துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனும் செவ்வாயும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 65

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

அழகான ராட்சஸி, அழகான ஆபத்து என்கிற வார்த்தைகளுக்கு பொருளே இந்த அமைப்புதான். முள்ளின் நடுவேயுள்ள ரோஜாவை கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் பறிக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழியை எப்போதும் மனதில் நிறுத்த வேண்டும். சுக்கிரன் போகத்தை அதிகமாகத் தூண்டும் கிரகம் என்பதால் அளவுக்கு அதிகமாக போக விஷயங்களில் ஈடுபடுவார்கள். எனவே, எச்சரிக்கை தேவை. அதேபோல விதம்விதமான உணவுகளைத் தேடிப்பிடித்து சாப்பிடுவார்கள். வாசனைத் திரவியத்திற்கென்றே மாத பட்ஜெட்டில் குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவார்கள்.

இந்த அமைப்பிலுள்ளவர்கள் ஆணாக இருந்தால் ஆணாதிக்கம் செய்வார்கள். பெண்ணாக இருந்தால் பெண்ணாதிக்கவாதிகளாக இருப்பார்கள். சுக்கிரன் களத்திரகாரகன் என்கிற திருமணத்திற்கு உரியவனாவான். மேலும், களத்திர ஸ்தானாதிபதியாக செவ்வாய் வருகிறார். இவர்கள் இருவரும் இணையும்போது திருமணம் கொஞ்சம் தாமதப்பட்டு நடக்கும். இவர்களுக்கு திருமணத்திற்கு பார்க்கும்போது பத்துக்குப் பத்து பொருத்தம் மட்டும் பார்க்காமல் இருவருடைய ஜாதகங்களையும் வைத்துத்தான் சேர்க்க வேண்டும்.

எப்போதுமே கண்ணில் கொஞ்சம் கவனம் வேண்டும். அதேபோல பெண்களாக இருப்பின் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மிகச் சுத்தமான பழக்க வழக்கத்தோடு இருப்பது நல்லது. திடீர் நட்புகள் மத்திமவயதுக்குள் வரும்போது ஜாக்கிரதை தேவை. இல்லையெனில் குடும்பத்திற்குள் குழப்பம்தான் மிஞ்சும்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனும் செவ்வாயும் ஒரே இடத்தில் இணைந்திருந்தால் கிடைக்கும் பொதுவான பலன்கள் இவை. இப்போது நாம் துலாம் லக்னத்தை ஒன்றாம் இடமாகக் கொண்டு ஒவ்வொரு ராசிக்குள்ளும் இவ்விரு கிரகங்கள் நின்றால் என்ன பலன் என்று பார்ப்போமா? துலாம் லக்னத்திலேயே, அதாவது ஒன்றாம் இடத்திலேயே சுக்கிரனோடு சேர்ந்திருந்தால் வாழ்க்கைத் துணைக்கு அளவுக்கு அதிகமாக விட்டுக் கொடுக்கிறோமோ?

முற்றிலும் அடிமையாக இருக்கிறோமோ என்கிற எண்ணம் அடிக்கடி மேலெழுந்து வரும். ஆனால், குடும்பத்தில் அப்படி இருப்பது தவறல்ல என்கிற  எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையே மாறும். சாதாரண வாழ்க்கைக்குப் பிறகு ஆடம்பரமான வாழ்க்கைக்குத் தாவுவார்கள். இவர்களிடம் தலைமைப் பண்பு மிகுந்திருக்கும்.

துலாம் லக்னத்திற்கு அடுத்தபடியான, இரண்டாம் இடமான விருச்சிகத்தில் இவ்விரு கிரகங்களும் சேர்ந்தால் வீடு, மனை, சொத்து சுகங்கள் என்று மிக நல்ல வாழ்க்கை வாழ்வார்கள். சொன்ன சொல் மாறாது காப்பாற்றுவார்கள். குடும்பத்தின் மீது அதீத பிரியம் வைத்திருப்பார்கள். இவர்கள் பேச ஆரம்பித்தால் பெருங் கூட்டம் உட்கார்ந்து கேட்குமளவுக்கு வசீகரம் மிக்கவர்களாக இருப்பார்கள். 

மூன்றாவதாக தனுசு ராசியில் சுக்கிரனும் செவ்வாயும் அமர்வதால் இளைய சகோதரரின் திருமணம் தாமதப்படும். அல்லது ஏதேனும் பிரச்னை வந்தபடியே இருக்கும். படிப்பு விஷயத்தில் இவர்களை ரொம்பவும் தொந்தரவு செய்யக் கூடாது. பெரிய பெரிய இலக்குகளை முக்கியமாக இவர்கள் விரும்பாமல் அமைத்துத் தரக்கூடாது. வாழ்க்கைப்போக்கை கொஞ்சம் அவர்களும் திட்டமிடட்டும் என்று விட்டுவிடு வதும் நல்லது. ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு யோசனை, யோசனை என்று போய்க் கொண்டே இருப்பார்கள்.

உட்கார்ந்து ஒருவிஷயத்தை முடிவெடுக்காமல் தவிப்பார்கள். இதை மாற்றிக் கொண்டு, நல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு முடிவை எடுத்துவிட்டால் நல்லது. பாரம்பரிய விஷயங்களை விடாது தொடர்வார்கள். நான்காம் இடமான மகரத்தில் சுக்கிரனும் செவ்வாயும் அமர்வதால் தாயாரின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். இதனால் தாயா தாரமா என்கிற பட்டிமன்றத்தை எப்போதும் நடத்திக் கொண்டிருப்பார்கள்.

இந்த அமைப்பில் உள்ளவர்களை குரு பார்த்தால் கோயில், குளம், கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவார்கள். நிலம், வீடு வாங்கிப் போடும்போதெல்லாம் தாய்ப் பத்திரம் தெளிவாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். பங்குதாரர்களோடு சேர்ந்து வியாபாரம் செய்யும்போதும் கவனம் தேவை. ஐந்தாம் இடமான கும்ப ராசியில் செவ்வாயும், சுக்கிரனும் அமர்ந்தால் குறைப் பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த ஜாதகரின் வாழ்க்கைத் துணை மாதிரியே குழந்தைகளும் பிறக்கும்.

பூர்வீகச் சொத்து கைவிட்டுப் போகும். ஆனால், வேறுவிதமாக சொத்துக்கள் சேரும். சாஸ்திர சம்பிரதாயங்களை சரியான முறையில் கடைப்பிடிப்பார்கள். வீரமும், விவேகமும் மிக்கவர்களாக இருப்பார்கள். இயல்பாகவே நாட்டுப்பற்று மிகுந்தவர்களாகவும் விளங்குவார்கள். ஆறாம் இடமான மீனத்தில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்தால் மிதமிஞ்சிய சபல புத்தி இருக்கும். தன்னைவிட வயதில் மூத்தோர்களிடம் தவறான நட்புகளை வைத்துக்கொள்ளக் கூடாது.

நோய்கள் முற்றும் வரை காத்திருக்காமல் அவ்வப்போது சென்று மருத்துவரை அணுகுவதே சரியானது. சொத்து வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். எப்படியாவது கடனை அடைத்துக் கொள்ளலாம் என்று கடனை வாங்கிக் குவித்தபடி இருப்பார்கள். எதிரிகளை வீழ்த்துவதை விட்டுவிட்டு முன்னேற்றம் மட்டுமே முக்கியம் என்றிருக்க வேண்டும். ஏழாம் இடமான மேஷத்தில் செவ்வாயும் சுக்கிரனும் அமர்ந்திருந்தால் செவ்வாய் தோஷமாகிவிடுகிறது.

இதனால், அதேபோன்றிருக்கும் வேறொரு தோஷ ஜாதகத்தைத்தான் சேர்க்க வேண்டும். இதையெல்லாம் தாண்டி திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் என்று வாழ்க்கை முன்னேற்றம் அடைகிறது. வாழ்க்கைத் துணையை மிகவும் விரும்பினாலும், இரண்டாவது குழந்தை பிறந்தவுடனேயே கணவன், மனைவிக்குள் ஏதேனும் பிரச்னை வந்தபடியே இருக்கும். ஆனால், கூடிய விரைவிலேயே அதுவும் சரியாகும்.

உடன் பிறந்தவர்களால் அவ்வப்போது விரிசல்கள் வந்து நீங்கியபடி இருப்பார்கள். - எட்டாம் இடமான ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சியாகிறார். ஆனால், செவ்வாயும் சுக்கிரனும் எட்டாம் இடமாக சென்று மறைகிறார்கள். யாரும் எதிர்பாராத முறையில் திருமணம் செய்து கொள்வார்கள். சிலர் சூழ்நிலையின் காரணமாக அம்மாதிரி திருமணம் செய்து கொள்வார்கள். பண்ணை வீடு, தென்னந் தோப்பு என்று வசதியாகவும், இயற்கையான சூழலிலும் வாழவே ஆசைப்படுவார்கள்.

இவர்களுக்கு விலங்குகள், பறவைகள் போன்றவற்றைப் பற்றிய நுணுக்கமான அறிவு இருக்கும். தொடர்ந்து பயணம் செய்து கொண்டேயிருப்பார்கள். ஒன்பதாம் இடமான மிதுனத்தில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்தால் வாழ்க்கைத் துணைவர் நன்கு சேமிக்கும் குணத்தை கைக்கொண்டிருப்பார்கள். தந்தையின் சொத்துக்களை பாதுகாத்து பலமடங்காக்கி பெருக்கும் சாமர்த்தியத்தோடு திகழ்வார்கள். ரத்தினங்கள் அணிதல், ரத்தினங்களைக் குறித்த அறிவியலையும் அறிந்து வைத்திருப்பார்கள். ஜெம்மாலஜிஸ்ட்டாக வரக்கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு.

கடகத்தில் பத்தாம் இடத்தில் செவ்வாயோடு சுக்கிரன் சேருவது சுமாரான பலனைத்தான் தரும். இங்கு செவ்வாய் நீசமாகிறார். ஆர்க்கிடெக்ட், நில அளவையாளர், பியூட்டி பார்லர், திரைப்பட வசனகர்த்தா என்றெல்லாம் வருவார்கள். பெரும்பாலும் கடல்தாண்டிச் சென்று சம்பாதிப்பார்கள். ஆனால், எதில் முதலீடு செய்தால் பெரும் லாபம் வருமென்று தெரிந்துகொண்டு செயல்படுவார்கள்.

சிம்மத்தில் பதினோராம் இடத்தில் செவ்வாயும் சுக்கிரனும் சேரும்போது மூத்த சகோதரர்களால் ஏதேனும் பிரச்னை வந்தபடியே இருக்கும். வெறும் வாயில் அவல் மெல்லுவதுபோல எல்லாம் தெரிந்ததுபோல ஏதேனும் பேசிக்கொண்டேயிருப்பார்கள். இவர்கள் வந்தாலே தலை தெறித்து ஓடுபவர்களெல்லாம் உண்டு. இவர்களுக்கு கமிஷன், ஏஜென்ட், தரகு வேலை போன்றவையெல்லாம் சரியாக வரும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பணிபுரிவார்கள்.

பன்னிரெண்டாம் இடத்தில் கன்னி ராசியில் சுக்கிரனும் செவ்வாயும் அமர்கிறார்கள். ஆனால், கன்னியில் சுக்கிரன் நீசமாகிறான். இவ்வாறு சுக்கிரன் நீசமானாலே திருமண விஷயத்தில் பெரும்பாலும் தொல்லைகள் வரும். அங்கு தான் சிறுசிறு பிரச்னைகளைச் சந்தித்தபடி இருப்பார்கள். வீண் செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாகவே செவ்வாயும் சுக்கிரனும் ஒன்று சேரும்போது எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும், சிறிய வசீகரமான விஷயங்களுக்கெல்லாம் மயங்குபவர்களாகவும் இருப்பார்கள். இது செயல் நிலையில், பொதுவாழ்க்கையில் பல்வேறு விதமான தொந்தரவுகளை உண்டாக்கும். எனவே, சுய கட்டுப்பாடு என்பது இவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். அப்படியொரு வைராக்கியத்தை வளர்த்துக் கொள்ள வீரம்மிக்க தெய்வங்களை வணங்குவது நல்லது.

அதிலும் பெண் தெய்வங்களெனில் இன்னும் சிறப்பாகும். வேறொரு விவேகம் மலர்தலை உள்ளுக்குள் ஏற்படுத்தும். அப்படிப்பட்ட ஒரு தலமே தேவிபட்டினம் ஆகும். இத்தலம் ராமேஸ்வரத்திற்கு அருகே உள்ளது. ராமநாதபுரத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு கோயில் கொண்டிருக்கும் அம்மனின் திருநாமம் உலகநாயகி என்பதாகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும்.

இங்கு அம்பாள் சுயம்பு வடிவில் அருள்பாலிக்கிறாள். ராவணனை வதம் செய்வதற்கு முன்பு ராமர் இங்கு தங்கிச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. மகிஷனை வதைத்து விட்டு தேவி இங்கிருந்ததாகவும் இத்தல புராணங்கள் பகருகின்றன. அம்மனுக்கு உருவம் கிடையாது. 51 சக்தி பீடங்களில் இது வீரசக்தி பீடமாகத் திகழ்கின்றது.

(கிரகங்கள் சுழலும்...)
ஓவியம்: மணியம் செல்வன்