தூக்கம் தொலைத்த இந்தியா!



வெளுக்குமா கறுப்புப் பணம்?

இந்தியாவே எதிர்பாராத அதிரடி! கறுப்புப் பணத்தை ஒழிக்க புழக்கத்தில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் ‘செல்லாது’ என்ற பிரதமர் மோடியின் நாற்பது நிமிட உரை ஒட்டுமொத்த தேசத்தின் தூக்கத்தையும் தொலைத்துவிட்டது. அதன்பிறகு, நடந்ததெல்லாம் பரபரப்பும், பதட்டமும் கூடிய தருணங்கள். பெரும்பாலான மக்கள் ஏ.டி.எம். மையங்களுக்குப் படையெடுத்து, தங்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய போராடினர்.

மேல்தட்டு மக்கள் இதற்கு நேர் எதிராக நகைக் கடைகளில் அந்தப் பணத்தைத் தங்கமாக மாற்றிக் கொண்டிருந்தனர். ஏன் இப்படியொரு அதிரடி? இதன் சாதக, பாதகங்கள் என்ன? நிபுணர்களிடம் கேட்டோம்... ‘‘ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளைச் செல்லாதவையாக ஆக்குவதன் மூலம் கறுப்புப் பணத்தை ஒழிக்கவே முடியாது’’ என்று காட்டமாக ஆரம்பித்தார் பேராசிரியர் அ.மார்க்ஸ். இதுபற்றி டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டிப் பேசுகிறார் அவர்.

‘‘கறுப்புப் பணம் என்றால் ஏதோ கணக்கில் காட்டாமல் தலையணைக்குள் மறைத்து பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் என நினைக்கிறோம்.  உண்மையில், பதுக்கிய பணம் அப்படியே இருக்காது. அவை இயங்கிக் கொண்டிருப்பவை. வெள்ளைப் பணத்தைப் போலவே கறுப்புப் பணமும் அவற்றை வைத்திருப்பவர்களுக்கு லாபம் ஈட்டித் தருபவை. கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வது அல்லது ஒழித்துக் கட்டுவது என்பது ஒட்டுமொத்தக் கறுப்பு நடவடிக்கைகளை வெளிக் கொண்டு வந்து அழிப்பதுதான்.

அதற்கு  திடீர் சாகசங்கள் இல்லாமல் திட்டமிட்ட நடவடிக்கையாக அது அமைய ேவண்டும். பிரிட்டனில், ‘பிரிட்டிஷ் இன்டர்னல் ரெவின்யூ சர்வீஸ்’ என்கிற அமைப்பு வரி ஏய்ப்புகளை புலனாய்வு மற்றும் விசாரணை மூலம் கண்டுபிடித்துவிடும். அதுபோன்ற ஒரு புலனாய்வு அமைப்பு வேண்டும். அதைவிடுத்து, இப்படியொரு நடவடிக்கையால் இப்போது வரை பாதிக்கப்பட்டு வருபவர்கள் சாமானிய மக்களே’’ என்கிறார் அவர் வேதனையாக!

ஆனால், பொருளாதார நிபுணரான நாகப்பன், ‘‘இது ஒரு நல்ல நடவடிக்கை. இதில், பாதகத்தைவிட சாதக அம்சங்கள் நிறைய’’ என வரவேற்கிறார். ‘‘இந்த நடவடிக்கையால் ஆரம்பத்தில் பணப்புழக்கம் குறைந்து சிறு வணிகர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாவார்கள். இது ஒரு நான்கு மாதம் வரை மட்டுமே நீடிக்கும். இப்போது எல்லோருமே ஏ.டி.எம்மில் பணத்தை டெபாசிட் செய்து வருகிறார்கள். இந்தப் பணமெல்லாம் வங்கியின் சிஸ்டம் வழியே வரும் போது வெள்ளைப் பணமாக மாறிவிடும்.

கரண்ட் அக்கவுன்ட்டாகவும், சேவிங் அக்கவுன்ட்டாகவும் வரும் இந்த மாதிரியான பணம்தான் வங்கிகளுக்கு மூலதனம். இதைக் ‘காசா’ (CASA) எனச் சொல்வோம். இதன்மூலமாக வந்தால் வட்டி குறையும். இனி, டிசம்பர் 30ந் தேதி வரை ‘காசா’ மூலம் வருகின்ற பணம் அதிகரிக்கும். அப்போது, வங்கிகளில் இருக்கிற பணத்தின் அடக்கவிலை குறைந்து, வட்டி விகிதம் குறையும். இதனால், அனைத்து தொழில்துறையும் நல்ல வளர்ச்சியை நோக்கி பயணிக்கும். இதனைப் பெற்று தொழில் செய்யும் போது விலைவாசி குறையும். அதன்பிறகு, வங்கிகளில் குவியும் இந்தப் பணத்தால் பணப்புழக்கமும் அதிகரிக்கும்.

இதனால், வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி கொடுக்கும் பணத்தின் அளவு குறையும். அப்போது, அரசு கடன் வாங்குவதும் குறையும். பொதுவாக, வங்கிகள் அரசுக்குத்தான் கடன் அதிகம் கொடுக்க விரும்பும். இப்போது, அரசு கடன் வாங்குவது குறையும் போது, வங்கிகளால் மக்களுக்கு அதிகளவில் பணம் கொடுக்க முடியும். அதுமட்டுமல்ல... இப்படி நிறைய வெள்ளைப் பணம் வருவதால் இதன்மீதான வருமானமும் அதிகரிக்கும். உதாரணத்திற்கு, போன வருடம் வரை ஒரு லட்சம் ரூபாய்தான் தனது வருமானம் எனக் காட்டிய ஒருவர் இப்போது இரண்டு, மூன்று லட்சங்கள் காட்டும் போது வருமானத்துக்கான வரி அதிகரிக்கும்.

இதனால் அரசின் பற்றாக்குறை குறையும். ஆனால் கறுப்புப் பணத்தை முற்றிலும் ஒழிக்க முடியாது’’ என்கிறார். ‘‘இங்கே, கறுப்புப் பணம் மூன்று வகைகளில் இருக்கிறது. முதலில், சுவிஸ் வங்கியில் கோடிக்கணக்கில் சேர்த்து வைத்திருப்பதாகச் சொல்லப்படும் கறுப்புப் பணம். இரண்டாவதாக, அதிகளவில் சம்பாதித்து தங்கமாகவோ, நிலமாகவோ, பணமாகவோ வைத்திருக்கும் பணம். மூன்றாவதாக, ரியல் எஸ்டேட், கட்டுமானம், பங்குச்சந்தை பி-நோட்ஸ் என சுழற்சியில் இருக்கும் பணம்.

இப்போது நாம் செய்திருக்கும் வேலை, கொசு வந்தபிறகு மருந்து அடித்து இருக்கிறோம். அது உற்பத்தியாகும் இடத்தைப் பார்த்து ஒழிக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் நிரந்தரமாக கறுப்புப் பணம் ஒழியும்.  ஆயிரம் ரூபாய் நோட்டுக்குப் பதிலாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு எதற்கு என்ற கேள்வி எழுகிறது. 500, 1000 ரூபாய் நோட்டுகளே 85 சதவீதம் புழக்கத்தில் உள்ளன. இதை முழுவதுமாக ஒழிக்கும்போது சிக்கல் வரலாம். அதனாேலயே இந்த 2 ஆயிரம் ரூபாய். புதுப் பணத்துக்கு வேண்டிய அளவு கையிருப்பு வைத்துக்கொண்டு, சில முன்னேற்பாடுகளுடன், வங்கிகளுக்கு முதலிலேயே பணத்தை அனுப்பியிருந்தால் நெருக்கடியைச் சமாளித்து இருக்கலாம்’’ என்கிறார் அவர் முடிவாக!

ஆனால் இந்த நடவடிக்கை மூலம் கள்ளநோட்டு முற்றிலும் ஒழியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ஆடிட்டர் ஸ்ரீராம் ரெட்டி. ‘‘இந்தியாவில் 85 சதவீத பணம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் என்கிறார்கள். இவை எல்லாம் நிச்சயம் வங்கிகளுக்கு வந்துவிடும். அப்படிச் செய்யாமல் வைத்திருப்பவர்கள் அதை அழித்தே ஆக வேண்டிய சூழல். சமீபத்தில் பிரதமர் அனைவரையும் வங்கிக் கணக்கு தொடங்கச் சொன்னார். அப்போது சுமார் 11 ஆயிரம் கோடிதான் வந்தது.

இப்போது இந்த ஆறு நாட்களிலேயே கிட்டத்தட்ட நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகளுக்கு வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதனால் நிறைய பணம் வங்கிகளுக்கு வந்து கடன் சிக்கலைத் தீர்க்கும். அடுத்ததாக, ரியல் எஸ்டேட்காரர்கள் இந்த நடவடிக்கையால் தாங்கள் கட்டிய வீடுகளை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். இதனால் வீடுகளின் விலையும் குறைய வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார்.

தற்போது, பிரதமருக்கு கோரிக்கை அனுப்பியிருக்கிறார் வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா. ‘‘இந்த ஐம்பது நாட்கள் காலக்கெடுக்குள் ஐயாயிரம் வியாபாரிகள் காணாமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு நாட்களாக வியாபாரமே இல்லை. ஏற்கனவே, எல்லாம் ஆன்லைன் வசம் போய்விட்டது. மளிகை வர்த்தகமும் படுத்துவிட்டது. பிரதமரைச் சந்தித்து இதை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைக்க இருக்கிறோம்’’ என்கிறார் அவர்!

ஏ.டி.எம்களில் வரிசையில் நின்று மக்கள் திணறுகிறார்கள். பாதிக்கும் மேல் பூட்டிக்கிடக்கின்றன. அருகில்போய் நின்றால் பணம் இல்லை என கைவிரிக்கிறார்கள். வங்கிகளிலும் போதிய பணம் கையிருப்பு இல்லை. இதை திட்டமிட்டுச் செய்திருந்தால் எல்லோரும் வரவேற்று இருப்பார்கள்!

- பேராச்சி கண்ணன்

வாட்ஸ்அப் வதந்தி...

500, 1000 ரூபாய் நோட்டுகள் பற்றி வாட்ஸ்அப்பில் சில வதந்திகளும் அரங்கேறுகின்றன. அதிலொன்று, திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி களுக்கு அதிகப் பணம் தேவைப்படுவோர் அந்தந்த மாவட்ட எஸ்.பி.யிடம் ஒரு கடிதம் வாங்கி வங்கியில் கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம் என்பது.

அதில், குறிப்பிட்ட செல்போன் எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நம்பருக்கு டயல் செய்தால் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்றே தகவல் வருகிறது. இதுகுறித்து, காவல்துறையினரிடம் விசாரித்தால், ‘இது பொய்யான தகவல். அப்படியொரு கடிதம் கொடுக்கச் சொல்லி எந்த உத்தரவும் எஸ்.பி அலுவலகத்துக்கு வரவில்லை’ என்கிறார்கள்.