விவேகா in Download மனசு



அறம்

அரசியல், இல்லறம், வாழ்வியல்  என ஒவ்வொன்றுக்கும் ஒரு அறக்கோட்பாடு இருக்கிறது. எவருக்கும் தீங்கிழைக்காத எளிய  வாழ்க்கையை வாழவேண்டும் என்பதே என் அறம்.  கோழி, ஆடு என ஒரு உயிரைக்கூட எங்கள் குடும்பத்தின் பொருட்டு பலியிடுவதை என் தந்தை அனுமதித்ததே இல்லை. என் மனைவியின் உறவினர்கள் என் குழந்தையின் காதணி விழாவிற்குக் குலதெய்வக் கோயிலில் ஆடு வெட்டி படையலிட ஏற்பாடுகள் செய்தபோது, அந்த நிகழ்ச்சிக்கு வர என் தந்தை மறுத்துவிட்டார். பிறகு ஒரு எலுமிச்சைக் கனியை வெட்டுவதோடு அந்நிகழ்ச்சி நிறைந்தது. ‘நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துரையும் அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு’…நல்லவன் வாழ்க்கை எவ்வளவு எளியதாயினும் நிம்மதியானது.

பிடித்த புத்தகம்

பூமணியின் ’அஞ்ஞாடி’ தென்தமிழ் நாட்டின் ஒரு பகுதியில் வாழ்ந்த மக்களின் முக்கியமான காலகட்டத்தின் சில தலைமுறைகளை ரத்தமும் சதையுமாக பதிவு செய்திருக்கும் நாவல். பூமணியின் வட்டார வழக்கில் அந்த நாவல் வேறு உயரத்துக்குப் போகிறது. ஜெயமோகனின் ‘வெள்ளையானை’. ஆங்கிலேய ஆட்சியில் தமிழகத்தில் நிலவிய பெரும் பஞ்சம் ஒன்றைக் களமாகக் கொண்டது. ஐஸ்ஹவுஸ் தொழிலாளர்களின் தன்னெழுச்சியை மிக இயல்பாக விவரிக்கிறது. அற்புதமான படைப்பு. புத்தகங்கள் ஒரு மாயக்குகை. வாசிப்பின் ருசி அறிந்துகொண்டால் அவை நம்மைப் புதிய தரிசனங்களுக்கு ஆற்றுப்படுத்தும்.

திரைப்பாடல்களின் அவசியம்

நிச்சயமாக இவ்விஷயத்தில் தமிழ்ச் சமூகம் தனித்த ரசனை உடையது. தாலாட்டில் துவங்கி ஒப்பாரியில் முடியும் வாழ்க்கை தமிழனுடையது. அவனது களிப்பும் கவலையும் பாடல்களோடுதான். ஏற்றம் இறைக்க, நாற்று நட, பளு தூக்க.. என எல்லா ஆதித்தொழில்களோடும் பாடல்கள் பிணைந்துள்ளன. கும்மி, குலவை, கூத்து என தமிழனின் கொண்டாட்டங்களிலும் பாடல்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன.

என்னதான் உலகப் படங்களை ஆராதிக்கும் போக்கு வளர்ந்தாலும் பாடல்களை ஏங்கும்  தமிழ் ரசிகனின் உள்ளார்ந்த மனநிலையை முழுதாக மாற்ற முடியாது. பாடல்கள் என்றால் கட்டிப்பிடித்து டூயட் ஆடுவது என்று மட்டும் கொள்ளாமல் வாழ்வியல் சார்ந்த திரைப்படங்களில் ‘மான்டேஜ்’ வகைப் பாடல்கள் வரும்காலங்களில் அதிகரிக்கும் என்று கருதுகிறேன். தமிழ் சினிமாவில் பாடலுக்கான இடம் என்றைக்கும் இருக்கவே செய்யும்.

காதல்-திருமணம்

காதல்: இதயத்தின் கூப்பாடு
திருமணம்: இரு வீட்டார் ஏற்பாடு

கற்ற பாடம்

என் வாழ்வில் பல வருடங்கள் இறை நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் இறைவன் என்னோடே இருக்கிறான் என்பதைச் சமீபத்தில் பரிபூரணமாய் உணர்ந்தேன். என்னை நோக்கி வந்த அம்புகளை அவன் எனக்குத் தெரியாமலே தடுத்தாண்டிருக்கிறான். ஒவ்வொன்றையும் இப்போது நினைக்க மெய்சிலிர்க்கிறது

வாழ்க்கைப் பயணம்

பல்வேறு அனுபவங்கள் வாய்த்திருக்கின்றன. சிறுவயதிலேயே கூத்தில் ஆடியிருக்கிறேன். மேடை நாடகங்களைத் தயாரித்து நடித்த அனுபவம் உண்டு. பத்திரிகையாளனாக; பட்டிமன்றங்களுக்கு நடுவராக; தமிழகத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மேடைகளில் ஊக்க உரையாற்றுபவனாக; ஆளுமைகளின் தலைமையில் அமைந்த கவியரங்கில் பாடுபவனாக இருந்திருக்கிறேன். முழு வாழ்க்கைக்கும் ஒற்றை இலக்கு போதாது என்று கருதும் மனநிலை கொண்டவன் நான்.

ஆசைப்பட்டு நடக்காத விஷயம்..

எத்தனையோ ஆசைகள் வந்ததுண்டு. அதில் பல நடந்துமிருக்கிறது.. எனது மிக நீண்ட ஆசையாக இருந்து நடக்காமல் போனது ‘தனிஈழம்’.

அதிர்ந்தது

நான் மட்டுமல்ல. என் குடும்பமே அதிர்ச்சிக்குள்ளானது. ஒரு மிகப்பெரிய மனிதரின் அற்பத்தனமான சதிச் செயலில் இருந்து தப்பித்து வந்தேன். என் உறவினர்களுக்கும் சில நெருங்கிய காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் கூட சொல்லியிருக்கிறேன். பொது வெளியில் இதைப்பற்றிப் பேசி ஒரு பரபரப்புக்குள் நுழைய விருப்பமில்லை. இக்குறிப்பிட்ட நிகழ்விற்குப் பிறகுதான் எனக்கெதிரான பல்வேறு இருட்டடிப்பு வேலைகளில் அவர் எவ்வளவு தந்திரமாக ஈடுபட்டு வந்திருக்கிறார் என்பதையும் அறிந்தேன்.

சினிமாவை புரிந்துகொள்வது

சினிமாவை மாற்றும் கலைஞர்களையும், சினிமாவிற்காக மாறிக்கொள்ளும் கலைஞர்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  குறும்படங்களின் வழி சினிமா பயின்று பெரும்படங்களை வெற்றிகொள்ள முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் இன்று சினிமாவைப் புரிந்துகொள்ள பெரிய பிரயத்தனங்கள் தேவை இல்லை.

மறக்கமுடியாத நாட்கள்

நான் படித்த பள்ளியும் கல்லூரியும். பள்ளியின் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு என் அப்பாவைத் தெரியும். எங்கள் நிலத்தில் என்ன பயிர் வைத்திருக்கிறோம் என்பது வரை அறிந்திருப்பார்கள். ரொம்ப வாலாட்ட முடியாது. கல்லூரியைப் பொறுத்தவரை அது மீசை முளைத்த பிள்ளைகள் படிக்கும் பள்ளி போலவேதான் எனக்குத் தோன்றியது.  அப்போது முதல்வராக இருந்த திரு.சந்தானம் வித்தியாசமானவர். மாணவர்களை கல்லெடுத்துக்கொண்டு துரத்துவார். அதிகபட்ச கட்டுப்பாடுகளை எதிர்பார்ப்பார். அந்த நாட்களை மனசு தேடுகிறது.

மறக்கமுடியாத மனிதர்கள்

ஆரம்பகால பள்ளி நாட்களை அழகுபடுத்திய செல்வாம்பாள் டீச்சர், கல்லூரியில் என்னைத் தமிழால் தழுவிக்கொண்ட பேராசிரியர் பகவத்சிங், சென்னையில் எனக்கு முதல் புகலிடம் கொடுத்து அரவணைத்த எனது உறவினர் திரு. மருதுபாண்டியன், என் கிராமத்தின் முதற் கதை சொல்லியாய் எனக்கு அறிமுகமான பிச்சை ஆசாரி என மனக்கிடங்கெல்லாம் மாண்புமிகு மனிதர்கள்..

- நா. கதிர்வேலன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்