தமிழ்நாட்டு நீதிமான்கள்
-கோமல் அன்பரசன்
வி.எல். எதிராஜ் சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் அதற்கு முன்பு இப்படி நடந்ததே இல்லை. அதற்குப் பின்னரும் அப்படியொரு நிகழ்வு இன்று வரை நடந்தேறியதே கிடையாது. எத்தனையோ ஜாம்பவான்கள் எல்லாம் அரசு வழக்கறிஞர்களாக இருந்திருக்கிறார்கள். சாதித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்களில் யாருக்கும் இந்தப் பெருமை கிடைக்கவில்லை. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சர். ஓவன் பீஸ்லி அடங்கிய முதல் அமர்வு நீதிபதிகள் ஒன்று சேர்ந்து அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
நீதிமன்றத்திற்குள் தலைமை நீதிபதி வரவேற்றும் வாழ்த்தியும் பேசினார். இத்தனைக்கும் தலைமை நீதிபதி ஒரு வெள்ளைக்காரர். வரவேற்கப்பட்டவரோ ஒரு இந்தியர். அதிலும் எதிராஜ் என்ற ஒரு தமிழர். இப்படி பல வரலாற்றுச் சிறப்புகளோடு, பழைய சென்னை மாகாணத்தின் சட்டத்துறை வரலாற்றில், பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் வி.எல்.எதிராஜ். வேலூரில் லட்சுமணசாமி முதலியாருக்கும் அம்மாயி அம்மாளுக்கும் 1890 ஜூலை 18 ஆம் தேதி பிறந்தவர் எதிராஜ்.
மாதம் ரூ.25 வருமானம் உள்ள சாதாரண கட்டிட மேஸ்திரியாக இருந்த லட்சுமணசாமி, எதிராஜ் வளர, வளர லட்சங்களில் சம்பாதிக்கும் ஒப்பந்ததாரரானார். படிப்பில் சுமாரான மாணவராக இருந்த எதிராஜை ‘ உருப்படாமல் போய்விடுவாய்’ என சொந்தங்கள் கரித்துக்கொட்டின. பட்டப்படிப்புக்காக சென்னை வந்து, மாநிலக்கல்லூரியில் சேர்ந்த அவர் பாடங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறினார். டியூஷன் படிக்க மாதம் ரூ.10 கட்டணத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் அமர்த்தப்பட்டார்.
(அவர் வேறு யாருமல்ல! பிற்காலத்தில் இந்திய குடியரசுத்தலைவரான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்) அதன் பின்னர், லண்டனுக்குப் போய் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். ஆயிரக்கணக்கான வழக்குகளிலும், நூற்றுக்கணக்கான வக்கீல்களின் வாழ்விலும் யாரும் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்திய எதிராஜ், முதன் முதலில் வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்ததும், அவருக்கு சீனியர் அமைந்ததும் திடீர் திருப்பங்கள் நிறைந்த சுவாரஸ்யமான கதை.
பாரிஸ்டர் பட்டம் வாங்கிவிட்டு வந்த எதிராஜை சட்ட விதிகளின்படி சீனியர் ஒருவர் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும். மூத்த பாரிஸ்டரான சேமியர்ஸ் ( இன்று இவரது பெயரில் ஆழ்வார்பேட்டையில் சாலை உள்ளது) எதிராஜை முன்மொழிவது என்று முடிவானது. அதற்கான நாளில் சேமியர்ஸின் வருகைக்காக எதிராஜ் நீதிமன்றத்தில் காத்திருந்தார். அடையாரில் வசித்த சேமியர்ஸ், வித்தியாசமான மனிதர். அவரது காரில் சைக்கிள் ஒன்று எப்போதும் இருக்கும்.
கார் எங்காவது பழுதானால், சைக்கிளில் ஏறி நீதிமன்றத்திற்கு குறித்த நேரத்தில் வந்துவிடுவார். அத்தனை தொழில் பக்தி. ஆனால் அன்றைக்குப் பார்த்து காரும் சைக்கிளும் ஒருசேர தகராறு செய்தன. எதிராஜ் கையைப் பிசைந்து கொண்டு நின்ற நேரத்தில், இன்னொரு மூத்த வழக்கறிஞரான டாக்டர் சுவாமிநாதன், தான் அறிமுகப்படுத்த வேண்டிய இளம் வக்கீலின் வருகைக்காகக் காத்திருந்தார். இரண்டு பேரும் சந்தித்துக்கொண்டார்கள். எதிராஜை, சுவாமிநாதனே அறிமுகம் செய்துவைத்தார்.
அடுத்த நாள் அவரிடமே ஜூனியராகச் சேர்ந்தார் எதிராஜ். ஆரம்பத்தில், எதிராஜ் சிவில் வழக்குகளை எடுத்து நடத்தினார். அன்றைய சென்னையில் வெள்ளைக்கார பாரிஸ்டர்களும் மயிலாப்பூர் வக்கீல்களுமே தொழிலில் கொடிகட்டிப் பறந்தனர். அவர்களை மீறி தொழில் செய்வது அத்தனை எளிதானதாக இல்லை. போராடிக்கொண்டிருந்த எதிராஜுக்கு ஒரு நாள் பொறி தட்டியது. முழுமூச்சாக கிரிமினல் வழக்குகளை கையிலெடுப்பது என்று முடிவெடுத்தார்.
ஏனென்றால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற கிரிமினல் வழக்குகளில் வாதாடுவதை மயிலாப்பூர் வக்கீல்களில் பலர் அன்றைக்கு கௌரவக் குறைச்சலாக நினைத்தனர். ஒன்றிரண்டு வெள்ளைக்காரர்கள் மட்டுமே அத்தகைய வழக்குகளை நடத்தி வந்தனர். எதிராஜின் அந்த சரியான முடிவே, அவரின் அத்தனை வெற்றிகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டது. வெள்ளைக்கார பாரிஸ்டர்களான ஜெ.சி.ஆடம், ஈ.எஸ்.ஆஸ்பேர்ன் போன்றோரிடம் சில காலம் ஜூனியராகப் பணியாற்றினார்.
அப்போது 1920-ல் ‘தி கோயம்புத்தூர் போட்டோகிராபர் மர்டர் கேஸ்’ எதிராஜ் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. ‘மைனர்’ ஜமீன்தாரான சூலூர் சுப்பாராவ் என்பவர், பெண் தகராறில் புகைப்படக்காரர் ஒருவரை காரோடு எரித்துக் கொன்றதுதான் அவ்வழக்கு. அதில் அரசு வழக்கறிஞர் ஆடம். அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு. வேறு வழியின்றி ஜூனியரான எதிராஜ், வழக்காடுவதற்கு கோயம்புத்தூருக்குப் போனார். எதிர்த் தரப்பிலோ கிரிமினல் வழக்குகளில் கரைகண்டவரான சடகோபாச்சாரியார். ‘சூலூர் சுப்பாராவுக்கு வாதாட தென்னிந்தியா முழுக்க பெயர்பெற்ற சடகோபாச்சாரியார் வருகிறார்’ என்றவுடனே நீதித்துறை வட்டாரம் தீர்ப்பு அவருக்கே சாதகம் எனும் தீர்மானத்திற்கு வந்துவிட்டது.
போதாக்குறைக்கு அரசுத் தரப்பிலோ, தொழிலுக்கு வந்து 7 ஆண்டுகளே ஆன ஜூனியர்தான் என்றபோது அந்த எண்ணம் இன்னும் வலுப்பட்டது. ஆனால் அத்தனையையும் தவிடு பொடியாக்கினார் எதிராஜ். கிடைத்த வாய்ப்பைப் பக்குவமாகப் பயன்படுத்திக் கொண்டு போலீஸ் தரப்பை நிரூபித்தார். சுப்பாராவுக்கும் கூட்டாளிகளுக்கும் தண்டனை கிடைத்தது. சடகோபாச்சாரியாரை எதிர்த்து வென்ற எதிராஜ், ஒரே நாளில் ஒட்டுமொத்த சென்னை மாகாணத்தின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினார். அதன் பிறகு அவருக்கு எல்லாமே ஏறுமுகம்தான்.
இத்தனைக்கும் எதிராஜ், அருவி போல ஆங்கிலம் பேசி அசரடிப்பவர் அல்லர். நீதிமன்றத்தில் ஆவேசமாக அடித்து, மிரட்டி வாதங்களை வைப்பவரும் கிடையாது. எடக்கு மடக்காக குறுக்கு விசாரணை செய்து வழக்கை நடத்தும் விற்பன்னராகவும் அவர் இல்லை. இவற்றையெல்லாம் தாண்டி, நீதிமன்றத்தைத் தன்பால் ஈர்க்கும் ஆளுமையாக அவர் திகழ்ந்தார். அதற்கும் மேலாக, நீதிபதிகளின் எண்ண ஓட்டத்தைப் படித்து, அதற்கேற்றாற்போல வழக்கை நகர்த்தி, வெற்றிக்கனியைப் பறிக்கும் அபூர்வமான தனித்திறன் எதிராஜிடம் இருந்தது.
‘ஒரு குறிப்பிட்ட நீதிபதிக்கு முன்பாக, ஒரு வழக்கை எப்படி சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் எதிராஜ், மிகவும் சிந்தித்துச் செயல்படுவார். வழக்கு சம்பந்தமான சட்டக்குறிப்புகளை எவ்வளவு ஆழமாகப் படிப்பாரோ, அதே அளவில் நீதிபதிகளின் இயல்பு குறித்தும் விரிவாகப் பயில்வார். நீதிபதிகளுக்குக் கோபமூட்டும் வகையிலோ, வெறுப்பு உண்டாக்கும் விதத்திலோ அவர் ஒருபோதும் நடந்துகொள்ளமாட்டார்’ என்று எதிராஜிடம் இளநிலை வழக்கறிஞராகப் பணியாற்றி, ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதியான பாசி ரெட்டி கூறியிருக்கிறார்.
இதுதவிர, குற்ற வழக்குகளில் நிகழ்வுகளையும் சூழலையும் ஆராய்ந்து பார்த்து, மறைந்து கிடக்கும் நுட்பமான உண்மைகளைக் கண்டுபிடித்து, சுருக்கமாக அவற்றை முன்வைத்து ஆர்ப்பாட்டமில்லாமல் வெல்வது எதிராஜின் பாணியானது. ‘குற்ற வழக்குகளில் சட்டத்திற்கு இரண்டாவது இடம்தான்; வழக்கு சம்பந்தமான உண்மைகளே முக்கியமானவை. அதனால் சம்பவங்களையும் சூழ்நிலைகளையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். சட்டம், தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும்’ என்று ஜூனியர்களுக்கு நிறைய முறை சொல்லி இருக்கிறார் எதிராஜ்.
அதே நேரத்தில் அசாத்திய உழைப்பாளியாகவும் அவர் திகழ்ந்திருக்கிறார். பல வழக்குகளில் இரவு முழுக்க விவரங்களைச் சேகரிப்பார். வழக்கின் வெற்றிக்குத் தேவையானவற்றைத் தயார் செய்யும் வரை கண் அசரமாட்டார். நேரம் தவறாமையில் எதிராஜ் உறுதியாக இருப்பார். நீதிபதி வருவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பே நீதிமன்றத்தில் தயாராக இருப்பார். எவ்வளவு கடினமான நேரத்திலும் எதிராஜ் கோபப்பட்டதில்லை. ஆறடிக்கு மேலான ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட அவரின் முகத்தை அமைதியும் மெலிதான புன்னகையும் வாழ்நாள் முழுதும் குத்தகைக்கு எடுத்திருந்தன.
ஒரு கட்டத்தில் சராசரியாக நாள்தோறும் 30 வழக்குகளில் முன்னிலையாக வேண்டிய அளவுக்கு பரபரப்பான வழக்கறிஞராக மாறிப்போனார். அதன் உச்சமாக ஒரே நாளில் 44 வழக்குகளில் வாதாடினார். எதிராஜிடம் ஜூனியராகவும், அப்ரண்டிசாகவும் சேருவதற்கு பெரும் இளைஞர் கூட்டம் வரிசை கட்டி நின்றது. அதில், சமஸ்தானத்து ராஜாக்கள், அரசியல் தலைவர்கள், செல்வந்தர்களின் சிபாரிசுக் கடிதங்களோடு வந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். எப்படியாவது எதிராஜிடம் சேர்ந்துவிட வேண்டுமென்பது 1930களில் சட்டம் படித்து முடித்த பலரின் கனவாக இருந்தது.
வெற்றி பெற்ற வழக்கறிஞர் என்பதற்கு அப்பால் ஜூனியர்களை எதிராஜ் நடத்தியவிதம் அற்புதமாக இருந்தது. இளம் வக்கீல்களிடம் தான் மூத்த வழக்கறிஞர் என்ற அதிகாரத் தோரணையில் அவர் எப்போதும் நடந்து கொண்டதில்லை. தன்னோடு இருக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கு நல்ல தலைவராக, ஆசானாக மட்டுமின்றி, சமமாகப் பழகிய நண்பராகவும் எதிராஜ் விளங்கினார். அவரது வீட்டில் அல்லது அலுவலகத்தில் தன்னுடைய மேசையைச்சுற்றி இளநிலை மற்றும் தொழில் பயிலும் வக்கீல்களுடன் உட்கார்ந்து ஆலோசிப்பார். அனுபவம் இல்லாதவர்கள் சொல்லும் கருத்துகளைக்கூட மிகுந்த அக்கறையுடன் காது கொடுத்துக் கேட்பார்.
அந்தளவுக்கு இளைஞர்களுக்கு சுதந்திரமும் வாய்ப்பும் கொடுத்தார். அதனால்தான் எதிராஜிடம் தொழில் பயின்றவர்கள், தென்னிந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நீதிபதிகளாகவும் புகழ்வாய்ந்த வழக்கறிஞர்களாகவும் இருந்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளான என்.சோமசுந்தரம், ஆர்.சதாசிவம், பி.எஸ்.கைலாசம், கே.நாராயணசாமி முதலியார், எம்.நாராயணமூர்த்தி ஆகியோரும், கேரள நீதிபதி கோவிந்தமேனன், கர்நாடக நீதிபதி சந்தோஷ், ஆந்திர நீதிபதிகள் பாஸி ரெட்டி, ஜெகன்மோகன் ரெட்டி போன்றவர்களெல்லாம் எதிராஜின் சீடர்களே.
இவர்களில் பி.எஸ்.கைலாசம், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதியரசர்களாகவும், நாராயணசாமி முதலியார் தமிழக சட்ட அமைச்சராகவும் இருந்தவர்கள். சில வழக்குகளில் இவரிடம் இளநிலை வக்கீலாக இருந்த ஆர். வெங்கட்ராமன், இந்திய குடியரசுத்தலைவராக ஆனார். வழக்கறிஞர்கள் எஸ்.கோவிந்தசாமிநாதன், ஏ.எஸ்.சிவகாமிநாதன், ஜி.கே.தாமோதர ராவ், பி.ஸ்ரீராமுலு, மயிலாப்பூர் எஸ்.பிச்சை என நீளும் பட்டியலில் உள்ள அனைவருமே ‘எதிராஜிடம் தொழில் பயின்றது எங்கள் பாக்கியம்’ என்றே சொல்லியிருக்கின்றனர். மூத்த வழக்கறிஞரான பிச்சை, எதிராஜ் பற்றி இப்போது பேசினாலும் கண் கலங்கி நெகிழ்ச்சியோடு பகிரும் செய்திகள் ஏராளம். அதை அடுத்த வாரம் பார்க்கலாம்...
கார் பிரியர் வித விதமான கார்களை வாங்குவதில் எதிராஜ் விருப்பம் மிகுந்தவர். ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி, காடிலாக், டெசோடோ, டாட்ஜ், செவர்லே என ஒரு காலத்தில் அவரிடம் 6 கார்கள் இருந்தன. அந்த கார்களுக்கு தனித்துவமான எண்கள் வாங்குவதிலும் எதிராஜுக்கு பிரியம் உண்டு. 1000 என்ற சென்னை பதிவெண்கள் அவரிடமே இருந்தன. 4444 என்ற எண்ணும் அவருக்குப் பிடிக்கும். 10 நாட்களுக்கு ஒன்று என இந்தக் கார்களைப் பயன்படுத்துவார். மெரினா கடற்கரையில் தினமும் மாலை நேரத்தில் எதிராஜ் கார் ஓட்டிச் செல்லும் அழகே தனி.
கார்டும் இல்லை; போர்டும் இல்லை பேனா, கடிகாரம், பர்ஸ் எதையும் எதிராஜ் வைத்துக்கொள்ளமாட்டார். விசிட்டிங் கார்டும் அவரிடம் இருக்காது. இதேபோல, எதிராஜின் வீட்டு வாசலில் பெயர்ப்பலகையே கிடையாது. அது பற்றி அவரிடம் கேட்டால், ‘விக்டோரியா கிரசண்ட் சாலை, எண். 1 எதிராஜின் வீடு என்பது எல்லோருக்கும் தெரியும். பிறகேன் பெயர்ப்பலகை?’ என்பார். (இப்போது அந்தச் சாலை, எதிராஜ் சாலை என்றே அழைக்கப்படுகிறது)
ஓவியம்: குணசேகர்
|