தமிழகத்திற்கு உணவுப் பாதுகாப்புச் சட்டம் பயனளிக்குமா?கடைசியாக அது நடந்தேவிட்டது. மத்திய அரசின் அச்சுறுத்தலுக்குப் பணிந்து கடந்த நவம்பர் 1-ந்தேதி முதல் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறது தமிழக அரசு! வறுமையில் வாடும் மக்களின் பசியைப் போக்க, ‘அனைவருக்கும் உணவு’ என்ற குறிக்கோளோடு கொண்டு வரப்பட்ட சட்டம் பல்வேறு சர்ச்சைகளோடு அரங்கேறியிருக்கிறது. இந்தச் சட்டம் தமிழகத்திற்கு எந்தவிதத்தில் பயனளிக்கும்? அதற்குமுன் உணவுப் பாதுகாப்புச் சட்டம் பற்றி ஒரு ஃப்ளாஷ்பேக்.

கடந்த 2013-ல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைவருக்கும் உணவு கிடைக்கவேண்டும் என்பது இதன் முக்கிய நோக்கம். அதன்பிறகு வந்த பா.ஜ.க அரசும் இதை வழிமொழிந்து செயல்படுத்தியது. இந்தச் சட்டம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களை முன்னுரிமைப் பிரிவினர் என்றும், மேல் உள்ளவர்களை பொதுப் பிரிவினர் என்றும் இரண்டாகப் பிரித்து  வடிவமைக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி, ஒரு நபர் மாதம் 5 கிலோ அரிசியை மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். அரிசி ரூ.3க்கும், கோதுமை ரூ.2க்கும், மற்ற தானியங்கள் ரூ.1 க்கும் ரேஷனில் கிடைக்கும். ஆனால், இந்தச் சட்டத்தை அமல்படுத்தத் தவறினால் வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள குடும்பங்களுக்காக வழங்கும் அரிசியின் விலையை ரூ.8.30ல் இருந்து ரூ.22.54 க்கு அதிகப்படுத்துவோம் என தமிழக அரசை பயமுறுத்தியிருக்கிறது மத்திய அரசு.

சட்டத்தை அமல்படுத்தாமல் போனால், ரூ.2,730.95 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்பதால் ஒப்புதல் அளித்திருக்கிறது தமிழக அரசு. இருந்தும், இந்தச் சட்டம் அமலுக்கு வந்தாலும் இப்போதுள்ள ரேஷன் நடைமுறையே தொடரும் என அறிக்கையில் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், சட்டத்தில் நிறைய சர்ச்சைகள் இருப்பதாக கணித்துள்ளனர் நிபுணர்கள்.

இந்தத் திட்டத்தின்படி அடுத்த சில ஆண்டுகளில் உணவு வழங்கும் முறையைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக நேரடி மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும. அப்படிச் செய்தால் அனைத்து ரேஷன் கடைகள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடவேண்டியிருக்கும். அதோடு, மூன்று வருடத்திற்குப் பிறகு வறுமைக் கோட்டுக்கு மேலுள்ளவர்களுக்கான ரேஷன் விலையும் அதிகமாகிவிடும்.

‘‘இந்தச் சட்டப்படி ஒரு கிராமத்தில் யார் ஏழை, யார் ஏழை இல்ைல என்பதை தீர்மானிப்பதில் பல குழப்பங்கள் இருக்கின்றன. அதனால், ஏழையாக இருந்து அவர் முன்னுரிமைப் பிரிவில் வராமல் விலக்கப்பட்டால் அது கஷ்டமானதாகிவிடும். அடுத்து, வறுமையை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கக் கூடாது. எந்த இலக்கும் இல்லாமல் எல்லோருக்கும் உணவு கொடுக்க வேண்டும். இலக்கு சார்ந்து போகும் திட்டங்கள் எல்லாம் ஊழலுக்குத்தான் வழிவகுக்கும்.

இதுமட்டுமல்ல... அடுத்த மூன்றாண்டுகளில் வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள பொதுப் பிரிவினரின் ரேஷன் பொருட்கள் விலை கூட்டப்படும் என இந்தச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதுவும், இதிலுள்ள மோசமான அம்சங்களில் ஒன்று’’ என ஆதங்கப்படுகிறார் பொருளாதார நிபுணரான பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா.

‘‘மத்திய அரசின் இந்தச் சட்டம் நபர் ஒன்றுக்கு ஐந்து கிலோ அரிசி என்கிறது. இது மூன்று வேளையும் அரிசி சாப்பிடும் ஏழை ஒருவருக்கு போதுமானதாக இருக்குமா? வடஇந்தியாவில் அரிசியுடன், கோதுமையும் வழங்கப்படுவதால் அவர்களுக்கு அது போதுமானது. ஆனால், இது நமக்குப் போதுமானதல்ல. அதனால் நபர் ஒன்றுக்கு வழங்கும் 12 கிலோ அரிசி அப்படியே தொடரும் என்ற அரசின் அறிவிப்புதான் நமக்கு நம்பிக்கை அளிக்கும் விஷயம்’’ என்கிறார் நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த சோமசுந்தரம்.

இதுபற்றி ஓய்வுபெற்ற சிவில் சப்ளை ஊழியர்கள் சங்கத் தலைவர் சின்னக்கண்ணு, ‘‘இப்போது நம்மிடம் உள்ள பொது விநியோக சிஸ்டம் சிறப்பான ஒன்று. இந்த சட்டம் வந்தாலும் பொது விநியோக முறை சிறப்பாகவே செயல்படும்’’ என நம்பிக்கை அளித்துப் பேசுகிறார்:
‘‘இப்போது தமிழக அரசு ரேஷன் கார்டுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு கொண்டு வரும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த ஸ்மார்ட் கார்டு திட்டம் முடிந்துவிட்டால்  பயனாளிகள் யார் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது, சிலர் இரண்டு, மூன்று கார்டுகள் வைத்து ரேஷன் வாங்கி வருகிறார்கள். இதில்தான் பல குழப்பங்கள் நீடிக்கின்றன. அதையெல்லாம் இந்த ஸ்மார்ட் கார்டு சிஸ்டம் நிச்சயம் தடுத்துவிடும்’’ என்கிறார் அவர் நிறைவாக! ஆனால், இந்த ஸ்மார்ட் கார்டு வாங்க ஆதார் கார்டு அவசியம். இன்னும் ஆதார் கார்டே அனைவருக்கும் வழங்க முடியாமல் இருக்கும்பட்சத்தில் ஸ்மார்ட் கார்டு எப்போது வரும்? இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கும்? என்பதே பலரின் எதிர்பார்ப்பு! 

- பேராச்சி கண்ணன்