உயிரமுது



தமிழர் உணவுகளின் உன்னத சுவை

-ராஜமுருகன்

அது ஒரு மாலைப் பொழுது. தாத்தாவும், பேரனும் வரப்போரமா நடந்து போய்க்கிட்டிருந்தாங்க. வயல் ரொம்ப அழகா இருக்குனு பேரன் சொல்ல, தாத்தாவும் கேட்டுக்கொண்டு நடந்தார். பூச்சிகள் சுதந்திரமா பறந்து கொண்டிருந்தன. அதுல ஒரு பூச்சி கலர் கலரா இருந்துச்சு, ஒரு பூச்சி உருண்டையா இருந்துச்சு, ஒரு பூச்சிக்கு பின்னாடி பல்பு எரிஞ்சிச்சு.

பேரப்புள்ள இரண்டுநாளுக்கு முன்னதான் டவுனிலிருந்து லீவுக்கு வந்திருந்தான். பல்பு எரியிற பூச்சியைப் பாத்ததும் ‘தாத்தா யார் தாத்தா இந்த பூச்சிக்கு சுச்சு போட்டாங்க, இப்படி லைட்டு எரியிது’ என்று வியப்புடன் சொல்ல, தாத்தா செட்டு பல் விழும் அளவுக்கு பொக்குனு சிரிச்சிட்டாரு. ‘பேராண்டி, அந்த பூச்சிக்கு ஏற்படுற இரசாயன மாற்றத்துனால எரியிது’ என்றார்.

‘‘சரி தாத்தா... இது என்ன தாத்தா, பச்சையா புல்லு புல்லா இருக்கு?’’ தாத்தா தன் பேரனை ஆசையுடன் தூக்கி தன் தோளில் உட்கார வைத்துக்கொண்டு சொன்னார். ‘‘பேராண்டி இதுதான் நெல்லம் பயரு. இதிலிருந்துதான் நாம சாப்பிடுற சோறு வருது.’’ புத்திசாலி பேரன் சொன்னான். ‘‘பொய் சொல்லாதீங்க தாத்தா. நாங்கெல்லாம் சூப்பர் மார்க்கெட் போனா வொய்ட் ரைஸ் கிடச்சிடும். அதுக்கு காசு கொடுத்தா போதும்.

நீங்க என்னடானா புல்லிலிருந்து ரைஸ் வருதுங்கிறீங்க!’’ அதிர்ந்த கண்களுடன் தாத்தா சுதாரித்துக் கொண்டு, ‘‘அது இல்ல பேராண்டி. இந்த நெல்லம்பயரு நெல்லைத் தரும். அதை அறுவடை செய்து களத்தில் காயவைத்து, அதை அவித்து மீண்டும் காய வைத்து, மிஷினில் கொடுத்து நெல்லின் மேல் தோலை மட்டும் நீக்கினால் போதும், நாம சாப்பிடுற புழுங்கல், வொய்ட் ரைஸ் வந்துடும்.’’ இப்படியே பல கதைகளைப் பேசிக்கொண்டே வீடடைந்தனர்.

நம்ம பாட்டன் சொன்ன கதையையும், பாட்டி பாடிய பாட்டையும் பூட்டு போட்டு சோப்பு டப்பாவில் வச்சுட்டோம், அப்புறம் எப்படி தெரியும் மரபும், பாரம்பரியமும். இதெல்லாம் தெரியாமல் குழந்தைகள் குழந்தைகளாகவே வளர்வதில்லை. அவர்களின் பாதி வாழ்க்கையை டிவி, செல்போன், வீடியோ கேம், கிரிக்கெட்னு எடுத்துக்குது. மீதி பாதியை பள்ளிக்கூடம், ஹோம்வொர்க், புராஜெக்ட்னு எடுத்துக்குது.

குழந்தைகள் மத்த குழந்தைகளுடன் கூடி கும்மாளம் போட்டு, பல்டி போட்டு விளையாடுவது, புழுதியில் புரளுவது, மண் வீடு கட்டுவது, கடை வைக்கிறது, வேப்பிலையால் கோவில் கட்டுவது, அதற்கு திருவிழானு சிறப்பிப்பது, தேங்கி நிற்கும் தண்ணீரில் ஆட்டம், ஓடும் தண்ணீரில் குதியாளம், காகிதக் கப்பல், மரம் மரமா ஏறி குரங்கு விளையாட்டு, தீப்பெட்டியில் பொன்வண்டும், வெங்காயக் கூடையில் முயல் குட்டி வளர்ப்பதும் என குழந்தைகளுக்கே உண்டான உரிமையை நாம் கொடுக்கத் தவறிவிட்டோம்.

மீறிக் கேட்டால் என் பையன் அந்த கிளாஸ் போறான், இந்த கிளாஸ் போறான், அவுங்க ரொம்ப பிசியா இருக்காங்க, இதுக்கெல்லாம் நேரம் இல்லை என நொண்டிச்சாக்கு சொல்வது. ஒரு குழந்தை தானாகவும், தன் சக குழந்தைகளுடனும் விளையாடிப் பெறுகின்ற புதுப்புது அனுபவப் பாடங்களை எந்த ஒரு ஸ்பெஷல், சூப்பர் ஸ்பெஷல் கிளாசும் கொடுத்துவிட முடியாது. குழந்தைகள் ஒவ்வொரு முறையும் நமக்கு பதில் தெரியாத கேள்வி கேட்கும் போது, அதிகம் பேசாதே, அதிகப் பிரசங்கி என அவர்களை நாம் அமுக்கி விடுகிறோம்.

இதனால் குழந்தைகளின் கேள்வி கேட்கும் ஆர்வம் குறைந்து அறிவும் குறையும்.தான் கேட்கும் சமூகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் கிடைக்காதபோது, குழந்தை அது தொடர்பான தவறான நிகழ்ச்சியைப் பார்த்து தவறான பதிலை சித்தரித்துக் கொள்ளும், அதன் பிரகாரம் வாழும் போது தவறாகத்தான் நடக்கும்; பாதிப்பு குழந்தைக்குத்தான். இவ்வளவு தூரம் வழவழ கொழகொழனு சுத்தி சுத்தி பேசுவது உங்க குழந்தையை அறிவாளியாகவோ, அப்துல் கலாமாகவோ மாற்ற இல்லீங்க; ஒரு சாதாரண பண்பும், பணிவும், மரியாதையும், அன்பும், விட்டுக்கொடுக்கும் மனமும் படைத்த மனிதனாக உருவாக்கத்தான்.

குழந்தைகளை குழந்தைகளாக வாழவிடும்போதுதான் இந்த குணம் கிடைக்கும். அதை விட்டுப்போட்டு, என் குழந்தையை யானையாக்குறேன், எலியாக்குறேன், டாக்டர் ஆக்குறேன், பூனையாக்குறேன்னு யாராவது கெளம்பி இருந்தீங்கன்னா தயவுசெய்து உங்களை மாத்திக்கோங்க. எனக்கு பழக்கமான சகோதரியின் அம்மா, ‘ஏய் இந்தா பாரு, நீ அறிவாளினு பேரு எடுக்காட்டியும் பரவாயில்லை, ஒழுக்கம், மரியாத தெரியாதவனு பேரு எடுக்கக் கூடாது’னு சொல்லுவாங்களாம்.

அத இன்னும் நினைவுல கொண்டு நடக்குறாங்களாம் அந்த சகோதரி. நம்ம குழந்தைகளின் வாழ்க்கையில் அறிவு அவசியம். வரப்பில் நடந்த தாத்தா சொன்ன மாதிரி எதார்த்தமான வாழ்க்கைக்கு ஓரளவு அறிவு தேவைப்படுகிறது. பாட்டி சொன்ன கதைகளிலும், பாட்டுகளிலும் அந்த அறிவுச்சாரம் பொதிந்து கிடந்தது. அதை தனக்குள் வாங்கிக்கொண்டு தேவைப்படும் போது தனக்காகப் பயன்படுத்தி சமூகத்தில் மனிதராக வாழமுடியும். இந்த வாழ்க்கை வாழ உடல், உணவு, மனம் என சகலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதைப்பத்தி குழந்தைகளிடம் பேசும்போது குழந்தைகளாகவே பேசவேண்டும்.

அப்போதான் அவர்களுக்கு அது சேரும். எது நல்லது, எது கெட்டது, எதை நீக்கிச் சாப்பிட வேண்டும், எதை சேர்த்துச் சாப்பிட வேண்டும் என எடுத்துக் கூறி அவ்வாறே வாழவேண்டும். இப்படியெல்லாம் செஞ்சாத்தான் இந்தக் காலத்து வாண்டுகள் அந்தப் பழக்கத்த பழகுவாங்க. வெள்ளை கோட்டு போட்ட டாக்டர்கள் சொல்லுறாங்க, குழந்தைகள் தங்களின் ஆறாவது வயதிற்குள் பெரும்பாலான அறிவைப் பெற்று விடுகின்றனர்; அதிலும் குறிப்பாக தாய் தந்தையிடமிருந்து தான் அதிகம் கற்றுக் கொள்கின்றனர் என்று. இப்படியிருக்க, உங்க குழந்தைக்கு நீங்க ஒரு தவறான பாடமாக இருக்கலாமா? யோசிங்க. நல்லா யோசிங்க, மரத்தடியில் உட்காந்து யோசிங்க, நடந்துக்கிட்டே யோசிங்க. பால்கனியில் நின்னுக்கிட்டு யோசிங்க. மாற்றத்த முதல்ல நம்மகிட்ட இருந்து தொடங்குவோம்.

(பருகுவோம்...)
படங்கள்: சுப்ரமணி

பொன்னாங்கண்ணி சாறு குழம்பு

தேவையான பொருட்கள்

பொன்னாங்கண்ணி இலைச் சாறு - 300 மில்லி
புளித்த சோற்று வடிகஞ்சி - 100 மில்லி
பூண்டு - 4 பல்
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
சீரகம் - கால் தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
மஞ்சள் - 2 சிட்டிகை
கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி
உப்பு-சுவைக்கு
நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடுகு - சிறிதளவு
கருவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

* சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, மஞ்சள், உப்பு,கொத்தமல்லி விதை, மிளகு, சீரகம் இவையனைத்தையும் நன்கு அரைத்துக் கொள்ளவும்
* இரண்டு மேசைக்கரண்டி எண்ணெயை சூடாக்கி அதில் இந்த விழுதை நன்கு வதக்கவும்.
* பின் பொன்னாங்கண்ணி சாறு, புளித்த வடிகஞ்சி இவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். இக்கலவை நன்கு கொதித்து பச்சை வாசனை போன பிறகு, மீதமுள்ள எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும். உடலுக்கு குளிர்ச்சியையும், நல்ல கண்பார்வையையும் கொடுக்கும்.

* குளித்தல்ங்கிறது உடலை குளிர்விப்பது. பச்சைப்பயறு மாவு, சீயக்காய் தூள் தேய்த்து தினம் இருவேளை தலைக்குக் குளிக்க வேண்டும். உடல் சூடு தணிந்தால் வெகுவான தொந்தரவுகள் குறையும்.
* பல்லில் கிருமிகள் போகத்தான் பல் துலக்க வேண்டும்; மாறாக நுரைக்காகவோ, சுவைக்காகவோ இருக்கக் கூடாது. நல்ல இயற்கையான பல் பொடி கொண்டு தன் விரலால் ஈறுகளைத் தேய்த்து பின் பல்லை மென்மையாகத் தேய்க்க வேண்டும்.
* உணவை வீணாக்காமல் உண்ண வேண்டும், உணவு கிடைக்காமல் பலபேர் இருக்காங்க.
* தரையில் உட்கார்ந்து உணவு உண்ண வேண்டும்.
* தூக்கத்திற்கு முன் செல்போன், டிவி, கம்ப்யூட்டர்னு எதையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். நல்ல இருட்டில் தூங்க வேண்டும்.
* பெற்றோர்கள் தம் குழந்தைகள் கக்கா சரியா போறாங்களானு கவனிக்கணும்.
* தன் வேலையை தானே பாத்துக்கறதுக்கு பழக்கணும்.