பொறுத்தது போதும்!



பொங்கும் விஷால்

துப்பறிவாளனாக ஸ்டடி ஹாலிடேவில் இருக்கிற காலேஜ் பையன் போல இருக்கிறார் விஷால். ‘கத்திச் சண்டை’ ரெடியாகி ரிலீஸுக்கு காத்திருக்க, தயாரிப்பாளர் கவுன்சில் அவரை சங்கத்திலிருந்து விலக்கி வைக்க, ஒரு பதட்டமும் இல்லாமல் பேசினார் மிஸ்டர் கூல் விஷால். அடக்கமும், பணிவும், பேச்சில் தெளிவும் கூடியிருக்கிறது.

‘‘நீங்க, தமன்னா, வடிவேலு... இந்த டீம் எல்லாமே நல்லாயிருக்கு!’’
‘‘நல்லா வந்திருக்கு. ‘கத்திச் சண்டை’ பதட்டமே இல்லை. இந்த மரியாதையைக் காப்பாத்திக்கிற மாதிரி இருக்கணும் ஒவ்வொரு படமும்! இப்ப இருக்கிற சூழ்நிைலக்கு ரொம்ப சரியாக இருக்கும். இதுல எல்லாமே கூடிவந்திருக்கு. வடிவேலு அண்ணன் ஐந்து வருஷமாக காமெடி பண்ணல. அவர் நடிக்கலைன்னா இந்தப் படத்தில் நான் நடிக்கவே வேண்டாம் என்ற முடிவில் இருந்தேன். மியூசிக் ரொம்ப துள்ளலாக இருக்கு. இப்ப நாம் சமூகத்தில் பார்க்கிறதை, கேட்கிறதை, நடக்கிறதை காட்டியிருக்கோம்.

எல்லோருக்கும் பிடிக்கும். ‘கத்திச் சண்டை’ன்னா நிஜமா இது புத்திச் சண்டை. இது வழக்கமான சுராஜ் படம்னு வந்தால் இன்னும் வேற விதமா இருக்கும். நான் நடிச்ச படம்னு ஏதாவது நீங்க லிமிட் வைச்சிருந்தால் இது அதையும் தாண்டும். நான் மத்த படங்களில் ‘பஞ்ச்’ வசனம் பேசும்போதெல்லாம் கூச்சமா இருக்கும். ரொம்ப மனசுக்குள்ளே இருந்தெல்லாம் பேசமாட்டேன்.

என்னுடைய பாடி லாங்வேஜ் ஒத்துக்காது. ஆனால் ‘கத்திச் சண்டை’யில் க்ளைமேக்ஸில் பேசின வசனம் எல்லாம் அத்தனை தூரம் ரசித்துப் பேசினேன். கேட்கிற அத்தனை பேருக்கும் நிச்சயம் பிடிக்கும். இதில் அப்படி அமைஞ்சிருக்கு. வடிவேலு அண்ணன் காமெடி அடுத்த 10 வருஷத்திற்கு எல்லா டிவி சேனல்களிலும் ஒளிபரப்பாகி உங்களுக்கு மனப்பாடம் ஆயிடும். சூரி, வடிவேலு இனிமேல் சேர்ந்து நடிப்பாங்களான்னு தெரியாது. எனக்கு ‘கத்திச் சண்டை’ ‘கலகல’ன்னு சந்தோஷமா இருக்கு.’’

‘‘திடீரென்று மிஷ்கினோடு ‘துப்பறிவாள’னில் செட்டாயிட்டீங்க?’’
‘‘எனக்கு மிஷ்கின் எட்டு வருஷப் பழக்கம். ஒவ்வொரு தடவை மீட் பண்ணும்போதும் அடுத்த படம் பண்றோம்னு கை குலுக்கிட்டு பிரிவோம். ஏதேதோ காரணங்களால் தள்ளிப்போகும். மிஷ்கின் நிறைய படங்கள் செய்திருக்கார். பல பேருக்குப் பிடிக்கும், சில பேருக்குப் பிடிக்காது. அவர் இருட்டில படம் பிடிக்கிறார், கோபக்காரர், இப்படி எல்லாத்தையும் தாண்டி அவருடைய உண்மையான திறமை, ஃபிலிம் மேக்கிங் இதுலதான் வந்திருக்கு. அவருடைய பெஸ்ட் ‘துப்பறிவாளன்’.

இதுக்கு முன்னாடி இந்த மாதிரி சிறப்பாக நடிச்சிருக்கேனான்னு தெரியலை. பாலா படம் பண்ணும்போதுகூட ‘பாலா ஒரு சைக்கோ... நீ போனா 10 நாளுக்குள்ளே ஓடி வந்திருவே’னு சொன்னாங்க. அந்த மனுஷனுக்குள்ளே போய் பழகினா அவர் ஒரு பச்சைக் குழந்தை. அதே மாதிரி மிஷ்கின். மேடையில் அதிரடியாகப் பேசும்போது, தோற்றத்தில, நடை உடை பாவனையில ஒரு டைப்பா தெரியும். அவர் ஒரு கமர்ஷியல் ஹீரோவை பண்ண முடியாதுன்னு தோணும்.

அதெல்லாம் சும்மா. ஒரு நடிகனுக்கு நடிப்புக்கு தீனி வேணும்னா இவர் கிட்டேதான் வரணும். அடுத்த கட்டத்திற்கு, மிக நல்ல படத்திற்கு மிஷ்கின் சிறப்பான தேர்வு. சில படங்கள் பண்ணும்போது இன்னிக்கு சண்டைக்காட்சியா? நாலு நாளா... சீக்கிரம் முடிச்சிடணும்னு ேதாணும். நாலு பேர் வருவாங்க, ஃபைட், கயிறு கட்டி இழுப்பாங்க. ஆனால் மிஷ்கின் ஷூட்டிங்னா போறதுக்கு ஆசையா இருக்கு. ஒவ்வொரு நாளும் ஒரு பாடிலாங்வேஜ் பிடிச்சுப் பண்றார். இப்படியெல்லாம் நான் ஃபைட் பண்ணினதேயில்லை. இது learning experience.”

‘‘கார்த்தி, நடிகர் சங்க வேலைகளில் நல்லா உதவுகிறார் போலிருக்கே?’’
‘‘அப்படி ஒரு டீம். இத்தனைக்கும் நாலு பேர் சரத் சார் டீமிலிருந்து வந்தவங்க. ஆனால் அத்தனை பேரும் அவ்வளவு ஒற்றுமை. ஒரே மனநிலை. ஒரு விஷயம் சொன்னா, அது சரியில்லைன்னுகூட சொல்லமாட்டாங்க. கார்த்திக்கு வாழ்நாள் முழுக்கக் கடமைப்பட்டு இருக்கேன். அவனுடைய உழைப்பு ரொம்பவும் பெரியது. அவன் நடிகர் சங்கத்தில எடுத்துக் கொள்கிற நேரத்திற்கு அவன் குடும்பத்திடம் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.

எலெக்‌ஷனுக்கு முன்னாடி வீட்டில நிறைய நேரம் இருந்தார் கார்த்தி. நடிப்பு, வீடுன்னு இருந்தவர் இப்ப பதவிக்கு வந்த பிறகு இங்கேயே அதிக நேரம் செலவழிக்கிற மாதிரி ஆகிவிடுகிறது. குழந்தைகிட்ட நேரம் செலவழிக்க முடியலைன்னு மட்டும்தான் சொல்லுவார். நமக்கே பாவமாக இருக்கும். எல்லாத்துக்கும் நடிகர் சங்கம் மேல வச்சிருக்கற அக்கறைதான் காரணம்.’’

‘‘ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிச்சீங்க போல...’’
‘‘தவறான செய்தி. ஜல்லிக்கட்டு பத்தி கருத்துக் கேட்டாங்க. சுப்ரீம் கோர்ட்டுல கேஸ் இருக்கு. விசாரணை போகுது. அதைப் பத்தி பேசுறது, கருத்து சொல்வது தவறுன்னு சொன்னேன். நான் சிட்டி பையன். அதன் பாரம்பரியம் பற்றி இப்போதான் தெரியுது. என்னிக்கும் தெரியாத விஷயத்தைப் பத்தி நான் பேசினதே கிடையாது. செய்தி தப்பா வந்துவிட்டது.’’

‘‘புரொட்யூசர் கவுன்சிலோட என்ன பிரச்சினை பிரதர்?’’
‘‘படம் எடுத்து முடிக்கும்போது 60 சதவீத பலன்தான் புரொட்யூசர்களுக்கு போகுது. மீதி 40 சதவீதம் போற இடம் தெரியலை. நல்லது நடக்கணும்னு நினைக்கிறேன். தாணு, சிவா குரூப்பை எதிர்த்து நான் நிற்கப் போறதில்லை. இங்கே சின்னத் தயாரிப்பாளருக்கு வருமானம் வரக்கூடிய வழிகள் இருக்கு. ஆனால் வரமாட்டேங்கிது. இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு. எல்லாரும் ஒண்ணு கூடிப் பேசமாட்டேங்கிறாங்க.

நல்ல விஷயங்களை விவாதிக்க மாட்டேங்கிறாங்க. அப்படி விஷயங்களை பேசியதாக கேள்விப்பட்டதும், பார்த்ததும் இல்லை. நானே புரொட்யூசர்தான். அதற்கான நேரம் நெருங்கியிருக்கு. கண்டிப்பாக மாற்றம் வரும். அதே மாதிரி தயாரிப்பாளர்கள் எவ்வளவு இழந்தாங்க, அவர்களுக்கு வருமான வாய்ப்பு என்னன்னு அவங்களுக்கு தெரியணும். தாணுவை எதிர்த்து நிற்கிறது பதவி ஆசைன்னு சொல்றது சரியில்லை. தவறை சரிக்கட்டும் வரைக்கும் நான் ஓயமாட்டேன். நாட்டுக்கு விவசாயிகள் முக்கியம்ங்கிற மாதிரி, படத்திற்கு தயாரிப்பாளர்கள் முக்கியம்.

அவங்க சந்தோஷமா இருந்தால்தான் நடிகர்களும் சந்தோஷமா இருக்க முடியும். ஒரு படம் எடுத்தால் என்ன வரணும்னு தெரிந்துவிட்டது. கண்டிப்பாக இறங்கி வேலை செய்வேன். காத்திருந்தது போதும். பொறுத்தது போதும். இந்த பிரச்சினை போதும். இளைஞர்கள் வரணும். மத்தவங்க ஒதுங்கணும். அவங்க செய்தது எல்லாம் தவறுன்னு சொல்லலை. ஏன் இவ்வளவு பிடிவாதம்? சீனியர் இருக்கலாம், ஆனால் ஒதுங்கிட்டு சான்ஸ் குடுங்க! பதவி ஆசை இல்லிங்க... சுத்தம் பண்ணிட்டு போயிடுறோம். எலெக்‌ஷன் முக்கியம். எங்க டீம் நிற்கும். நாங்கதான் ஜெயிப்போம்!’’.

- நா. கதிர்வேலன்