உயிரமுது



தமிழர் உணவுகளின் உன்னத சுவை

-ராஜமுருகன்

‘செயியுவ் டியூவாங் சீங்’ (shengwu duoyang xing) என்பதுதான் இயற்கை. ‘‘இரண்டு வாரமா தொடர் நல்லாதானே போச்சு... அதற்குள் என்ன ஆச்சோ? என்ன என்னவோ எழுதுறீங்களே’’ எனப் பதற வேண்டாம். ‘செயியுவ் டியூவாங் சீங்’ என்ற சீன மொழி வாசகத்துக்கு ‘உயிர்ப் பன்மயம்’ என அர்த்தம். இந்த ‘உயிர்ப் பன்மயம்’ பெரும்பாலும் சாதாரண தமிழ் மக்களுக்கு புரியாத அறிவியல் சொல்லாகவே உள்ளது.  ‘சக உயிரினத்தின் வாழ்வுரிமையையும் மதித்து, அதற்கு ஆபத்து வராத அளவுக்கு வாழ்தல்’ என்பதே இதன் அர்த்தம்.

ஆக, ஒரே இடத்தில் பல வகையான உயிரினங்கள் பகுத்துண்டு வாழ்தல்தான் இந்த செயியுவ் டியூவாங் சீங். ‘‘எங்க சார்! கணவன் மனைவியே பகுத்துண்டு வாழ முடியல! இதுல பல உயிரினமா?’’ என பெருமூச்சு விடாதீர்கள். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி நலமுடன் வாழத்தான்  இயற்கை இந்த பூமியை வடிவமைத்துள்ளது. இதைத்தான் தாடிக்கார, பச்சைத் துண்டு கிழவன் நம்மாழ்வார் ஒவ்வொரு மேடையிலும் பேசுவார்... ‘ஒரு உயிரினத்தின் கழிவு மற்றொரு உயிரினத்தின் உணவு’ என்று.

இன்னும் ஆழமாகவும் தெளிவாகவும் சொல்வதென்றால், நம் சங்க இலக்கியங்களைப் படைத்தவர்கள், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என திணை வகைகளைப் பிரித்துப் பாடியிருக்கிறார்கள். இந்த இலக்கியங்களில் தெள்ளத் தெளிவாக உள்ளது, உயிர்ப் பன்மயத்தின் நன்மை சார்ந்த அறிவு. தமிழ் மக்களின் ஒவ்வொரு நிலத்திலும் மனிதன், ஆடு, மாடு, பறவைகள் என சக உயிரினங்களோடு பகிர்ந்து உண்டு, கடவுளையும் வணங்கி, ஒவ்வொருவருக்கும் இடைஞ்சல் இல்லாத ஒற்றுமையான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தனர்.

அந்தக் கால வாழ்வில் தம் தேவையை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு, மற்ற இனங்களுக்கு இடையூறு இல்லாமல், கொடையுணர்வுடன் வாழ்ந்தனர். எறும்புக்குக் கூட அரிசி மாவு கோலம் போட்டு அன்பு காட்டியவர்கள். கோடையில் திரியும் குருவிகளுக்காக தண்ணீர்த் தொட்டி வீட்டிலேயே வைத்தவர்கள். அவர்களுடனே அந்தக் கோட்பாடும் மறைந்து விட்டது இன்று!

‘மறைந்ததை மீண்டும் கொண்டு வருவேன்’ என  அனைவரும் காட்டுக்குப் போகலாம் என கிளம்பிவிடும் சூழல் இல்லை இப்போது! அங்கேயும் நிம்மதியாக வாழ முடியாது. அந்தக் காட்டுக்குள் யானையும், புலியும், மானும், கரடியும் வாழ முடியாமல்தான் ஊருக்குள் வருகின்றன. விலங்குகள் இப்படி ஊருக்குள் வருவது உயிர்ப் பன்மயம் அழிந்து விட்டது என்பதை உணர்த்தும் உச்ச அறிகுறி. விலங்குகளின் வாழ்விடத்தை நாம் பயன்படுத்துகிறோம்.

அதை விலங்குகள் அசௌகரியமாக நினைத்தது இல்லை. ஆனால் அவற்றின் வாழ்விடத்தைச் சிதைக்கும்போதுதான் அவை ஊருக்குள் வருகின்றன. காடு என்ற அழகான சூழலை சிதைத்தது நாம்தான். காலையில் ஆவி பறக்க ஊதி ஊதிக் குடிக்கிற காபியும், டீயும், ஏன்... ‘ஆரோக்கியத்துக்கு நல்லது’ என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கிரீன் டீயும் எத்தனை காடுகளை அழித்து உருவாக்கப்பட்டன என ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்.

எப்போது நாம் டீ, காபி குடிக்க ஆரம்பித்தோமோ, அன்றே ஆரம்பித்தது இந்த சூழலியல் மற்றும் உடல் கேடு. நம் பாட்டன், பூட்டன், முன்னோர்கள் காலையில் டீயும் குடித்ததில்லை, காபியை கண்ணால் பார்த்ததுமில்லை. காலையில் வெயில் மேலே ஏறுவதற்கு முன் நீராகாரம் அல்லது வெண்ணெய் கடைந்து எடுத்த மோர்தான் முதல் உணவு. வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கும் அன்று இதுதான் வெல்கம் ட்ரிங்க். நாம் எப்போது சுவைக்கு அடிமையாகி காபி, டீ குடிக்க ஆரம்பித்தோமோ அன்றே அதனுடைய தேவை அதிகமானது.

அதனால் மலைப்பகுதி மண்ணுக்கு சொந்தமான நாட்டு மரங்களை அழித்து, பணப்பயிரான காபி செடியையும், தேயிலையையும் பயிரிட்டான் ஆங்கிலேயன். அதனால் மலைகளில் மரமும் குறைந்தது, தரைப்பகுதியில் நமக்கான மழையும் நின்றது. குடிக்கத் தண்ணீர் குறைந்து காசு கொடுத்து வாங்குகிறோம்; காசு கொடுத்து வாங்கும் நமக்கு துளி அளவு கூட குற்ற உணர்வு வருவது இல்லை. குறைந்த விலையில் கிடைக்கிறது என மகிழ்கிறோம். 

உணவு உற்பத்தி குறைந்து, ஊட்டச்சத்தும் குறைந்து போய்விட்டது. இப்படித்தான் ஆசைக்காக உயிர்ப் பன்மயத்தை சீர்குலைத்து நம் அடுத்த தலைமுறையினரின் வளங்களையும் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்குகிறோம். ‘‘அப்போ நாங்க டீ, காபி குடிக்கிறத நிறுத்தினா மழை வருமா?’’ என கேட்பவர்களுக்கு ஒரு பதில்... வரும்! மரத்தை வெட்டாமல் இருந்தாலும் மழை வரும். அதுமட்டும் இல்லாமல், நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்; வெள்ளைச் சர்க்கரையினால் எலும்புருக்கி நோய் வருவதற்கான ஆபத்தும் குறையும்.

ஒரு ஆள் குடிப்பதை நிறுத்தினால் மாறாது. 10 பேர் மாறினால், பத்து பத்து பேராக பத்து லட்சம் பேர் மாறினால் நிச்சயம் மாற்றம் தெரியும். டீ, காபி எஸ்டேட் தேவைப்படாமல் போனால், அந்த இடமெல்லாம் மரம் வளரும்; அதன் விளைவாக மழை வரும். குடிக்க தண்ணீர் கிடைக்கும், வேளாண்மை சிறக்கும். நாம் வாழும் வாழ்க்கையில் எது அவசியம், எது தேவை என்பது புரியாமல் பித்துப் பிடித்து உயிர்ப் பன்மயத்தை அழிக்கிறோம்.

அப்படி இல்லாமல் இந்த வாழ்வியலைப் பாதுகாத்து, பத்திரப்படுத்தி நம் குழந்தைகளிடம் ஒப்படைக்கும் பொறுப்பு நமக்கு நிறையவே உள்ளது. ‘‘எல்லாம் சரிதான். நான் எப்படி என் வீட்டில் இந்தப் பன்மயத்தைப் பாதுகாப்பது?’’ என்ற கேள்வி எழலாம். நாம் வாழும்போது நம்மைச் சுற்றி நமக்காக வாழ்கிற அல்லது வளர்கிற உயிரினங்களையும், அவற்றின் உணர்வுகளையும் மதித்து நடப்பதுதான் அது. ஒரு விவசாயி தன்னுடன் ஆடு, மாடு, கோழி, வாத்து, நாய் என அனைத்தையும், தனக்கும் தன் வேளாண்மைக்காகவும் வளர்ப்பார்.

அந்த வீட்டில் ஒரு பூனை ஆசையாக வளர்க்கப்படும். இப்படிப்பட்ட இடத்தில் பன்மயம் பளபளக்கும். நகரத்தில் வாழ்பவர்களுக்கு உயிர்ப் பன்மயத்தைப் பார்க்க ஒரே வழி, வீட்டுத்தோட்டம். ஒரே இடத்தில் பல வகையான உயிரினங்களை வளர்ப்பதுதான் பன்மயம். இது நமக்கான காய்கறிகளையும் கொடுக்கும். சிறுசிறு உயிரினங்களுக்கு இடமும் கொடுக்கும். ‘இதெல்லாம் ஆகாது.

எங்க வீட்ல இடம் இல்லை’ என சூழல் இருந்தால், ஒரு சின்னத் தொட்டியில் துளசி போன்ற மூலிகைச் செடியை மேசை மீதே வளர்க்கலாம். பத்து நிமிடம் வெயில் படுமாறு வைத்தால் போதும்... நன்கு வளரும். நல்ல ஆக்சிஜனைக் கொடுக்கும். ‘மாத்தி யோசி’த்தால்தான் நாம் வாழும் இந்த வாழ்க்கையை மென்மையாக நகர்த்த முடியும்.

நாம் மாறினால் மற்றவர்களும் மாறுவார்கள். இப்படியே மாற்றம் பரவி பூமியை அழிவிலிருந்து காக்கும் முயற்சியாக இது அமையும். இந்த முயற்சி ‘குருட்டுப் பூனை விட்டத்துல பாஞ்ச’ மாதிரி இல்லாமல், ஆழமாக இருக்க வேண்டும். இது நம்முடன் நம் குழந்தைகளிடத்திலும் வளர வேண்டும். அதற்கு குழந்தைகளுக்கு வாழ்வியல் அறிவைக் கற்றுத் தருவது ஒன்றே வழி.

(பருகுவோம்...)

படங்கள் நன்றி: சுரேஷ்பாபு


கூட்டுக் குழம்பு

தேவையானவை:

கம்பு - 1 கைப்பிடி,
சீரகம் - 1/2  தேக்கரண்டி,
மிளகு - 1 தேக்கரண்டி,
பூண்டு - 10 பல்,
இஞ்சி - சிறு துண்டு 
மஞ்சள் கிழங்கு- சிறு துண்டு,
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி,
மல்லி விதை - 2 தேக்கரண்டி,
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி,
புளி - எலுமிச்சை அளவு,
கொத்தவரங்காய் - 1 கோப்பை,
கத்தரிக்காய் - 3,
நல்லெண்ணெய்,
கடுகு - தாளிக்க,
கருவேப்பிலை - 2 கொத்து,
உப்பு - சுவைக்கு

செய்முறை:

சுத்தப்படுத்திய கம்புடன், சீரகம், மிளகு, பூண்டு, வெங்காயம், இஞ்சி, மஞ்சள், பெருங்காயம், கொத்தமல்லி அனைத்தையும் மைய அரைத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும், நறுக்கிய கொத்தவரங்காய், கத்தரிக்காய் சேர்த்து வேக விடவும். பாதி வெந்த பிறகு புளிக் கரைசலையும் உப்பையும் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வேகவிடவும்.

நன்கு வெந்தபிறகு கடுகு, கருவேப்பிலை தாளித்து குழம்பில் கொட்டவும். கைக்குத்தல் அரிசிச் சோறு, கம்பு சோறு, சோள சோறு போன்றவற்றுக்கு இது சுவை கூட்டும். இரும்பு சக்தி நிறைந்தது. மிக எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, காய்கறியுடன் சமைக்கும் முறை, நம் சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது. உயிர் பன்மயத்தை பாதுகாக்கிறது. உள்ளூர் உற்பத்தி... உள்ளூர் நுகர்வு.