குங்குமம் ஜங்ஷன்



புத்தகம் அறிமுகம்

நட்ராஜ் மகராஜ் தேவி பாரதி
(காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629 001. விலை ரூ.300. தொடர்புக்கு : 9677778862)

குழம்பிக் கிடக்கும் நிலையிலிருந்து மனித மனதைப் படைக்கிற கலையின் சக்தி வியப்பிற்குரியது. கலை, தெளிவற்ற தன்மையிலிருந்து நம்மை உயர்த்துகிறது. ‘நட்ராஜ் மகராஜ்’... அப்படியொரு நாவல். மிகச் சிலருக்கே மொழியின் லாவகம் ஆரம்பத்திலிருந்தே கை வருகிறது. தேவி பாரதியின் மொழியும் அவ்விதமே. தொடர்ந்து வாழ்க்கையின் தேடல் குறித்த விசாரணைதான் ‘நாவல்’. ‘ந’ என்கிற மனிதனின் பார்வையில் போகிற நாவலின் அரசியல், கருத்தியல் போக்கு விசாலமானது.

நாவலின் ஆழத்தில் சமூகத்தின் அவலங்கள் எள்ளலும், அங்கதமும் கலந்து எங்கும் காணக்கிடைக்கின்றன. பாசாங்கில்லாத பல்வேறு சித்திரங்களை உருவாக்குகிறார். நமது நம்பிக்கைகளை கறாரான கேள்விக்கு உள்ளாக்கும் தன்மையும் உண்டு... வெளியீட்டுப் பாங்கில் நிச்சயம் வெகுதூரத்திற்கு வந்துவிட்டார் தேவி பாரதி. நாவல் வடிவம், மொழி, புனைவு என்பதைத் தாண்டியும் கற்றுத் தருகிறது ‘நட்ராஜ் மகராஜ்’.

சிற்றிதழ் talk

இவ்வுலகின் மாபெரும் விஷயமான மனித மனம் படைத்த விமானம், வியத்தகு கருவிகள், வெவ்வேறு சாதனைகள் - எவையாயினும் சரி ஆக்கபூர்வமாகவும் அழிவுபூர்வமாகவும் உபயோகிக்கப்படும் தன்மையன. அணுஅணுவாய் நமது உடைமைகள், உயிர் வாழ்க்கை, உலக உருண்டை என எல்லாவற்றிலும் வியாபித்து ‘மேம்பட்ட வாழ்வா இல்லை முட்டாள் தனமான சாவா’ எனும் போராட்டத்தில் நம்மைச் சிக்கவைத்திருக்கும் அணுவும் இவ்விதிக்கு விலக்கானதல்ல.
சுப.உதயகுமாரன் ( ‘காலச்சுவடு’ இதழில்)

சர்வே

இந்தியாவில் மார்பகப்புற்றுநோயால் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்று  இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் தெரிவித்துள்ளது. 2012ம் ஆண்டில் 39 ஆயிரத்து 234 பேரும், 2013ம் ஆண்டில் 40 ஆயிரம் பேரும் 2014ம் ஆண்டு 42 ஆயிரம் பேரும் மார்பகப் புற்று நோயால் இறந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2015ம் ஆண்டில் மட்டும் 62 ஆயிரம் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் உயிரிழந்திருக்கின்றனர். இவர்கள், புற்று நோய் தொடர்பாக உயிரிழந்த மொத்த பெண்களில் 24 சதவீதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகமாகலாம் என்ற அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது இந்த ஆய்வு.

நிகழ்ச்சி மகிழ்ச்சி

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பல ஆலோசனைகளை சொல்லி வந்திருக்கிறார் விஜய்சேதுபதி. அந்த சங்கத்தின் 11-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. விழாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் சிவன் ஸ்ரீநிவாசன், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர், துணைத்தலைவர்கள், சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்தப் பொதுக்குழுவில் சின்னத்திரை நடிகர்கள் தற்கொலைகள் தடுக்கப்பட கவுன்சிலிங் ஏற்பாடுகள் செய்யப்படுவது குறித்தும், சங்க கட்டிடம் கட்டும் வேலைகளை ஆரம்பிக்க முயற்சி மேற்கொள்ளப்படுவது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

யூ டியூப் லைட்

கடந்த நவம்பர் 7ம் தேதி அனுஷ்காவின் பிறந்தநாள். ‘பாகுபலி 2’ ஷூட்டிங் பிரேக்கில் இருந்த அனுஷ்காவிற்கு அவரது ரசிகர்கள் ‘ஹேப்பி பர்த் டே’ வாழ்த்து அட்டைகளும், பரிசுகளும் அனுப்பி குவிக்க, நெகிழ்ந்துவிட்டார் அனுஷ். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘உங்களுடைய நேரத்தை எனக்காக செலவு செய்து என்னை வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி’ என்று நெகிழ்ந்து அதை வீடியோ பதிவாக்கியிருக்கிறார். இந்த வீடியோவுக்கு ஒரு மில்லியன் பார்வையாளர்கள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் லைக்குகள், மூவாயிரத்துக்கும் அதிகமான பகிர்வுகள், நாலாயிரத்துக்கும் அதிகமான வாழ்த்துகள் என அனுஷ்காவை திக்குமுக்காட வைத்துள்ளனர் அவரது ரசிகர்கள்.

டெக் டிக்

நம்முடைய ஞாபக மறதியால், அவசரத்தால் பைக் சாவி, மணி பர்ஸ் உள்ளிட்ட அத்தியாவசியமான பல பொருட்களை தொலைத்துவிட்டு நாலா பக்கமும் பதட்டத்துடன் தேடிக்கொண்டிருக்கிறோம். இனிமேல் இந்தப் பிரச்சனை இல்லை. கார் சாவியிலிருந்து வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் வரை எது காணாமல் போனாலும் கண்டுபிடுத்துத் தர ‘ஜிபிஆர்எஸ் டிராக்கர்’ வந்துவிட்டது.  நாணயம் போல் இருக்கும் இந்த டிராக்கரை நாம் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.

ட்ராக்கருக்கு என்று தனியாக அப்ளிகேஷன் உள்ளது. அதை இன்ஸ்டால் செய்து  மொபைல் போனில் உள்ள கூகுள் மேப்புடன் இணைக்க வேண்டும். நாம் தொலைத்துவிட்ட பொருள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அதை கூகுள் மேப்பில் பார்த்துக் கண்டுபிடித்து விடலாம். இதன் விலை ரூ.1800