விஜய் எளிமை.. அஜித் இனிமை!



கலகல காஜல்

தங்க நிற கிறக்கம், டைட் பேன்ட் இறுக்கம்.... இப்போ காஜல் சீஸன்-2. காஜல் சிரித்தால் அது கஜல்! சென்னைக்கு வருகை தந்து ஹயாத்தில் ஜன்னல் ஓரம் நின்று அவர் மழைச்சாரல் ரசிக்கும் அழகிற்கே ஆயிரம் லைக்ஸ் லைக்கலாம். சரி.. சரி.. இப்போ ‘கவலை வேண்டாம்’ கடமை கொள்வோம்.

‘‘இவ்ளோ நாளா தமிழ், தெலுங்கில டாப்ல இருக்கீங்களே.. அந்த சீக்ரெட்..?’’
‘‘ரசிகர்களோட அன்புதான் காரணம். எங்க பூர்வீகம் அமிர்தசரஸ். ஆனா, நான் பொறந்து வளர்ந்தது மும்பையிலதான். மாஸ் கம்யூனிகேஷன் படிச்சேன். அட்வர்டைஸிங், மார்க்கெட்டிங் எனக்கு பிடிச்ச சப்ஜெக்ட். டிகிரி முடிச்சிட்டு, பாரீஸ்ல எம்.பி.ஏ. பண்ணலாம்னு ப்ளான் கூட இருந்துச்சு. ஆனா, என்னோட திட்டங்கள் எல்லாம் ஃபைனல் இயர்ல மொத்தமா மாறிடுச்சு. டிகிரி ஃபைனல் இயர் படிக்கும்போதுதான், ஒரு கம்பெனி விளம்பரத்துக்கு மாடலிங் பண்ணியிருந்தேன்.

அந்த போட்டோவைப்பார்த்து, இந்தியிலும் தெலுங்கிலும் வாய்ப்பு வந்துச்சு. தெலுங்கில் என்னோட முதல் படம், தேஜா இயக்கின ‘லட்சுமி கல்யாணம்’. அந்த டைம்ல தான் நானா படேகர் மூன்று மொழிகள்ல நடிக்கற படத்துல நடிக்கற ஆஃபர் வந்துச்சு. ‘பொம்மலாட்டத்’துக்குப் பிறகு என்னை எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. நான் சினிமாவுக்கு வந்து 12 வருஷம் ஆகப்போகுது. சந்தோஷமான ட்ராவலா இருக்கு. நான் சினிமாவுக்கு ஒருவேளை வராமல் இருந்திருந்தால் எதாவது ஒரு கார்ப்பரேட் கம்பெனியில வேலைக்கு போயிருப்பேன்.’’

‘‘ ‘கவலை வேண்டாம்’ல காஜல் சூப்பர்னு இயக்குநர் டி.கே. புகழ்றாரே?’’
‘‘ ‘மாற்றான்’ல அவர் அசோஸியேட்டா வொர்க் பண்ணும்போதே அவரைத் தெரியும். கதையை அவர் சொல்லும் போதே, பிடிச்சுப்போச்சு. இந்தப் படத்துல நான் கமிட் ஆனதும், முழு ஸ்கிரிப்ட்டையும் என் கையில் கொடுத்திட்டாங்க. ‘கவலை வேண்டாம்’ல நான் ஐ.டி.யில வொர்க் பண்ற பொண்ணு.  சென்னை மட்டுமில்ல, தமிழ்நாட்டுல உள்ள அத்தனை பொண்ணுங்களும் விரும்புற மாதிரி ஒரு அழகான கேரக்டர். இது ஒரு இன்ட்ரஸ்ட்டிங் படமா எனக்கு அமைஞ்சிருக்கு. ஜீவா, பாபி சிம்ஹா, சுனேனானு நிறைய ஸ்டார்ஸ் இருந்தாங்க. படப்பிடிப்புக்கு போறோமேங்கிற ஃபீல் எல்லாம் வரலை. எல்லா நாளுமே வெரி ஃபன்.’’

‘‘என்ன சொல்றார் ஹீரோ ஜீவா?’’
‘‘ஜீவா எப்பவும் ஸ்வீட் பர்சன். ஸ்பாட்ல எப்பவும் ஜோக்தான். ஷூட்டிங்ல பொழுது போகலைனா நான், ஜீவா, டி.கே. எல்லாரும் ஜாலி கேலியா ஃபைட் பண்ணிட்டிருப்போம். ‘கவலை வேண்டாம்’ல அவர் செஃப்பா பண்ணியிருக்கார். ஆனா, நான் ரியலாகவே நல்லா சமைப்பேன். ஆனா, ஷூட்டிங்ல குக் பண்ணி கொடுக்கறதுக்கு டைம் இல்லாம போச்சு. எல்லாரும் எஸ்கேப்னு பேசிக்கிட்டாங்க.’’

‘‘ ‘தோனி’யோட கதை பயோபிக்கா வந்தது மாதிரி, உங்க ரியல் லைஃப் கதையும் படமா வந்தால் அதை யார் இயக்கணும்னு விரும்புறீங்க? உங்க கேரக்டருக்கு யார் நடிச்சா பொருத்தமா இருக்கும்?’’
‘‘வாவ்வ்வ்.. வெரி குட் க்வொஸ்டீன். என்னோட கதை பயோபிக் படமா வரப்போகுதுன்னு தெரிஞ்சாலே, பிளாட் ஆகிடுவேன். இப்படி ஒரு விஷயம் நடந்தாலே பர்சனலா ரொம்ப சந்தோஷப்படுவேன். இந்த பயோபிக் படத்தை யார் டைரக்ட் செய்தால் சிறப்பா இருக்கும்னு சொல்றது ரொம்பவே சிரமம். அதுவும் கரெக்ட்டான சாய்ஸா சொல்றது இன்னும் கஷ்டம். யோசிச்சா ஏ.ஆர்.முருகதாஸ் சார் பெஸ்ட் சாய்ஸ்னு தோணுது. என் பர்சனல் பத்தி நல்லா தெரிஞ்ச ஸ்வீட் கேர்ள் யாராவது என் கேரக்டரில் நடிச்சா சரியா இருக்கும். என் தங்கை நிஷா ரைட் சாய்ஸ். வெரி குட் சாய்ஸ். என்னைப்பத்தி தெரிஞ்சதால அவ நடிச்சா நான் நடிச்சது மாதிரியே இருக்கும்.’’

‘‘ விஜய் - அஜித் என்ன சொல்றாங்க?’’
‘‘‘துப்பாக்கி’, ‘ஜில்லா’னு விஜய்சாரோட ரெண்டு படங்கள் நடிச்சிருக்கேன். அவர்கிட்ட பிடிச்ச விஷயமே எல்லார்கிட்டேயும் எளிமையா பழகுவார். அஜித் சார் கூட இப்போதான் நடிச்சிட்டிருக்கேன். செட்ல என்னை ‘காஜல்ஜி’னுதான் மரியாதை கொடுக்கறார். இப்படி எந்த ஹீரோ சொல்லியும் கேட்டதில்ல. அஜித் இனிமையானவர். அடுத்து அட்லி - விஜய் ப்ராஜெக்ட்ல நான் நடிக்கறேனான்னு தெரியல. பட், ஐயம் வெயிட்டிங்!’’

‘‘பத்து வருஷத்துக்கு மேல தமிழ்ல பயணப்படுறீங்க. ஆனா, இன்னும் நீங்க தமிழ் பேச மாட்டேங்குறீங்களே?’’
‘‘தெலுங்கில் இருந்து தான் என் கேரியர் தொடங்குச்சு. அதனால தெலுங்கு நல்லா பேச வரும். தமிழ் புரிஞ்சுப்பேன். ஆனா, இன்னும் தொடர்ச்சியா வரல. ‘கவலை வேண்டாம்’ ஸ்பாட்டில் முழுக்க தமிழ்ல தான் பேசினேன். இன்னும் சில மாதங்கள்ல நான் நிச்சயம் தமிழ்ல சரளமா பேசுவேன். அதைக் கேட்குறதுக்கு நீங்க ரெடியா இருங்க!’’

-மை.பாரதிராஜா