சிம்பு நம்பர் 1 ஆகணும்!
கௌதம் மேனன் பளீர்
இளமை
இனிமைக்கு கௌதம் வாசுதேவ் மேனன் தான் என்றைக்கும் சாய்ஸ். ‘அச்சம் என்பது மடமையடா’ ரிலீஸ் பரபரப்பு பரவிக்கிடக்கிறது. தூறல் விரும்பி விழுந்த இளம் மாலைப்பொழுதில் நடந்தது இந்த காஃபிஷாப் உரையாடல். இனி, ஓவர் டு கௌதம்மேனன்.
‘‘ ‘AYM’ பாடல்கள் ரொம்பவே ஹிட்.. படம் எப்படி வந்திருக்கு...?’’ ‘‘என்னோட வழக்கமான ஃபார்முலாக்களை இந்தப் படத்தில் உடைச்சிருக்கேன். ஒரு மாஸ் மேக்கிங். வித்தியாசமான ட்ரீட்மென்ட்னு ஒரு புதுப்பாணி இருக்கு. ஒரு போர்ஷன் முழுக்க மியூசிக்கல் ட்ரீட். அடுத்த போர்ஷன் முழுக்க மியூசிக்கே இல்லாம ட்ரீட் பண்ணியிருக்கேன். செகண்ட் ஆஃப்ல நல்ல த்ரில் இருக்கு. வாழ்க்கையில என்னவேணா நடக்கலாம். அதை எதிர்கொள்ள நாம ரெடியா இருக்கோமா என்பதுதான் அதிரடி ஒன்லைன்.
ஒரு படத்தை முடிச்சதும் அடுத்த நிமிஷமே பார்வையாளனா மாறி படத்தைப் பார்க்க ஆரம்பிச்சிடுவேன். அந்தப் படம் ரிலீஸ் ஆகுற வரை அது எப்படி வந்திருக்குனு என்னால ஜட்ஜ் பண்றது சிரமம். ரஹ்மானின் பின்னணி இசை ரொம்பவே ஸ்பெஷல். படம் ஆரம்பிச்சு ரெண்டு வருஷ தாமதத்திற்குப் பிறகும் இவ்வளவு எதிர்பார்ப்பு இந்தப் படத்துக்கு கிடைச்சிருக்கறதுக்கு காரணம், ரஹ்மானின் மியூசிக் மிராக்கிள் தான். இதைத்தாண்டி சிம்புவோட பங்களிப்பும் அபாரம்.’’
‘‘சிம்பு உங்கள எதுவும் சொல்லல. ஆனா, நீங்க எதையும் மனசில வச்சுக்காம பேசுறீங்க...’’ ‘‘சிம்புகிட்ட நிறைய விஷயங்கள் பிடிக்கும். நல்ல நடிகர். இதுல அருமையா ஒரு கேரக்டர் பண்ணியிருக்கார். படத்துல அவருக்கு சில பிரச்னைகள் வரும்போது, நாமளும் அந்த கேரக்டர் பின்னாடி போயிருவோம். அப்படி ஒரு வெயிட் நடிப்பு. கடைசி ஸாங் ஷூட் பண்ண வரும்போதுகூட சிம்பு கொஞ்சம் வெயிட் போட்டிருந்தார். ஆனா, அந்த லுக்கையும் தாண்டி பின்னியிருந்தார். ரொம்ப இயல்பு. அழகான ஒரு ட்ராவலை லைவ்வா ஷூட் பண்ணியிருக்கோம்.
சிம்பு, மஞ்சிமான்னு யூனிட்ல எல்லாருமே சேர்ந்து ஒரு பஸ், ட்ரெயின்ல போயிட்டு வந்தோம். நினைக்கும் போதெல்லாம் இனிக்கற அனுபவம். அந்த சிம்புதான் எனக்கு பிடிக்கும். அவர்தான் எனக்கு எப்பவும் வேணும். ஒரு ஃபைட் சீன் ஆரம்பிக்கும் போது, ‘பிரதர் அந்த ஃபைட்டர் நல்லா பண்ணுவாரா? எக்ஸ்பீரியன்ஸ் ஆர்ட்டிஸ்ட் வச்சு பண்ணலாமே’னு கேட்டார். ‘இல்ல, நல்லா பண்ணுவார். டேக் போயிடலாம்’னு சொன்னேன்.
‘எனக்கு என்னமோ தப்பாத்தெரியுது’னு சொல்லி இறங்கினார். சிம்பு இறங்கின பத்தாவது நிமிஷத்துல அவர் மூக்குல அடி. பொல பொலனு சிம்புவுக்கு ரத்தம் கொட்டிடுச்சு. பதறிட்டோம். சிலநேரங்கள்ல அவர் உள்ளுணர்வு சரியா சொல்லும். அதெல்லாம் எனக்கு ஆச்சரியம். சில விஷயங்களை மட்டும் அவர் சரி பண்ணிக்கிட்டார்னா அவர் அவ்ளோ நல்ல மனிதர். இந்த பேட்டியை சிம்பு படிச்சிட்டு, ‘அது என்ன விஷயம்’னு எங்கிட்ட கேட்பார்.
‘பல பேட்டிகள்ல சொன்ன விஷயம் தான்’னு நான் சொல்லிடுவேன். அவருக்கு எப்போ மூட் வருதோ அப்போதான் ஷூட்டிங் வருவார். ‘எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல. என்னோட ரசிகர்களுக்காகத்தான் நான் நடிக்கறேன்’னு சொல்லுவார். அஜித் மாதிரி அவர் புரொமோஷன்களுக்கு வரவேண்டாம். ஷூட்டிங்கிற்கு கரெக்ட் டைமுக்கு வந்தா போதும்.
அவர் வந்ததினாலதான் இந்தப் படம் முடிஞ்சு, ரிலீஸ் ஆகியிருக்கு. அவரோட டைம மட்டும் பார்க்காம மத்தவங்களோட நேரத்தையும் அவர் அனுசரிக்கணும். நாம சிம்பு படம் பண்ண விரும்பினால், அதை தயாரிக்க நிறைய புரொடியூசர்கள் கூடி வரணும். அவர் மூணாவது, நாலாவது இடங்கள்ல இருக்கக் கூடாது. நம்பர் ஒன் இடத்துல இருக்கணும்னு விரும்புறேன்.’’
‘‘மஞ்சிமா மோகன்... ரொம்ப க்யூட் அண்ட் ஹோம்லி...’’ ‘‘நீங்க சொல்லாம இருந்தா, அதை நானே சொல்லியிருப்பேன். மலையாளத்துல ‘ஒரு வடக்கன் செஃல்பி’ படத்துல மஞ்சிமா நடிச்சிருந்தாங்க. அதோட டைரக்டர் வினித் சீனிவாசன், ஒரு நாள் எனக்கு எஸ்.எம்.எஸ். பண்ணியிருந்தார், ‘மஞ்சிமா உங்க படத்துல நடிக்க ஆர்வமா இருக்காங்க’னு. ஒரு பக்கத்து வீட்டு பொண்ணு லுக் இந்தப் படத்துக்கு தேவைப்படாது. கிளாமர் இல்லாமல் சிரிச்ச முகமா, ஹோம்லியா மஞ்சிமா இருந்ததால், இந்தப் படத்துக்குள்ள வந்துட்டாங்க.’’
‘‘இளையராஜா, ரஹ்மான், ஹாரிஸ்னு எல்லாருக்குமே உங்கள பிடிக்குது...’’ ‘‘கடவுளோட ஆசீர்வாதம். ஹாரிஸோட செய்த ட்ராவல் எப்பொழுதும் ஒரு அழகான பயணம். ரஹ்மான் இன்னும் பியூட்டிஃபுல். ராஜா சாரோட ரசிச்சு வொர்க் பண்ணியிருக்கேன். லண்டன் வரை ஒண்ணா அவரோட பயணப்பட்டிருக்கேன். எல்லார்கிட்டேயும் வொர்க் பண்ணும்போதும், அவங்க கொடுக்கற ட்யூனை அப்படியே அள்ளிட்டு வந்து, பாடலாசிரியர் தாமரைகிட்ட கொடுத்திடுவேன். யார்கிட்டேயும் சாய்ஸ் கேட்டதில்ல. எல்லாருமே எனக்கு பெஸ்ட்டா கொடுப்பாங்க. ஒருவிதத்தில அதெல்லாம் அதிர்ஷ்டம்தான்.’’
‘‘நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கீங்களே.. வாழ்த்துகள்!’’ ‘‘இல்லீங்ளே! ‘இமைக்கா நொடிகள்’ படத்துல நடிக்க கேட்டாங்க. ரொம்ப ட்ரை பண்ணினாங்க. எனக்கு இருக்கற வொர்க்குக்கு கண்டிப்பா நடிப்புக்காக ஒருநாள் கூட செலவு பண்ணமுடியாது. ‘இவ்ளோ வொர்க் இருக்கும் போது எப்படி அதுக்கு போக முடியும்’னு என் கூட இருக்கறவங்களும் விடவே இல்லை.
ஆனா, அவங்க ரொம்ப ஆசையா ஸ்கிரிப்ட் சொல்லி, எனக்கு லுக் செட் பண்ணி காட்டினாங்க. அதுல என்னால நடிக்க முடியாமப் போனதுல சின்ன வருத்தம்தான். ‘பவர் பாண்டி’ல கெஸ்ட் ரோல்தான் பண்ணியிருக்கேன். சிம்பு மாதிரியே தனுஷும் ரொம்ப ஃப்ரெண்ட்லி. ‘ப்ரோ, வந்திடுங்க’னு தனுஷ் அன்பா கூப்பிட்டார். ‘நோ’னு சொல்ல முடியல. போய் நடிச்சிருக்கேன். ‘பவர் பாண்டி’ல அவர் எப்படி டைரக்ட் பண்றார்னு பார்த்தேன். பத்து படங்கள் டைரக்ட் பண்ணின அனுபவசாலி இயக்குநர் மாதிரி டேக் இட் ஈஸியா பண்றார்.’’
‘‘உங்க யூ டியூப் சேனல்... ‘ஒன்றாக என்டர்டெயின்மென்ட்’ல உரையாடல்கள் பிரமாதப்படுத்துதே?’’ ‘‘அப்டீங்களா? ‘ஒன்றாக’னா.. நிறைய பேர்களோட கூடிச் சேர்ந்து வேலை செய்யுறதே அழகு. சும்மா ஒரு ப்ளான் பண்ணி, என்னோட பார்டன்ர்ஸ் பெயரை வச்சு பண்ணினேன். யூ டியூப் சேனலுக்கும் அந்தப் பெயரை வச்சோம். ‘உரையாடல்’ங்கற பெயர்ல தனுஷ், அனுஷ்கா நேர்காணல்களை செய்யப்போக பெரிய வரவேற்பு. சந்தோஷமா இருக்கு.’’
- மை.பாரதிராஜா
|