மனைவி



‘‘இந்த மனுஷன் வீட்டிற்கு வரட்டும். இரண்டில் ஒன்றை பார்க்காமல் விடக்கூடாது’’ ஒரு முடிவோடு காத்திருந்தாள் ரம்யா. இன்று மதியம் பக்கத்து வீட்டு பெரியம்மா திடீரென்று மூச்சுப் பேச்சில்லாமல் மயங்கி விழுந்துவிட்டார். உதவிக்கு வேறு யாரும் இல்லாத நிலையில் ரம்யாதான் ஆட்டோவை வரவழைத்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றாள். அப்போதுதான் அந்தக் காட்சியைக் கண்டாள். தன் கணவன் கார்த்திக், அவளோடு சிரித்துப் பேசிக்கொண்டே ஹோட்டலுக்குள் செல்வதை பார்த்ததில் இருந்து மனதிற்குள் பொரும ஆரம்பித்துவிட்டாள்.

கார்த்திக் வந்ததும் நேரிடையாகவே கேட்டுவிட்டாள். ‘‘மத்தியானம் அவ வந்திருக்கா போல! என்னமோ பேச்சுவார்த்தையே இல்லன்னு சொன்னீங்க?’’ ‘‘ஆமா ரம்யா... ஏதோ சண்டையில இனிமே அவ மூஞ்சியிலேயே முழிக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணினது உண்மைதான். ஆனா அவளாவே என்கிட்ட நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டது மட்டுமில்லாம, உன்கிட்டயும் மன்னிப்பு கேட்கணும்னு நேர்லயே வந்துட்டா.

நான்தான் உன்கிட்ட பக்குவமா பேசி உன் கோவம் குறைஞ்சதுக்கு அப்புறம் பார்க்கலாம்னு பேசி அனுப்பி வச்சேன்.’’ ‘‘நீங்க சொல்றது சரிதாங்க. மன்னிப்பு கேட்குறது பெரிய விஷயம். அதே நேரத்துல மன்னிக்கறதுக்கு தேவையான பெருந்தன்மையும் என்கிட்ட இருக்கு. இப்பவே வாங்க உங்க தங்கச்சிய போய்ப் பார்த்து பேசிட்டு வரலாம்.’’ மனைவி பேசுவதைக் கேட்டவன் இது கனவா? நனவா? என்று ஆச்சரியப்பட்டான்.       
                                                                                

-கல்லிடை வெங்கட்