விஜயனின் வில்



அதிரடித் தொடர் - 2

கே.என்.சிவராமன்

‘‘லூசா நீ?’’ என்று கேட்ட ஐஸ்வர்யாவின் பக்கம் தாரா திரும்பவில்லை. மாறாக கண்ணாடிக்கு அந்தப் பக்கம் தெரிந்த வானத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள். வெளியில் தகித்த அனலுக்கு மாறாக மிதமான குளிர் உடலைத் தழுவிக் கொண்டிருந்தது. எதிர்பார்த்த பதில்தான். ஐஸ்வர்யா மட்டுமல்ல... வேறு யாரிடம் தனக்கு நடந்ததைப் பகிர்ந்து கொண்டாலும் இப்படித்தான் ரியாக்ட் செய்வார்கள். என்றாலும் தெரிந்தேதான் தனது தோழியைத் தேடி வந்திருக்கிறாள்.

காரணம், அவளது படிப்பு. ஐஐடியில் கிரிப்டாலஜி முடித்துவிட்டு ‘ரங்கா கேப்பிட்டல் லிமிடெட்’டில் பணிபுரிகிறாள். இந்தியாவில் முதலீடு செய்ய யார் விரும்பினாலும் முதல் காரியமாக இந்த நிறுவனத்திடம்தான் அப்பாயின்ட்மென்ட் வாங்குவார்கள். ஆலோசனை சரியாக இருக்கும். நிதித் திட்டமிடல் குறித்து ஏ டூ இசட் புரிய வைப்பார்கள்.

வழிகாட்டுவார்கள். தனி நபர் குறித்த தகவல்கள் வெளியில் கசியாது. கரை கண்ட ஹேக்கர்ஸ் கூட இவர்களது நெட்ஒர்க்கை ஹைஜாக் செய்வது கடினம். அந்தளவுக்கு கோடிங் வலுவாக அமைக்கப்பட்டிருக்கும். அதற்குள் விவரங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். ‘‘இந்தா காபி...’’ திரும்பி ஐஸ்வர்யா நீட்டிய காகிதக் கோப்பையைப் பெற்றுக் கொண்டாள். ‘‘முதல் விஷயம்... முட்டை ஓட்டுல யாராலும் எழுத முடியாது...’’ பேச ஆரம்பித்தவளை கண்களால் நிறுத்தினாள் தாரா.

‘‘வா அந்தப் பக்கம் போகலாம்...’’ காலியாக இருந்த இருக்கைகள் பக்கம் கை காட்டியவள், அங்கு சென்றாள். ஐஸ்வர்யாவுக்கு நேர் எதிரில் அமர்ந்தாள். குனிந்து அவளது கருவிழிகளை நேருக்கு நேர் சந்தித்தாள். ‘‘நான் பொய் சொல்லலை. கண்ணால பார்த்தேன். கொட்டை எழுத்துல ‘KVQJUFS’னு எழுதியிருந்தது...’’ ‘‘இங்க பாரு. நீ பொய் சொல்றேனு நான் சொல்லலை...’’ முன்பக்கம் வந்து விழுந்த முடியைச் சுருட்டி தன் காதோரம் அடக்கினாள் ஐஸ்வர்யா. ‘‘சாதாரண முட்டை ஓட்டுல எழுத முடியாதுன்னுதான் சொல்றேன்.

இரு... இரு... உடனே கூகுள் துப்பின Giovanni Porta பத்தி பாடம் நடத்தாத. கோட்ஸ் ஹிஸ்டரில அவரோட கண்டுபிடிப்பு முக்கியமானது. அதனாலதான் அதை பால பாடங்கள்ல ஒண்ணா சிலபஸ்ல வைச்சிருக்காங்க. அதைப் படிச்சுட்டுதான் இங்க நான் வேலை பார்க்கறேன். ஓகே? சொல்ல வந்தது வேற...’’ ‘‘என்ன?’’ ‘‘வெறும் முட்டைக்குள்ள வெள்ளையும் மஞ்சள் கருவும் கொழ கொழனு இருக்கும். எந்த எழுத்தும் அதுமேல படியாது. அதுக்கு வாய்ப்பும் இல்ல.

ஸோ முட்டை வெந்த பிறகுதான் அந்த ஓட்டு மேல படிகாரம் ப்ளஸ் வினிகர் கலந்த கலவையால கிறுக்குவாங்க. Giovanni Porta அப்படித்தான் எழுதியிருக்கார். ரகசியங்களைக் கடத்தியிருக்கார். நான் சொல்றதுல நம்பிக்கை இல்லைனா ‘How to Write in Boiled Egg’ அப்படீன்னு அடிச்சு யூ டியூப் கிட்ட கேளு. அஞ்சு நிமிஷம் 29 செகண்டுக்கு ஒரு வீடியோவை அது காட்டும். அதைப் பாரு. தெளிவா படங்களோட இடம் சுட்டி பொருள் விளக்கம் தந்திருப்பாங்க...’’

‘‘ஆனா...’’ ‘‘இழுக்காத. டோன்ட் மேக் இட் காம்ப்ளிகேடட். இதுதான் ஃபேக்ட். நீ முட்டை வாங்கினப்ப அது சாதாரணமாதான் இருந்தது. அதை வேகவைச்சுட்டு குளிக்கப் போன இல்லையா... அப்ப யாரோ வந்து வெந்த முட்டை ஓட்டு மேல என்னவோ சொன்னியே... என்ன அது... யெஸ்... ‘KVQJUFS’னு எழுதிட்டு போயிருக்காங்க...’’ ‘‘சான்ஸ் இல்ல ஐஸ். நான் தாழ்ப்பாள் போட்டுட்டுதான் குளிக்கப் போனேன்...’’
‘‘அப்படி செய்திருப்போம்னு நினைக்கற.

ஆனா, செய்யலை. தட்ஸ் ஆல். ஏன்னா அந்த ஃப்ளாட்டுல உன்னைத் தவிர வேற யாரும் இல்ல. உடனே மூடின கதவுக்குள்ள ஆவி நுழைஞ்சிருக்குமோன்னு அடுத்த எக்ஸ்ட்ரீமுக்கு தாவாத. சில சமயங்கள்ல ஒரு விஷயத்தை நாம செய்யாமலே அதை செஞ்சதா நினைப்போம். இது மனித இயல்பு. உன் கேஸையே எடுத்துக்க. கூகுள்ல நீ தேடினப்ப Giovanni Porta பத்தி படிச்ச. ஆனா, உன் பார்வைல பாயில்ட் எக் ஓட்டுலதான் அவர் எழுதினார் என்கிற விவரம் படாமயே ஸ்கிப் ஆகிடுச்சு இல்லையா... அப்படித்தான் இதுவும்...’’
பதில் சொல்லாமல் தாரா காபியைக் குடித்தாள்.

மனம் முழுக்க அலையடித்தபடி இருந்தது. அனைத்துமே ஆள் உயர அலைகள். நீந்த முடியவில்லை. மூச்சுத் திணறியது. ‘‘என்ன யோசிக்கற?’’ மவுனத்தை ஐஸ்வர்யா கலைத்தாள். ‘‘இல்ல... அது ஏன் நான் சாப்பிடப் போற முட்டைல எழுதணும்? யார் செய்தது? என்கிட்டேந்து என்ன எதிர்பார்க்கிறாங்க?’’ ‘‘ஆன்சரை கண்டுபிடிக்கப் போறியா?’’ ‘‘...’’ ‘‘பைத்தியம் மாதிரி நடந்துக்காத. யாரோ உன்கிட்ட விளையாடறாங்க. ஒருவேளை...’’ ஐஸ்வர்யாவின் கண்கள் விரிந்தன.

‘‘சிவா? ஆமா... சிவா. ஸ்பேர் கீ அவன்கிட்டதானே இருக்கு..?’’ சட்டென்று தாரா எழுந்தாள். ‘‘நான் கிளம்பறேன்...’’ உடன் நடந்தபடியே ஐஸ்வர்யா அவள் செவியில் கிசுகிசுத்தாள். ‘‘நீ செய்திருக்க மாட்டேன்னு தெரியும். பட், நடுவுல சிவா உன்னை கான்டாக்ட் செய்தானா?’’ ‘‘பை. அப்புறம் பார்க்கலாம்...’’ ஒட்டியிருந்த புன்னகையை உதிர்த்துவிட்டு கண்ணாடிக் கதவைத் திறந்தபடி தாரா வெளியே வந்தாள். பார்க்கிங்கை அடைந்து தன் டூ வீலரை ஸ்டார்ட் செய்ய முற்பட்டபோது - ‘‘தாரூ... கொஞ்சம் நில்லு...’’ ஐஸ்வர்யா ஓடி வந்தாள்.

‘‘என்ன?’’ ‘‘முட்டை ஓட்டு மேல ‘KVQJUFS’னு எழுதியிருந்ததா தானே சொன்ன?’’ ‘‘ஆமா...’’ ‘‘இதுக்கு முந்தைய ஆங்கில எழுத்தை எழுதிப் பார்த்தப்ப ‘JUPITER’ கிடைச்சுது இல்லையா..?’’ ‘‘ம்...’’ ‘‘அது கிரகத்தை மட்டும் குறிக்கலை...’’ ‘‘வாட்?’’ ‘‘யெஸ். ரோமாபுரி தெய்வத்தோட பெயரும் அதுதான்...’’ ‘‘என்னப்பா சொல்ற?’’ ‘‘நிஜத்தை. ஒரே கடவுள் என்கிற கான்செப்ட் எல்லாம் பின்னாடி வந்தது. அதாவது கி.பி.க்கு அப்புறம். அதுக்கு முன்னாடி மக்கள் பூரா டிரை பள்ஸ்தானே? அப்ப ஏகப்பட்ட தெய்வங்களை எல்லாரும் வணங்கிட்டு இருந்தாங்க.

ஏன், வேத காலத்துல நம்ம நாட்டுலயே இந்திரன், வாயு, வருணன், எமன், அக்னினு நிறைய கடவுள்கள் நடமாடினாங்களே... அப்படி ரோமாபுரிலயும் எக்கச்சக்க தெய்வங்கள் தெருவுக்குத் தெரு சிலையா நின்னுட்டு இருந்தாங்க. இவங்களுக்கு எல்லாம் தலைவர்தான் ஜூபிடர். தேவலோகத்துல இந்திரன் மாதிரினு வைச்சுக்கயேன். வானத்துக்கும் இடிக்கும் இவர்தான் ஹெட். கிரேக்கத்துல இவரையே ஜீயஸ்னு சொல்வாங்க...’’

உதட்டைக் கடித்தபடி தாரா டூ வீலரில் அமர்ந்திருந்தாள். என்ன சொல்வதென்று தெரியவில்லை. ரோமாபுரி ஜூபிடருக்கும் முட்டை வழியே தன்னிடம் கடத்த முற்படும் செய்திக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ? ‘‘சொல்ல வந்தது வேற தாரா... இந்த ஜூபிடர் அலைஸ் ஜீயஸோட வாகனம் எது தெரியுமா?’’ ‘‘நோ ஐடியா. நீயே சொல்லு...’’ ‘‘கழுகு!’’ ‘‘...’’ ‘‘புரியலையா? நானே விளக்கிடறேன். இது வெறும் கெஸ்தான். எங்க கிரிப்டாலஜில இப்படி எட்டு திசைலயும் போட்டு மண்டையை உடைச்சுப்போம்.

அப்பத்தானே சின்னதா க்ளூ கிடைக்கும்..?’’ என்ற ஐஸ்வர்யா சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தாள். பார்க்கிங் ஏரியாவில் யாரும் இல்லை. ஐந்நூறு அடி தள்ளிதான் செக்யூரிட்டி ஒருவர் நின்றுகொண்டிருந்தார். என்றாலும் குரலைத் தாழ்த்தினாள். ‘‘உனக்கு அஞ்சு முட்டைகள் கொடுத்தவர் பேரு கார்க்கோடகன்னு சொன்னே இல்லையா?’’ ‘‘ம்...’’ ‘‘இது ரொம்ப ரேர் ஆன பெயர். குறிப்பா நடுவுல ‘க்’ சேர்க்க மாட்டாங்க. வேணும்னா ‘கார்கோடன்’னு வைச்சுப்பாங்க.

அதுகூட அத்தி பூத்தா மாதிரிதான். பட், ‘கார்க்கோடகன்’ சான்ஸே இல்லை...’’ ‘‘ஏன், இதுல ஏதாவது மர்மம் இருக்கா ஐஸ்?’’ ‘‘என்ன இப்படி கேட்டுட்ட? நிச்சயமா. இந்து மித்தாலஜிபடி ‘கார்க்கோடகன்’ ஒரு பாம்போட பேரு!’’ ‘‘என்னது..?’’ ‘‘ஷ். குரலை உயர்த்தாத. உன் விஷயத்துல ஏதோ நடக்குது. இப்பதான் அதெல்லாமே ஒரு மாதிரி மர்மத்தோட புரியுது. அதனாலதான் என் சீட்டுக்கு போன கையோட ஓடி வந்தேன்...’’ திரும்பவும் தன்னைச் சுற்றிலும் ஆராய்ந்த ஐஸ்வர்யா, கால்களை மாற்றி நின்றபடி தாராவுக்கு நெருக்கமாக வந்தாள்.

‘‘நடந்ததை பூரா சங்கிலில கோர்ப்போம். முட்டை. அதைக் கொடுத்தது கார்க்கோடகன். பாம்பு முட்டையை சாப்பிடுமா? அந்த ஆர்கியூமென்ட் இங்க வேண்டாம். ஆனா, பாம்பு புத்துல முட்டையை போடற வழக்கம் நம்ம ஊர்ல இருக்கு. சரியா?’’ ‘‘ம்...’’ ‘‘இப்ப முட்டை ஓட்டுல எழுதப்பட்ட ‘KVQJUFS’. இது ‘JUPITER’ஐ குறிக்கறதா ஒரு பாயிண்ட்ல வந்து நிக்கறோம்...’’ ‘‘ம்...’’ ‘‘ஒருவேளை இந்த ஜூபிடர் ரோமாபுரி கடவுள்னா... அவரோட வாகனம் கழுகு...’’ ‘‘ம்...’’ ‘‘கழுகோட ஃபேமிலியைச் சேர்ந்த ஒரு பறவைக்கும் பாம்புக்கும் ஆகாது. அதாவது ஜென்மப் பகை...’’ ‘‘எதைச் சொல்ற?’’ ‘‘கருடன்!’’

வண்டியில் இருந்து விழப்போன தாரா, எப்படியோ கால்களை ஊன்றிச் சமாளித்தாள். ‘‘என்னப்பா இது..?’’ ‘‘லுக். எதையுமே நான் சொல்லலை. என் அறிவை வைச்சு ஒரு மாதிரியா புகையை மட்டும் விலக்கி இருக்கேன். இனி உள்ள போய் என்ன ஏதுன்னு பார்க்க வேண்டியது... மகளே உன் சமத்து. குறிப்பா அந்த கார்க்கோடகன் கைல இருந்த காகிதத்துல ஏதோ எழுதியிருந்ததா சொன்னயே..?’’ ‘‘நவகிரகமும் எட்டு திசையில் நான்கு மூலையில் ஒன்றுமில்லை...’’ என்று சொல்லிக்கொண்டே போன தாராவின் தோளைத் தொட்டு நிறுத்தினாள்.

‘‘அதேதான். அது என்னன்னு இந்த கிரிப்டாலஜி மூளைக்கு தெரியலை. கண்டுபிடிக்க வேண்டியது நீதான்...’’ ‘‘ம்...’’ ‘‘ஸேம் டைம்... இதுவரை நாம பேசினது பூரா அசெம்ஷன்தான். குத்து மதிப்பாதான் இந்த முடிவுக்கு வந்திருக்கோம். இதுவே தப்பா மாறவும் சான்ஸ் இருக்கு...’’ ‘‘புரியுது...’’ ‘‘சரி தாரூ. நேரமாச்சு. உள்ள போறேன். எப்ப எந்த சந்தேகம் எழுந்தாலும் கால் பண்ணு. வேலை இல்லைனா நானும் லீவு போட்டு வந்திருப்பேன். தப்பா நினைக்காத...’’ ‘‘இட்ஸ் ஆல் ரைட் ஐஸ். இவ்வளவு தூரம் நீ ஹெல்ப் பண்ணினதே பெரிய விஷயம்.

தேங்க்ஸ்... வரேன்...’’ காற்றைக் கிழித்தபடி தாரா மீண்டும் குரோம்பேட்டைக்கு வந்தபோது சூரியன் அஸ்தமிக்கும் நிலைக்கு சென்றுகொண்டிருந்தான். கார்க்கோடகனின் உடலை கார்ப்பரேஷன் ஆட்கள் கொண்டு சென்றிருந்தார்கள். சொல்வதற்கில்லை. இந்நேரம் அவர் சாம்பலாகி இருக்கலாம். ‘‘அவர் வீடு எங்க?’’ வைஷ்ணவா காலேஜ் பக்கத்தில் கேட்டபோது, திருவான்மியூர் செல்லும் சாலைக்கு வழிகாட்டினார்கள். இருநூறு அடி சாலையில் விசாரித்தபோது சதுப்பு நில ஏரிக்கரையைச் சுட்டிக் காட்டினார்கள்.

அங்கு குடிசை இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஒரேயொரு முட்டையும் அதன் மீது ‘Mrs.V’ என்றும் எழுதப்பட்டிருந்தது. மனதுக்குள் அந்த ‘மிஸஸ்.வி’யைப் பதிய வைத்துக் கொண்டாள். ‘‘வீடுன்னு எதுவும் அவருக்கு கிடையாது. புதர் பக்கமா படுத்துப்பாரு. மழை, வெயிலப்ப... இதோ இந்த தார்பாயை புல்லு மேல கூரை மாதிரி போத்திட்டு உள்ளுக்குள்ள ஒண்டிப்பாரு. மத்தபடி தனக்கு சொந்தமா சின்ன டம்ளரைக் கூட அவர் வைச்சுகிட்டது இல்ல...’’ சொன்ன இளைஞன் தார்பாய் ஒன்றை அவளிடம் காட்டினான்.

கரு நீல நிறத்தில் அது இருந்தது. உதறி விரித்தாள். சாதாரணமாக இருந்தது. நிச்சயம் இதற்குள் ஏதேனும் அசாதாரணம் இருக்கலாம். ‘‘நான் எடுத்துக்கவா?’’ ‘‘வத்தல் காயப் போடப் போறீங்களா..?’’ சிரித்தபடி அந்த இளைஞன் அகன்றான். கையில் இருந்ததைச் சுருட்டி டூ வீலரின் சீட்டுக்கு அடியில் வைத்தாள். ஃப்ளாட்டை அடைந்த  போது இருட்டியிருந்தது. ஹாலின் ஸ்விட்சை போடுவதற்கு முன்னால் தன் கையில் இருந்த தார்பாயை சோஃபா மீது வைத்தாள்.

ஃப்ளோரசன்ட் ஒளியில் ஏதோ கோடு கோடாகத் தெரிந்தது. விளக்கைப் போட்டாள். எதுவும் தெரியவில்லை. டியூப் லைட்டை அணைத்துவிட்டு இருட்டில் மீண்டும் தார்பாயை விரித்துப் பார்த்தாள். அதிர்ந்தாள். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் ப்ளூ ப்ரிண்ட் அந்த தார்பாயில் துல்லியமாக வரையப்பட்டிருந்தது.

(தொடரும்)
ஓவியம்: ஸ்யாம்