நட்பு மொழி



-அறிவுமதி

* நண்பர்களால் மட்டுமே
அழகு பெறுகிறது
திருமண
வரவேற்பு

* அனைத்துக் கல்லூரி
பாட்டுப் போட்டியில்
கலந்து
கொண்டேன் நான்
யாரென்று தெரியாமலே
எனக்காக
நடுவர்களிடம்
சண்டை போட்டான் அவன்
இப்போது
அவன்
கல்லூரியில்
தேநீர்
குடித்துக் கொண்டிருக்கிறேன்

* நேற்று நீ போன பிறகு
இவரை
என்ன சொல்லிம்மா
கூப்பிடட்டும்
என்று கேட்டாள்
மகள்
அகராதிகளுக்குக் கொஞ்சம்
அவமானம்தான்

* அம்மா அப்பா செல்ல இன்னும்
அனுமதி
கிடைக்காத வெளிநாட்டில்
நண்பனின்
அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறது
குழந்தை

* உடலுக்கு உட்பட்டது
இல்லறம்
உடலுக்கு
அப்பாற்பட்டது
நட்பறம்

ஓவியம்: ப்ரத்யூஷ்