நியூஸ் வே* கடந்த நவம்பர் 5ம் தேதி லட்சக்கணக்கான வாழ்த்துகளுக்கு மத்தியில் கேர்ள்ஃப்ரண்ட் அனுஷ்கா சர்மா உடன் இணைந்து தனது 28வது பிறந்தநாளை ஸ்பெஷலாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் இந்திய ெடஸ்ட் கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி! இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் நகரில் நடக்கிறது.

இதற்காக ராஜ்கோட் வந்திருந்த இந்திய அணி கேப்டன் கோஹ்லியுடன் அனுஷ்காவும் கைகோர்த்து வரும் புகைப்படங்கள் செம வைரலாகி விட்டன. தீபாவளியைச் சேர்ந்து கொண்டாடியது, பிறகு கோவா ஃபுட்பால் போட்டியை ஒன்றாகக் கண்டுகளித்தது என இருவருக்குமான நெருக்கம் சமீபத்தில் கூடியிருக்கிறது.

* கேரளாவில் வரும் 20ம் தேதி தொடங்க இருக்கிற மது மற்றும் தவறான போதைப் பழக்கத்திற்கு எதிரான ‘விமுக்தி’ விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில் பங்கெடுக்க உள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இதற்காக, கடந்த ஜூன் மாதமே முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து தன் பெயரை பயன்படுத்திக் கொள்ளும்படி ஆதரவு தெரிவித்திருந்தார் சச்சின்!

* டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த அளவைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக அங்கு காற்று மாசடைந்துள்ளது. இதனால் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஐந்து தினங்களுக்கு கட்டடம் கட்டுதல் மற்றும் இடிக்கும் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

சமீபத்தில் தீபாவளியின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளில் இருந்து வெளியேறிய புகை, வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை மற்றும் அண்டை மாநிலங்களில் அடுத்த விளைச்சலுக்காக அறுவடை செய்யப்பட்ட வயல்கள் கொளுத்தப்படுவதினால் உருவாகும் நச்சுப்புகை டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

* கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தையின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்காக ‘பிரதமர் தாய்மை பாதுகாப்பு இயக்கம்’ என்கிற திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது மத்திய அரசு. யுனிசெப் உடன் கைகோர்த்து ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், ஒவ்வொரு மாதமும் 9ம் தேதி கர்ப்பமான பெண்கள் இலவச செக்அப் செய்துகொள்ள வழி செய்கிறது. இதில், அல்ட்ரா சவுண்ட், சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனை ஆகியவை அடங்குமாம்.

இதனை, அரசு சுகாதார நிலையங்களில் தனியார் டாக்டர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் கர்ப்ப காலங்களில் 44 ஆயிரம் பெண்களும், சுமார் 6.1 லட்சம் குழந்தைகளும் இறப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனாலேயே இந்த அதிரடித் திட்டம் என்கிறது மத்திய சுகாதாரத் துறை!

* காஷ்மீரில் 58 சிறுமிகளுக்கு ராணுவ நுணுக்கங்களுடன் கூடிய தற்காப்புக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.‘‘இதனால் சிறுமிகளிடம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நாட்டில் பெருகி வரும் பலாத்காரம், வன்முறை இவற்றிலிருந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள முடியும். மேலும் ஆயுதமின்றி போர் செய்யும் முறையும் இவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதால் உயிருக்கு சேதாரம் இல்லாமல் தங்களைத் தாங்களே ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள முடியும்’’ என்கிறார்  பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர்.