குட்டிச்சுவர் சிந்தனைகள்
ஆல்தோட்ட பூபதி
உலக யுத்தம் கூட ரெண்டு தான் வந்திருக்கு, ஆனா உலகையே உலுக்குற சத்தம் மூணாவது பார்ட் வரப்போகுது. இணையத்துல இந்த வார பரபரப்பே சூர்யா-ஹரி கூட்டணில வர சிங்கம் 3 டீசர் தான். வீட்டுல வேலை வெட்டி இல்லாதவன், ஜோப்புல நயா பைசா இல்லாதவனல்லாம் இப்ப நாட்டுல திரைப்பட விமர்சனம், டிரெய்லர் விமர்சனம்னு செய்யறாங்க; நாம ஒரு படி மேல போயி டீசர் விமர்சனமே செய்வோம். ஆக்சுவலா சொல்லப்போனா, விட்டது டிரெயிலர் தான்.
ஹரி டைரக்ஷன் என்பதால் காட்சிகள் எல்லாம் இம்புட்டு வேகமா ஓடி டீசர் டைம்ல முடிஞ்சிருதுன்னு உளவுத்துறை ரிப்போர்ட் சொல்லுது. ஹரி இப்படி சீன்ஸை வேகமா எடிட் பண்ணி ஓட விட்டா, ‘சாமி’, ‘பூஜை’, தாமிரபரணில இருந்து சில சீன்களை உள்ள சொருகுனாலும் ஒரு பய கண்டுபிடிக்க மாட்டான். தல தளபதிலாம் டீசர்ல பாட்டு பாடுறாங்க, எனக்கொரு பாட்டு சொல்லுங்கப்பான்னு சிவக்குமார் சாரிடம் சூர்யா கேட்டிருப்பார் போல... ‘ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால்’னு எம்.ஜி.ஆர் பாட்டோட ஆரம்பிக்குது டீசர்.
ஷங்கர் தன் படத்துல பெயிண்ட் அடிக்கிறதை நிறுத்துனாலும், ஹரி படத்துல ஹீரோ சவுண்டு விடுறத விட மாட்டாரு போல. எந்த பட டிவிடிய மியூட் பண்ணி பார்த்தாலும், டயலாக்குகள் தெளிவா கேட்குதோ, அது நிச்சயம் ஹரி படமாத்தான் இருக்கும்; சொல்லப்போனா ஹரியோட படங்களுக்கு எல்லாம் தியேட்டர்ல கூட மியூட் பட்டன் வைக்கணும்.
இந்தியாவுல பறவைகள், ஃப்ளைட்டுகள், கட்சிக்கொடிகளுக்கு அப்புறம் அதிகமா பறப்பது ஹரி படத்துல அடியாளுங்க தான். சிங்கம் 3ல எப்படியும் 24547 நபர்கள் சூர்யாகிட்ட உதை வாங்கி அந்தரத்துல பறப்பாங்கன்னு பட்சி சொல்லுது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, பஞ்சாப், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கான்னு சூர்யா ஒவ்வொரு பாகத்துலயும் ஊர் ஊரா போயிக்கிட்டே இருக்காரு, எப்படியும் சிங்கம் 10 வரப்ப, பிரதமர் மோடியின் டூர் லிஸ்ட்டை முறியடிச்சிடுவாருன்னு தோணுது.
சத்தத்துக்கு சூர்யா முத்தத்துக்கு அனுஷ்கா, ஸ்ருதி மற்றும் யுத்தத்துக்கு ஏழெட்டு வில்லன்னு டீசரை பார்க்கிறப்ப படத்தைப் பார்க்கும் ஆவல் அதிகமாகுது. கார், குதிரை, புல்லட், ஜீப்னு சூர்யா சைக்கிளைத் தவிர எல்லாத்துலயும் வராரு. கண்டிப்பா பக்கா ஆக்ஷன் படமா தான் வந்திருக்கும். ஆனா ஒண்ணு, சிங்கம் 3லயும் அனுஷ்காவ கல்யாணம் பண்ணாம சூர்யா ஏமாத்துனா, நேரா கேஸை, ‘ஈ’ தொலைக்காட்சியின் சொதப்புவதெல்லாம் உண்மைக்கு எடுத்துட்டுப் போகவேண்டியதுதான்.
ஐநூறு ரூபா நோட்ட பார்த்தே ஆறு மாசமாச்சு, ஆயிரம் ரூபா நோட்டு இருக்கிறதே போன தேர்தலப்ப ஓட்டுக்கு நோட்டு கொடுத்தப்பதான் தெரியும். இதுல ரெண்டாயிரம் ரூபா நோட்டை வேற அரசாங்கம் விடப்போகுதாம். அதுல ஒரு குரூப்பு அந்த ரெண்டாயிர ரூபா நோட்டுல காந்தி தாத்தா போட்டோ இருக்காதுங்குது, இன்னொரு குரூப்பு காந்தி படம் இருக்குங்குது.
ஆனா சப்போஸ் மகாத்மா போட்டோ இல்லாட்டி அவருக்கு மாற்று வேட்பாளரை கண்டுபிடிச்சு கொடுத்துட்டு போறது நம்ம கடமையில்லையா? பிரதமர் மோடி போட்டோவை போடலாம்தான். ஆனா டக்குன்னு பார்க்கிறப்ப வெளிநாட்டு கரன்சின்னு மாத்தி நினைக்க வாய்ப்புண்டு. அமித் ஷா போட்டோவை போட்டா, எல்லோரும் இயக்குனர், நடிகர் சந்தானபாரதி போட்டோன்னு கன்பியூஸ் ஆயிடுவாங்க. அரவிந்த் கெஜ்ரிவால் போட்டோவை போடலாம், ஆனா நோட்டை அவசரத்துக்கு மடக்க முடியாது.
ராகுல்காந்தி போட்டோவை போடலாம், ஆனா ஐம்பது ரூபாய் நோட்டையும் ஐநூறு ரூபாய் நோட்டையும் ஒரே மாதிரி தான் மக்கள் பார்ப்பாங்க, ரூபாயின் மதிப்பு பல வருஷமாகியும் ஏறாது. நேதாஜி சுபாஷ் போட்டோவை போட்டா, கைல இருந்த பணம் போற இடம் தெரியாது. சிவகார்த்திகேயன் போட்டோவை போடலாம் தான், ஆனா அவரு ரசிகர்களான அஞ்சாப்பு படிக்கிற குழந்தைகள் கைல பணப்புழக்கம் அவ்வளவு இல்லை.
அம்மா போட்டோவை போடலாம்னா பயபக்தில ஒரு பய செலவு பண்ண வெளிய எடுக்க மாட்டான். அதனால என் ஐடியா என்னன்னா, அதிகமாக பயன்படும் பத்து ரூபாய் நோட்டில் நயன்தாரா போட்டோவையும், இருபது ரூபாய் நோட்டில் தமன்னாவையும், கொஞ்சம் பெரிய சைஸ் அனுஷ்கா போட்டோவை ஐம்பது ரூபாய் நோட்டிலும் அச்சடிக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல், இன்னைக்கு இந்தியாவுல நூறுன்னு சொன்னாலே நினைவில் வரும் பேரு விராட் கோலி, மேட்ச்சுக்கு மேட்ச் நூறடிக்கும் கோலியின் போட்டோவை நூறு ரூபாய் நோட்டிலும், எப்பவாவது தான் ரஜினி படம் வருது; அதனால அடிக்கடி பார்க்கிற நோக்கத்தோடு ஐநூறு ரூபாய் நோட்டில் சூப்பர்ஸ்டார் போட்டோவையும், தேர்தல் சமயங்களில் மட்டுமே பார்க்க முடிவதால், அந்த நன்றியை காட்டக்கூடிய வாய்ப்பாக, ஆயிரம் ரூபாய் நோட்டில் தலைமை தேர்தல் கமிஷனர் போட்டோவையும் போடுமாறு என் விருப்பத்தைக் கூறுகிறேன். கடைசியா, ரெண்டாயிரம் ரூபாய் நோட்டையெல்லாம் வாழ்நாளில் பார்க்கும் வாய்ப்பே அமையப் போவதில்லை என்பதால் அதில் ஏதேனும் கடவுள் படத்தைப் போட்டு விடுங்கள் என முடித்துக்கொள்கிறேன்.
ஓவியங்கள்:அரஸ்
|