உதவி



‘டமால்..!’ என்று சத்தம் கேட்டது. பஸ் ஸ்டாப்பில் தனியே ஓரமாக நின்று கொண்டிருந்த திருஞானம் திரும்பிப் பார்த்தான். ஸ்கூட்டியில் வந்த ஒரு இளம் பெண், மணலில் சறுக்கி கீழே விழுந்து கிடந்தாள். கூடியிருந்த எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். உதவலாமா? வேண்டாமா? என்று இருமனதுடன் தவித்துக்கொண்டிருந்தான் திருஞானம்.

உதவி எதிர்பார்த்து, கிடைக்காத அவள் தானாகவே எழுந்து ஸ்கூட்டியை எடுத்தாள். நல்ல சிராய்ப்பு. வண்டியைத் தள்ளிக்கொண்டு, பஸ் ஸ்டாப்பில் நிற்கும் இவனிடம் நேராக வந்தாள். ‘‘அதான் விழுந்ததை பார்த்தீங்கல்ல! ஹெல்ப் பண்ணலாம்ல! அதுக்கு கூடவா மனசில்லாம போயிருச்சு!’’ சற்று கோபத்தோடு கேட்டாள். ‘‘ஸாரிங்க! இதே போலத்தான், போன மாசம் ஒரு பொண்ணு சைக்கிள்ல இருந்து விழுந்தா!

எல்லாரும் சும்மா இருக்க, நான் மட்டும் ஓடிப் போய் தூக்கினேன்! ஆனா அந்தப் பெண்ணோ, ‘நோ! தேங்க்ஸ்! நானே பார்த்துக்கிறேன்’னு சொல்லிட்டா! எல்லாரும் சிரிச்சுட்டாங்க! எனக்கு அசிங்கமா போச்சு! அதுனால யாரும் கேக்காம ஹெல்ப்புக்கு போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்!’’ என்றான். ‘‘ரொம்ப ஸாரி சார்!’’ என்றாள் அந்தப் பெண். ‘‘நீங்க எதுக்குங்க ஸாரி சொல்றீங்க!’’ ‘‘அன்னைக்கு ‘வேண்டாம்’னு சொன்னது, நான்தான்!’’

-ரவிக்குமார்