நட்பு மொழி



-அறிவுமதி

* அடுத்த ஆணிடம்
கைபேசி எண் கேட்டுப்
பதிவு செய்கிற
பெண்ணைப் பார்த்து
பதட்டப்
படாதவன்
நண்பன்

* சம்மதிக்க வைத்துப்
படுத்து
எழுந்தும் விடலாம்
ஆனால்
நிமிரவே முடியாது

* உடல் பார்க்கக்
கூப்பிடும் காமம்
கடல் பார்க்கக்
கூப்பிடும் நட்பு

* எனக்குத் தேவை
என்னோடு விவாதிக்க
ஒரு மூைள
அது ஆண்பாலில் இருந்தால் என்ன
பெண்பாலில் இருந்தால் என்ன
மூன்றாம் பாலில்
இருந்தால் என்ன

* சப்பானிய நண்பனை
ஊருக்கு
அழைத்திருக்கிறேன்
அவனுக்கு
வேட்டி சட்டை வாங்கப்
போயிருக்கிறார்கள்
அப்பா
அம்மா

ஓவியம்: ப்ரத்யூஷ்