அச்சம் என்பது மடமையடா விமர்சனம்



மனம் விரும்பிய காதலியை மீட்கப் போய், அதி பயங்கர தாதா கூட்டத்தை எதிர்கொண்டு ‘நான் யார்’ என அடையாளம் தேடுவதே ‘அச்சம் என்பது மடமையடா’. வருமா வராதா, ஷூட்டிங் முடிந்ததா இல்லையா? என பல விசாரணைகளுக்குப் பிறகு வந்தே விட்டது. கௌதம்மேனன், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு மீண்டும் அதே கூட்டணி. மேஜிக் நடந்ததா... என்றால் இப்போதே அவசரப்பட்டால் எப்படி? ஒரு சின்ன ட்ரிப், அப்புறம் வேலை என திட்டமிட்டு வாழும் சிம்புேவாடு ‘நான் பைக்கில் லாங் டிரைவ் போனதே இல்லை’ என ஒட்டிக் கொள்கிறார் மஞ்சிமா.

இப்படி ஒரு ட்ரிப் நாமளும் போகணும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே கன்டெய்னர் லாரி வந்து மோதி தூக்கி அடிக்க மரண பயத்தில் காதலைச் சொல்லி மயக்கமாகிறார் சிம்பு. அந்த கன்டெய்னர் லாரி விபத்து அல்ல. என்னைக் கொலை செய்ய வந்தார்கள் என உயிர் பயத்தில் மஞ்சிமா எடுத்துக் கூற, யார் காரணம்? ஏன்? எதற்காக? என்பதே பின் பாதி கதை. மெல்லிய புன்னகையுடன் வசனங்களை பக்காவாக உச்சரிப்பது, ேவலையே இல்லையென்றாலும் தாடி, கேலி, ஜாலி என கெத்து காட்டுவதுமாக சிம்புவின் மெருகு குறையவேயில்லை.

நிறைய இடங்களில் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு. அடுத்தடுத்த காட்சிகளில் எடையில் பல தோற்றம் கொடுப்பது நெருடுகிறது. ஆனால் என்னவோ தெரியவில்லை, நடனத்தில் முன்பிருந்த உற்சாகம், சுறுசுறுப்பு சற்றே மிஸ்ஸிங். ஹீரோயின் மஞ்சிமா கொஞ்சம் உயரம் குறைவே ஆனாலும் கிடுகிடு ஹோம்லியில் கிறங்கடிக்கிறார். சில இடங்களில் மகா வசீகரம். சிம்புவை ஓரப்பார்வை பார்க்கும்போதும், கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கும்போதும் பொண்ணுக்கு நடிப்பும் பிரைட்! கண்களின் ஓரத்தில் சிரிப்பது அள்ளுகிறது.

அடடா, டேனியல் பாலாஜிதான் வில்லனா என்று நினைப்பதற்குள், அவருக்கு நாலு குளோசப் கொடுத்து அவர் கதையை முடித்து விடுகிறார்கள். பாட்டுப் பாடிக் கொண்டிருந்த ராப் பாடகர் பாபா செகலை வில்லனாக்கியும் பயனில்லை. படத்தின் முதல் பாதி முழுக்கவே பாடலுக்கு நடுவேதான் கொஞ்சம் படமே ஓடுகிறது. ஆனால் எந்த பாடலுக்கும் எழுந்து போக முடியாமல் எதுவோ கட்டிப்போடுகிறது. ‘தள்ளிப் போகாதே’ பாட்டு கிளாஸ். ஆனால் காட்சியமைப்பில் இன்னும் எதிர்பார்த்தோம்.

ஒரு ஆணும், பெண்ணும் இரண்டு முறை சந்தித்தாலே முழு விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் உலகில் மஞ்சிமாவும், சிம்புவும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். மூன்று மாதம் விதவிதமாகப் பேசி, ஐஸ் க்ரீம் சாப்பிட்டு, சிம்புவின் பெயர், மொபைல் நம்பர் தெரியாது என்கிறார். இப்படி படத்தின் முதல் பாதியில் சில லாஜிக் தவறினால், பின்பகுதியில் கிலோ கணக்கில் லாஜிக் தவறுகிறது.

அடுக்கடுக்காக ஆட்களைச் சுட்டுத் தள்ளிவிட்டு போலீஸ் தேடும் சிம்பு இரண்டே வருடங்களில் ஐ.பி.எஸ். ஆக வருவது நகைச்சுவை திருப்பம். டான் மேக் ஆத்தர், டானி ரேமாண்ட் ஒளிப்பதிவு இருள், வெளிச்சம், பரபரப்பு, தலை தெறிக்கும் வேகம் என எல்லாவற்றிலும் ஓவிய நேர்த்தி. யூத்ஃபுல் ரொமான்ஸ், ஆக்‌ஷன் என பின்னியெடுத்தாலும் கதையில் கௌதம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னுமொரு ஆல் டைம் ஃபேவரிட் ஆகியிருக்கும்.

- குங்குமம் விமர்சனக்குழு