கவிதைக்கு வயது 80!



கவிக்கோ அப்துல் ரகுமான் என்றைக்கும் தமிழ்க்கவிதை உலகின் தனிக்குரல். தன் 80வது வயதில் பரிபூர்ணமான இலக்கிய வாழ்வின் உன்னதமான அனுபவத்தில் திளைக்கிறார். நமக்கு காலம் தந்த கொடையான கவிஞரின் பிறந்த நாள், அய்க்கூவின் நூற்றாண்டு விழாவோடு சேர்ந்து கொண்டாடப்பட்டது அழகு. மிகுந்த பேரன்புடன் கனிந்து அய்க்கூ பயிற்சி வகுப்பை நடத்தினார் கவிக்கோ.

துவக்கு இலக்கிய அமைப்பு, கலாம் பதிப்பகம், தமிழ் அலை இணைந்து நடத்திய இந்த வகுப்பு சமீபத்தில் தமிழ் இலக்கியப் பரப்பின் கவனத்தை ஈர்த்த உரையாடல். கவிஞர் இசாக் தொகுத்து வழங்க, இயக்குநர் லிங்குசாமி வரவேற்க, கவிக்கோ இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேசியதைக் கேட்டவர்கள் பாக்கியவான்கள்... முக்கால் நூற்றாண்டைத் தாண்டிய கவிஞரின் உரையாடலில் ஒரு சோற்றுப் பதம் இதோ...

‘‘பழைய குளம்
தவளை உட்குதிக்க
கிளக்கெனும் நீர்”

புகழ்பெற்ற ஜப்பானிய கவிஞர் பாஷோ எழுதிய அய்க்கூ இது.. தவளை குதிக்கிறது. அதில் ‘கிளக்’ என  சத்தம் கேட்கிறது. இதில் அப்படி என்ன உவமையும், மறைபொருளும் இருந்துவிட முடியும் என நினைக்கலாம். நிறைய இருக்கிறது. தற்சமயம் நடக்கும் சம்பவங்களைக் கூட இதில் அடக்கலாம். பழையகுளம் = நம் நாடு, தவளை குதித்தது = புது 500, 2000 ரூபாய் நோட்டுகள், கிளக் சத்தம் = நாடு முழுவதும் அதிர்வலை, சில நாட்களில் இயல்பு நிலை திரும்பி விடும்.

பொதுவாக அய்க்கூ கவிதைகளை நான்கு சுவற்றுக்குள் அமர்ந்து எழுதவே முடியாது. அப்படி எழுதினால் அதில் உண்மை இருக்காது. பார்க்கும், உணரும், கேட்கும் அனைத்தும் அய்க்கூ. அது நம் வாழ்க்கையின் ஓட்டத்தில் பிறக்க வேண்டும். நடக்கும் சம்பவங்களை எளிதில் குறியீடாகக் கொள்ள ஏதுவாகவும், காலத்திற்கேற்பவும், ஒட்டியும் இருக்க வேண்டும். கற்பனை ஏற்றி அய்க்கூ எழுதக் கூடாது. அதே போல் அய்க்கூ எழுதும்போது அதற்கென தனி இலக்கணங்களும் உள்ளன.

மொத்தம் மூன்று வரிகள், முதல் வரியில் 5 அசைகள்(சொற்கள்) இரண்டாம் வரியில் 7 அசைகள், மூன்றாம் வரியில் மீண்டும் 5 அசைகள். இதுதான் அய்க்கூ எழுதும் முறை. பக்கம் பக்கமாகவோ, விளக்கமாகவோ எழுதுவது கவிதை அல்ல, அது கட்டுரை. சொற்களைக் கடைப்பிடிக்க முடியவில்லையென்றாலும் கூட மூன்று வரிகளுக்கு மிகாமல் எழுதப் பழக வேண்டும். அய்க்கூ கவிதைகளை சில நேரங்களில் முற்றுப் பெறாமல் அப்படியே விட்டுவிடுவதும் கூட வாசகனின் உணர்வுச் சீண்டலாக மாறி இன்னும் அழகு சேர்க்கும்.
 
உலகின் அத்தனை மொழிகளிலும் உள்ள ஒரு கலை எனில் அது அய்க்கூதான். ஆயிரம் அய்க்கூ எழுதவேண்டும் என நினைக்காதீர்கள், ஒன்றே ஒன்று உங்கள் பெயர் சொல்லும்படி எழுதுங்கள். அதுவே அய்க்கூ கலைக்கு நாம் செய்யும் பெரிய தொண்டு” எனக் கவிதையின் நுணுக்கம் பற்றி  பேசிப்போக, அடுத்த வகுப்பிற்கு ஆவலோடு காத்திருந்தார்கள் கவிதை ரசிகர்கள்!

- ஷாலினி நியூட்டன்