அமெரிக்கா வெள்ளையர்களுக்கு மட்டும் சொந்தமா?



டிரம்ப் ஜெயிப்பதற்காக இந்துத்வா அமைப்பினர் பலரும் இந்தியாவில் யாகம் நடத்தினர். பாகிஸ்தானுக்கு அவர் எச்சரிக்கை விடுத்ததும், அவரின் முஸ்லிம் எதிர்ப்பு நிலைப்பாடும், இந்த எதிர்பாராத ஆதரவை அவருக்குப் பெற்றுத் தந்தன. ஆனாலும் இந்தியர்கள் கவலைகொள்ள சில விஷயங்கள், அவர் வெற்றியில் இருக்கின்றன. எல்லா கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி, அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப் பெற்றிருக்கும் வெற்றி, உலக நாடுகள் பலவற்றையும் தங்கள் கணக்குகளைத் திருப்பிப் போட வைத்திருக்கிறது.

பொதுவாக உள்நாட்டுப் போர்கள்தான் ஒரு தேசத்தை சீரழித்து பிளவுபடுத்தும். ஆனால் வெறும் தேர்தல் பிரசாரமே ஒரு நாட்டை துண்டாடும் அபாயத்தை ஏற்படுத்தி இருப்பது அமெரிக்காவில்தான். தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரங்களில் நடந்த இந்த சம்பவங்கள், நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும்...

* டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அமெரிக்காவின் 1100 நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டாக இணைந்து அவருக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்கள். ‘வேண்டாம், இதோட நிறுத்திக்கோ’ என வடிவேலு பாணியில் எச்சரிக்கை விடுக்கும் கடிதம் அது. ‘பரஸ்பர அவநம்பிக்கையோடு ஒருவரை ஒருவர் அணுகும் பிளவுபட்ட சமூகத்தில் நிம்மதி இருக்காது. அமெரிக்கக் குடும்பங்களோ, தொழில்களோ செழித்து வளராது. தேர்தல் பிரசாரத்தில் வெளிப்படுத்திய பிரிவினை கோஷத்தை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்று அந்தக் கடிதம் வேண்டுகோள் விடுக்கிறது.

* டிரம்ப் வெற்றி பெற்றதும் நாடு முழுக்க கலவரம் வெடித்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வு இது. ‘அவர் எங்கள் அதிபர் இல்லை’ என்ற முழக்கங்களோடு பலர் வீதிக்கு வந்தார்கள். NotMyPresident  என்ற ஹேஷ்டாக் சமூக வலைதளங்களில் வைரலானது. ஏதோ விரக்தியில் எளிய மனிதர்கள் வந்து நடத்தும் போராட்டம் இல்லை இது. பாடகிகள் மடோனா, லேடி காகா, மைலி சைரஸ் போன்ற பிரபங்களும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றார்கள்.

* வெற்றி அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குள் அமெரிக்கர்கள் பலரும் கனடா நாட்டில் குடியேறும் முயற்சிகளில் இறங்க, கனடா குடியேற்றத் துறையின் இணையதளம் முடங்கியது. ஸ்வீடனைச் சேர்ந்த குஸ்டாவ் ஹாலே என்ற இளைஞர், ‘டிரம்பின் அமெரிக்காவிலிருந்து தப்பிக்க விரும்பும் எந்த இளம்பெண்ணும் 50 ஆயிரம் டாலர் கட்டணம் செலுத்திவிட்டு தன்னைத் திருமணம் செய்து ஸ்வீடனில் குடியேறலாம்’ என இ-பே இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

* அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணம் கலிபோர்னியா. அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் பக்கம் நின்ற கலிபோர்னியாவில், ‘ஏன் நாம் அமெரிக்காவிலிருந்து பிரிந்து தனி நாடு ஆகக் கூடாது?’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கான பிரசார இயக்கத்தை ஆரம்பித்திருப்பவர்கள், பல ஐ.டி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள். ‘‘கலிபோர்னியா மக்கள்தொகை போலந்து நாட்டின் மக்கள்தொகையைவிட அதிகம். பிரான்ஸ் நாட்டை விட நம் மாகாணத்தின் பொருளாதார வலிமை அதிகம்.

2015ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 2.07 ட்ரில்லியன் டாலர் என்றால், கலிபோர்னியாவின் மதிப்பு 2.46 ட்ரில்லியன் டாலர். ஏன் நாம் அமெரிக்காவின் ஐம்பதில் ஒரு மாகாணமாக இருக்க வேண்டும்’’ என கேட்கிறார்கள் அவர்கள். டிரம்ப் அரசியல்வாதி இல்லை; அரசுப் பொறுப்புகளில் இருந்த அனுபவமும் இல்லை. இப்படி எந்த அனுபவமும் இல்லாமல் நேரடியாக அதிபர் ஆகும் முதல் அமெரிக்கர் அவர்தான். ஆனால் அமெரிக்க மனநிலையை அவர் அளவுக்கு அறிந்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்று தோன்றுகிறது.

உண்மையில் அமெரிக்காவுக்கு இரண்டுவிதமான முகங்கள் இருக்கின்றன. ஒன்று, அதன் வெளிமுகம். எதைப் பற்றியும் பேச முடிகிற கருத்து சுதந்திரம், திறமையுள்ள எவருக்கும் முன்னுரிமை, புத்திசாலிகளை அவர்களின் தோல் நிறமும் இனமும் பார்க்காமல் அரவணைக்கும் மண், அத்தனைவிதமான கலாசாரங்களும் எந்த உரசலும் இல்லாமல் இணக்கத்தோடு இருக்க முடிகிற நாடு... இதுதான் அமெரிக்காவின் வெளிமுகம்.

ஆனால் அதன் உள்முகம் வேறானது. அமெரிக்காவில் பெரும்பான்மையினராக இருக்கும் வெள்ளை இனத்தவர்களின் முகம் அது. அதிகம் படிக்காத, கடுமையான உழைப்புக்குத் தயாராக இல்லாத மிடில் கிளாஸ் வர்க்கமே இதன் பெரும்பான்மை. தங்கள் தேசத்தை யார் யாரோ வந்து சொந்தம் கொண்டாடுவதாக இவர்களுக்கு உள்ளூர வெறுப்பு. கனன்று கொண்டிருந்த அதில் பெட்ரோலை ஊற்றிப் பற்ற வைத்ததே டிரம்பின் பிரசாரமாக அமைந்தது.

‘அமெரிக்கர்களின் வேலைகளை இந்தியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள், அமெரிக்க மார்க்கெட்டை சீன உற்பத்திப் பொருட்கள் ஆக்கிரமித்துள்ளன. மெக்சிகோவிலிருந்து வந்த திருடர்களும் பொறுக்கிகளும் அமெரிக்கா பெயரைக் கெடுக்கின்றனர். இது மாற வேண்டும். நான் ஜெயித்ததும் அவுட்சோர்சிங் பணிகளை நிறுத்துவேன், சீனாவை வழிக்குக் கொண்டு வருவேன், முஸ்லிம்கள் அமெரிக்காவில் நுழைய தடைவிதிப்பேன், சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் மற்ற நாட்டுக்காரர்களை வெளியேற்றுவேன்.

அமெரிக்காவின் இழந்த பெருமையை மீட்போம்’ என அவர் செய்த பிரசாரத்தின் நேரடி அர்த்தம், ‘அமெரிக்கா வெள்ளையர்களுக்கு மட்டுமே, மற்றவர்கள் வெளியில் போய்விடுவார்கள்’ என்பதுதான்! கழுத்தை நெறிக்கும் கல்விக்கட்டணம், மயங்க வைக்கும் மருத்துவச் செலவு, ஏராளமான வரி என மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் மிடில் கிளாஸ் வெள்ளை இனத்தவருக்கு இதனாலேயே டிரம்ப் மாபெரும் மீட்பராக பார்க்கப்பட்டார்.

கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களோடு ரகசியக் கூட்டணி அமைத்துக்கொண்டு இனிப்பு தடவிய கசப்பு வார்த்தைகளைப் பேசும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், டிரம்ப் யதார்த்தவாதியாகத் தெரிந்தார். ‘இந்த அரசியல் சிஸ்டத்தை சுத்தம் செய்துவிட்டு தங்களுக்கு நன்மை செய்ய, அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒருவரால்தான் முடியும்’ என நம்பினர். அதனால்தான் டிரம்ப் யாரைத் திட்டினாலும் பொருட்படுத்தாமல் அவருக்கு ஓட்டு போட்டனர்.

தங்கள் பிரச்னைகள் தீர்ந்துவிடும் என பெரும்பான்மை அமெரிக்கர்கள் நம்ப, டிரம்புக்கு பிரச்னையே இனிமேல்தான் ஆரம்பிக்கிறது. இத்தனை நாள் மக்களுக்குப் பிடிக்கும் விதமாக மட்டுமே பேசி வந்த அவர், இனிமேல் யதார்த்தத்தைப் பேசியாக வேண்டும். அவர் மாறவும் தயங்க மாட்டார். டிரம்ப் எப்படிப்பட்டவர் என்பதற்கு 2 உதாரணங்கள்:  

* 2006ம் ஆண்டு அமெரிக்க ரியல் எஸ்டேட் துறை கடும் சரிவை சந்தித்து பொருளாதார நிலை மோசமானபோது, ‘‘இன்னும்கூட நிலைமை மோசமாகட்டும். எனக்கு அது நல்லது. நான் நிறைய இடங்களை மலிவு விலைக்கு வாங்கிப் போட்டு லாபம் சம்பாதிக்க முடியும்’’ என குரூரமாகச் சொன்னவர் அவர். தேர்தல் நேரத்தில் இது சர்ச்சையானபோது, ‘‘இது எனது பிசினஸ் சாமர்த்தியம்’’ என நியாயப்படுத்தினார்.

* கடந்த 95ம் ஆண்டு தனக்கு பிசினஸில் 91 கோடியே 57 லட்சம் டாலர் நஷ்டம் ஏற்பட்டதாக வரி கணக்கு தாக்கல் செய்தார் டிரம்ப். இதனால் 18 ஆண்டுகளுக்கு வரி கட்டத் தேவையில்லை என்ற சலுகையைப் பெற்று பல கோடி டாலர் லாபம் சம்பாதித்தார் அவர். ‘ஒழுங்காக வரி கூட கட்டாதவர்’ என்ற குற்றச்சாட்டி எழுந்தபோது, ‘‘புத்திசாலித்தனமாக சட்டங்களை எனக்கு சாதகமாகப் பயன்படுத்தினேன்’’ என சிரித்துக்கொண்டே விளக்கம் தந்தார் அவர்.

இப்போது டிரம்ப் ‘‘நான் எல்லா அமெரிக்கர்களுக்கும் சேர்த்தே அதிபர் ஆகியிருக்கிறேன்’’ என சொல்லியிருக்கிறார். அவரது இணையதளத்திலிருந்து ‘முஸ்லிம்கள் அமெரிக்காவில் நுழையத் தடை விதிப்பேன்’ என்ற அவரது முழக்கம் அகற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான உலக நாடுகளும் அமெரிக்க மீடியாவும் அவர் அதிபர் ஆனதை ‘அமெரிக்காவுக்கு நேர்ந்த பேரழிவு’ என வர்ணிக்கின்றன. இந்தக் கருத்து மாற, அவர் மாறியாக வேண்டும்.

டிரம்பின் பிரசாரம் சூடுபிடித்தபோது, அமெரிக்காவில் இருக்கும் பல இந்துக் கோயில்களிலும் சீக்கியர்களின் குருத்வாரா சுவர்களிலும் ‘வெளியேறுங்கள்’ என வெள்ளையர்கள் எழுதியது பெரும் அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டது. டிரம்ப் ஜெயித்த சில மணி நேரங்களில், வடக்கு கலிபோர்னியாவில் மாணிக் என்ற இந்தியரிடம், ‘‘இது எங்கள் தேசம். நீ வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது’’ என கூச்சல் போட்டுள்ளனர் வெள்ளை இளைஞர்கள். இந்த இனவாத அச்சுறுத்தல் மாற, டிரம்ப் மாற வேண்டும்!

 -அகஸ்டஸ்