தமிழ்நாட்டு நீதிமான்கள்



-கோமல் அன்பரசன்

வி.எல்.எதிராஜ் குற்றவியல் வழக்குகளில் புகழேணியில் ஏறிக்கொண்டிருந்த எதிராஜுக்கு 1920 களின் மத்தியில், ‘கிரௌன் பிராக்சிக்யூட்டர்’ பதவியை அளிக்க எயிலிங் என்ற நீதிபதி பரிந்துரை செய்தார். சென்னை மாநகரத்தில் உருவாகும் குற்ற வழக்குளில் அரசுக்காக வாதாடும் அந்த முக்கியமான பதவி தமக்கு கிடைத்துவிடும் என்று அவர் பெரிதும் எதிர்பார்த்தார். கடைசியில் அந்தப் பொறுப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் அவர் பலத்த ஏமாற்றமடைந்தார். காலச் சக்கரம் சுற்றியது.

எதிராஜின் வளர்ச்சியும் உச்சியை நோக்கி போய்க் கொண்டிருந்தது. சென்னை மாநகர அளவிலான பதவி என்பதைத் தாண்டி, அன்றைக்கு பரந்து விரிந்திருந்த சென்னை மாகாணம் முழுமைக்குமான அரசு வழக்கறிஞர் பதவி 1937-ல் அவரைத் தேடி வந்தது. சென்னையில் அந்தப் பொறுப்புக்கு வந்த முதல் இந்தியர் எதிராஜ்தான். அப்பொழுது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, உயர்நீதிமன்றத்தின் 150 ஆண்டு கால வரலாற்றில் சிறப்பு வாய்ந்ததாகும்.

1950 வரை தொடர்ந்து 13 ஆண்டுகள் அரசு வழக்கறிஞராக எதிராஜ் ஆற்றிய பணிகள், ஆடிய வழக்குகள் காலத்தால் அழியாத கல்வெட்டு எழுத்துகளாக இருக்கின்றன. அரசு வக்கீல் என்பதால், போலீஸ் கை காட்டிய அத்தனை பேருக்கும் தண்டனை வாங்கிக்கொடுத்தே தீருவது என ஒருபோதும் அவர் தலைகீழாக நின்றதில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பக்கம் நியாயமிருந்தால், அதனை ஏற்றுக்கொள்ள எதிராஜ் தயங்கியதில்லை.

நிரபராதிகளைத் தண்டிக்கும் குற்றத்திலிருந்து நீதிபதிகளைத் தடுத்து, நீதிமன்றத்தின் பாராட்டுகளைப் பலமுறை பெற்றார். ‘நான், அரசு வழக்கறிஞர் (Prosecutor).வழக்கில் எதிரிகளைக் கொடுமைப்படுத்துபவன் (Persecutor)  இல்லை’ என்பது எதிராஜ் சொன்ன வைர வாசகம். அக்காலகட்டத்தில், ஒரு சிங்கம் போலவே நீதிமன்றத்தில் எதிராஜ் வலம் வந்தார். நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரிகள் தமக்கு உத்தரவு தரவோ, ஆலோசனைகள் சொல்லவோ அவர் எப்போதும் அனுமதிக்க மாட்டார். அதுமட்டுமில்லை.

நீதிமன்றத்தில் எந்த போலீஸ் அதிகாரியும் அவருக்குப் பக்கத்தில் அமரவோ, பின்னால் நிற்கவோ முடியாது. ‘அரசு வழக்கறிஞர்’ எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு உதாரண புருஷராகத் திகழ்ந்தார். அப்பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றபிறகு 5 ஆண்டுகள் தனியாகவும் அதன்பின்னர் 5 ஆண்டுகள் வி.டி.ரங்கசாமி அய்யங்காருடன் சேர்ந்தும் கடைசி வரை குற்றவியல் வழக்கறிஞராகக் கொடிகட்டிப் பறந்தார். அப்போது தேடிவந்த நீதிபதி பதவிகளையும், அரசியல் தலைவராகும் வாய்ப்புகளையும் நிராகரித்தார். ஆனாலும் அகில இந்திய அளவில் அசைக்க முடியாத செல்வாக்குள்ள மனிதராகத் திகழ்ந்தார்.

வழக்கறிஞராக எதிராஜ் புரிந்த சாதனைகளை எல்லாம் தாண்டி, கால வெள்ளத்தில் அடிபடாமல் அவரது பெயரை இன்றும் உரக்கச் சொல்லியபடி கல்விப்பணி ஆற்றி வருகிறது அவர் உருவாக்கிய சென்னை எதிராஜ் கல்லூரி. கல்விக்கு, அதிலும் பெண் கல்விக்காக தன் சொந்தப் பணத்திலிருந்து ரூ.10 லட்சத்தைக்கொடுத்து அறக்கட்டளை உருவாக்கி, 12 ஆண்டுகள் கூடவே இருந்து கல்லூரியை வளர்த் தெடுத்தார். இன்றைக்கு ஆயிரமாயிரம் பெண் பட்டதாரிகளைத் தந்த, தந்து கொண்டிருக்கும் ஆலமரமாக எதிராஜ் கல்லூரி திகழ்வதற்கு அவரது புரட்சிகர சிந்தனையே காரணம்.

1944 ல் இதற்கான தொடக்க முயற்சிகளைச் சத்தமே இல்லாமல் எதிராஜ் செய்தார். ‘வக்கீல்களின் செல்வம் அறப்பணிகளுக்காக முதலீடு செய்யப்பட வேண்டும். சம்பாதித்த பணத்தை விளம்பரங்களுக்காக விரயமாக்கப்படும் தர்ம காரியங்களில் செலவிடுவதை நான் நம்பவில்லை. ஆளுக்கு ஒரு ரூபாயாக நூறு பேருக்கு கொடுப்பதைவிட, நூறு ரூபாயை ஓர் அமைப்புக்கு நிரந்தர முதலீடாக அளிப்பதையே விரும்புவேன்’ என்று நண்பர்களிடம் கூறிவந்ததை செயல் மூலம் நிரூபித்தார். ‘சமுதாய ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்யும் சாதனம் கல்வி.

அதிலும் சட்டங்களைப் பயனுள்ள வகையில் அமல்படுத்த பெண்கல்வி அவசியம்’ என்ற தொலைநோக்கு சிந்தனையைச் செயல்படுத்தினார். கல்லூரி தொடங்கியதற்காக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் பாராட்டு விழா நடத்தி, எதிராஜுக்கு வைர மோதிரம் அணிவித்தது. தேசிய அளவில் புகழ் பெற்றவர்களுக்கே வழக்கமாக வழங்கப்படும் வரவேற்பையும் பாராட்டையும் வக்கீல் ஒருவருக்கு சென்னை மாநகராட்சி வழங்கிய பெருமைமிகு நிகழ்ச்சியும் அன்றைக்கு எதிராஜுக்கு நடந்தது.

கடைசி காலத்தில் சம்பாதித்தவற்றை எல்லாம் கல்லூரிக்கே செலவழித்தார். கல்வியோடு நற்பண்புகள் பெற்றவர்களாக தன் கல்லூரி மாணாக்கியர் திகழ்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார். அதனால்தான் 50 ஆண்டுகளைக் கடந்தபிறகும் ஒரே ஒரு மணி நேரம் கூட போராட்டமோ, அமளி துமளியோ நடக்காத கல்லூரி என்ற பெயரை எதிராஜ் கல்லூரி பெற்றிருக்கிறது.

மேல்நாட்டுப் பாணியில் வாழ்ந்தாலும் தெய்வ பக்தி மிக்கவராகவும் பழம் பெரும் நம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பவராகவும் விளங்கினார். புகை, மது பழக்கங்கள் அவரிடம் அறவே இல்லை. திரைப்படங்களை அவர் வெறுத்தார். தேவையற்ற கூட்டங்களுக்குச் செல்வதையும் விரும்பமாட்டார். வழக்கு ஆவணங்களை அதிகாலை வரை படித்தாலும் 7 மணிக்குள்ளாக எழுந்துவிடுவார். வேப்பங்குச்சியால்தான் பல் துலக்குவார்.

வள்ளலார், தாயுமானவர், பட்டினத்தார் பாடல்கள் அவருக்குப் பிடிக்கும். அதிலும் ‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்’ என்ற வள்ளலாரின் பாட்டு மிக விருப்பம். இன்றைக்கும் எதிராஜ் கல்லூரி நிறுவனர் நாளின் இறைவணக்கப் பாடல் இதுதான். இசையின் மீது மிகுந்த பற்று வைத்திருந்தார். அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், முசிறி சுப்ரமணிய அய்யர், எம்.எம்.தண்டபாணி தேசிகர் உள்ளிட்டோரின் இசையில் மயங்கி, அவர்களோடு இதயபூர்வ நட்பு பாராட்டினார். மாலை நேரங்களில் அவர் வீட்டில் ரம்மியமான ராகங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும்.

இயற்கையின் மீதும் எதிராஜுக்கு ஈடுபாடு அதிகம். வீட்டோடு அவர் அமைத்திருந்த தோட்டம் கொள்ளை அழகு கொண்டது. சென்னையின் சிறந்த தோட்டத்திற்கான பரிசுகளை பலமுறை எதிராஜின் தோட்டம் பெற்றிருக்கிறது. விதவிதமான மரங்களையும் பூச்செடிகளையும் கொண்ட அத்தோட்டத்தை அவரே தனிக்கவனம் எடுத்து பராமரித்தார். தோட்டப் பராமரிப்பில் வல்லவராகத் திகழ்ந்த அவர், விவசாய தோட்டக்கலைச் சங்கத்தின் தலைவராக பல ஆண்டுகள் இருந்தார். ‘மலர்களும் குழந்தைகளும் கடவுளின் தூதர்கள்’ என அடிக்கடி கூறுவார்.

டேபிள் டென்னிஸ் விளையாட்டில் நிறைய பரிசுகள் வாங்கிய எதிராஜ், ‘டென்னிசில் எனக்குள்ள திறமை என் வாழ்வின் வெற்றிக்கு ஒரு காரணம். மேசையைக் களமாகக் கொண்ட டென்னிஸ் ஆட்டத்தை விளையாட மிகுந்த பொறுமையும், நிர்ணயமான நோக்கமும் அவசியம். வழக்கறிஞர் தொழிலில் ஒருவர் வெற்றி பெறுவதற்கும் இந்த இரண்டு இயல்புகளும் தேவை’ என்று தெரிவித்திருக்கிறார்.

பாரிஸ்டர் படிப்புக்காக லண்டன் போனபோது கிட்டி(எ) காதலீன் என்கிற ஆங்கிலேயப் பெண்ணைக் காதலித்து அங்கேயே மணம் புரிந்துகொண்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு சில காலம் சென்னை வந்து எதிராஜுடன் வாழ்ந்த அந்த அம்மையார், தன் தந்தையாரின் தொழிலைக் கவனிக்க மீண்டும் தாய்நாட்டிற்கே சென்றுவிட்டார். இவர்களின் மகன் டாக்டர் எதரிட்ஜ் பிரிட்டனில் வாழ்ந்தார்.

அவரது வாரிசுகள், அதாவது எதிராஜின் பேரப்பிள்ளைகளான ஜான் எதரிட்ஜ் இசைக்கலைஞராகவும், ஹியூ எதரிட்ஜ் ஆடிட்டராகவும் அங்கே இருக்கிறார்கள். எதிராஜின் பெயருக்கு முன்பிருக்கும் ‘வி.எல்’ என்ற எழுத்துகள் ஊரையும், தந்தை பெயரையும் குறித்தாலும், ‘விக்டோரியஸ் லாயர்’, ‘வெரி லக்கி’ ‘வெரி லவ்வபிள்’ என்றெல்லாம் நீதித்துறை வித்தகர்கள் அதற்கு விளக்கம் சொல்லும் அளவுக்கு வாழ்ந்தவர். சர்.சி.பி.ராமசாமி அய்யர் வார்த்தைகளில் சொல்வதானால், ‘ வழக்கறிஞர் தொழிலில் 20ஆம் நூற்றாண்டின் அதிசயம் வி.எல். எதிராஜ்’!

(சரித்திரம் தொடரும்...)

முக்கிய வழக்குகள்
தனியாகவும் அரசு வழக்கறிஞராகவும் ஏராளமான வழக்குகளில் எதிராஜ் வாதாடினார். அதில் பல புகழ் பெற்றவை. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சினிமா நட்சத்திரங்களான தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோருக்கு விடுதலை வாங்கித்தந்தார். இதற்காக ‘எதிராஜ் எங்கள் தெய்வம்’ என அவர்கள் கொண்டாடினார்கள். 100 பவுன் தங்கத்தட்டை பாகவதர் எதிராஜுக்கு அன்புப்பரிசாகக் கொடுத்து, அதில்தான் வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

இமானுவேல் சேகரன் கொலை வழக்கு, ஐதராபாத் சதி வழக்கு, காக்கிநாடா சதி வழக்கு, அகல் விளக்கு வழக்கு, மயிலாபுரம் கொலை வழக்கு, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழுக்கு எதிராக கர்நாடக முதலமைச்சர் ஹனுமந்தையா தொடர்ந்த வழக்கு என எதிராஜ் புத்திசாலித்தனத்தைக் காலத்திற்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் வழக்குகளின் பட்டியல் பெரியது.