியதாகவும் இருக்கலாம். எவருக்கும் இன்னல் விளைவிக்காத நட்பாகவும் இருக்கலாம்.

ஒருவேளை மனதிற்கும், உடலுக்கும், தனிமைக்கும் தீனிபோடும் ஒரு உறவாகவும்கூட இருக்கலாம். இத்தனை இருக்கலாம்கள் இருந்தபோதிலும், மனிதர்கள் அந்த உறவுக்கு ‘கள்ள உறவு’ எனும் ஒரே ஒரு பெயரைச் சூட்டுவதிலேயே மகிழ்வெய்தினர். அம் மகிழ்ச்சியை வதந்தியாக ஊர் முழுக்க திறம்படப் பரப்பியதில் பெரும்பங்கு பெண்களுக்கே. தன்னை மிகச்சிறந்த முற்போக்குவாதியாகக் காட்டும் பெண் எழுத்தாளர் அவர்.

எப்போதும் பெண்ணிற்கு அரணாக தன்னை அறிவித்துக்கொண்டே இருப்பவர். சமீபத்திய உரையாடலில் உலக இலக்கியங்கள் குறித்தெல்லாம் பகிர்ந்து கொண்டிருக்கையில், ஒரு பெண் எழுத்தாளரின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் விருது குறித்துப் பேச்சு வந்தது. சட்டென “அவளுக்கென்ன... அவருகூடப் படுத்தே எல்லாத்தையும் அடைஞ்சுடுறா!” என அவர் கூறியபோது அதிர்ந்துபோனேன். பெண்ணை வீழ்த்த, முனையில் நஞ்சு தடவிய கூரிய வாளாய்ப் பெண்ணையே பயன்படுத்துவதில், அதை நிறுவியவர்கள் வெல்வதாகவே கருதினேன்.

பெண்களைக் கொண்டு பெண்ணுடலை வைத்து பெண்களை வீழ்த்தும் நுண்ணரசியலைப் பெண்கள் புரிந்துகொள்ளும்வரை இதிலிருந்து விடுதலையடைவது எங்ஙனம்? இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் உடலையொரு பகடையாய்க் கொண்டு, இந்தச் சமூகம் தன் கோரப்பசியாற்றப் போகிறது?. பெண்ணுக்கு எதிராக ஆண் செய்யும் குற்றங்களில் இருக்கும் வஞ்சகம், கயமை, துரோகம், இழுக்கு ஆகியவற்றைவிட, பெண்ணுக்கு எதிராகப் பெண் செய்யும் குற்றங்களில் இருக்கும் வஞ்சகம், கயமை, துரோகம், இழுக்கு ஆகியவற்றில் சாகா
வரம் பெற்ற கூடுதல் நஞ்சு எப்போதும் உயிர்த்திருக்கும்.

(இடைவேளை...)
ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி