அவர் தனியாக இருக்கிறார்!சமீப காலமாக பத்திரிகைச் செய்திகளில் அதிகம் ‘அடி’பட்டவர் கமல். கமலிடமிருந்து பிரிந்துவிட்டேன் என்று சிறிய விளக்கத்தோடு கௌதமி அறிக்கையை வெளியிட திரி கிள்ளிப்போட்ட மாதிரி பற்றி எரிந்தது கோலிவுட். ஒவ்வொரு தடவை அவரை பிரச்சினைகள் சூழும்போதும் ‘நான் துணிச்சல்காரன். எதைப்பற்றிப் பேசவும் தயக்கமற்றவன், விமர்சனங்ளைப் பற்றி கவலைப்படாதவன்’ என்றே கூறி வந்திருக்கிறார்.

ஆனால் இந்தத் தடவை அவர் எதையும் வெளிப்படையாகப் பேசவில்லை. அடுத்த வீட்டுப் படுக்கையறையை எட்டிப் பார்ப்பது அவருக்கு சௌகரியமான விஷயமாகப்படவில்லை. ஏனெனில், இது பலபேருடைய வாழ்க்கை கலந்தது. அவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. Many lives are involved. அதுகுறித்துப் பேசுவது தர்மமல்ல என்றே அவர் ஒதுங்கியிருக்கிறார்.

கமலே சொல்லிக் கொள்வது மாதிரி அவர் திறமைசாலிதான். சாமர்த்தியசாலி கிடையாது. எல்லாவற்றையும் கைமீறிப் போகாமல் வைத்துக் கொள்கிற பழக்கமும் அவருக்குக் கிடையாது. சரிகா விஷயத்திலும் ‘இங்கே யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய கடமை எனக்குக் கிடையாது. விளக்கம் கேட்க வேண்டிய உரிமையும் உங்களுக்குக் கிடையாது. இதுதான் நிஜம். எந்த பப்ளிக்கும் இதைத் தெரிந்துகொள்ளாவிட்டால் இதுவே பெரிய சோகமாக, அடுத்த வேளை உணவுக்கு சோறு பொங்க முடியாமல் போய்
விடாது. அரிசி விலை குறையாது.

மண்ணெண்ணெய் விலை குறையாது. அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படாது. பாதையில் உள்ள பள்ளங்கள் நிரப்பப்படாது. என்னைக் கேள்வி கேட்காதீர்கள். இதுதான் என் தாழ்மையான வேண்டுகோள்’ என்றார். சொல்லப்போனால் இதுதான் சரி. இதுவேதான் உண்மை. அவருக்கு விட்டு விட்டு எப்போதும் இப்படி ஒரு இழப்பு, கஷ்டம், பிரிவு நடந்து கொண்டே இருக்கிறது. அதை தனியாக அனுபவிக்க அவருக்கே உரிமை இருக்கிறது.

சோகமும், தாக்கமும், பிரிவும் ஒருத்தருக்கு பெரிய குற்றமாகிவிடாது. சின்ன பிழைகள் இருக்கலாம். எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கும். இப்போதைக்கு வேறு விஷயங்களைப் பேசுவதே கமல்ஹாசனின் கண்ணியத்திற்கும், கேள்வி கேட்பவர் கண்ணியத்திற்கும் நல்லது. முதலிரண்டு திருமணங்களும் கால இடைவெளியில் தோல்வி அடைந்த பிறகு அவர் தேர்ந்தெடுத்தது ெகளதமியின் நட்பை. ‘ஹானஸ்ட் அண்ட் ப்யூட்டி ஃபுல் ரிலேஷன்ஷிப்’ என கௌதமியால் முன்மொழியப்பட்டதுதான் இந்த உறவு.

கௌதமியின் திருமணமும் கசந்து போய் சின்னஞ்சிறிய மகள் சுப்புலட்சுமியோடு தனியாகத் தவித்து நின்றபோது, ‘நான் தைரியத்தைக் கற்றுக்கொண்டது கமலிடமே’ என அவரே சொல்லியிருக்கிறார். அப்பொழுது எங்களிடம் இருந்தது ‘balanced attitude’ என்றார். ஆனால் இன்று பேலன்ஸ் தவறிவிட்டது. சரிகாவிடமிருந்து கமல் பிரிந்த நேரமும், ெகளதமி, தன் கணவரிடமிருந்து விலகிய நேரமும் ஒன்றாக அமைய கிளைவிட்டது கமல்-கௌதமி உறவு.

யாரும் இந்த 13 வருட சேர்ந்திருந்த வாழ்க்கையை கேலி பேசியதில்லை. அன்போடு அங்கீகரித்த உறவு இது. ஒருவரையொருவர் இணைந்து செய்யப்பட்ட சிநேகிதம் இது. இதில் யாருக்கு பங்கு அதிகம் என தனித்துச் சொல்ல இயலாது. திடுமென கேன்சர் தாக்கி அப்போலோ மருத்துவமனையில் பல மாதங்கள் தங்கியிருந்து கௌதமி சிகிச்சை பெற்றார். பெரிய நடிகன் என்ற மன அமைப்பு பற்றிக் கொள்ளாமல் உடனிருந்து உதவியவர் கமல்.

அரவணைப்பின் புது அத்தியாயத்தை அவரே எழுதினார். கௌதமியை புதுப்பித்து வெளியே கொண்டு வந்த வகையில் கமலின் முன்முனைப்பை, பரிதவிப்பை அப்போலோவின் தனித்த தாழ்வாரங்கள் அறியும். மணிக்கணக்கில் அவர், கௌதமி சிகிச்சை பெற்று வரும் வரை காத்திருந்ததை இன்றைக்கும் சீனியர் செவிலியர்கள் பேசிக் கொள்வார்கள். அது ஒரு காலம். கமலுக்கும் கௌதமிக்குமான புரிதல் நெருக்கமானது. கமலின் ஒரு சாதாரண புன்னகைக்கே ெகளதமியால் வேறொரு அர்த்தத்தை உணர முடியும். குழந்தை கள் வளர்ந்தபிறகுதான் பிரச்சினை ஆரம்பித்தது. அக்‌ஷரா, அம்மா சரிகாவின் பாதுகாப்பில் இருந்துவிட்டார்.

ஸ்ருதிதான் நீண்ட ஷூட்டிங்கிற்கு மத்தியில் அன்பைத் தேடினார். அப்பாவின் கவனிப்பு அவருக்குத் தேவையாக இருந்தது. ஸ்ருதி, ெகளதமி, சுப்புலட்சுமி எனப் பிரித்து நேரம் ஒதுக்கியது ஸ்ருதிக்குப் பிடிக்கவில்லை என்கிறார்கள். கௌதமி மகளை திரையுலகிற்குக் கொண்டு வருவதில் அக்கறையாக இருந்தார். அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இருந்தார். அப்பா, ெகளதமிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் என்ற குறைபாடு ஸ்ருதியின் மனதளவில் தோன்றிவிட்டது என்கிறார்கள்.

கமல் சமீபத்தில் விபத்துக்குள்ளானபோது உடனடியாக தனக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்ற குமுறலும் ஸ்ருதியிடம் உண்டு. மருத்துவமனையில் இருந்த அத்தனை நாட்களும் உடனிருந்து கவனித்தார் ெகளதமி.  இடையில் வந்த சின்னச் சின்ன விவாதங்கள், முகச்சுளிப்புகள், முகத்தைத் திருப்பிக் கொண்டது என எல்லாம் ஒன்று சேர்ந்து, ெகளதமியை இந்த முடிவுக்கு தள்ளியிருக்கிறது. எல்லாம் இருந்தும், சரியாகிவிடும் என்று சினிமா ஸ்கிரிப்ட்டில் கவனமாக இருந்த மனநிலை கமலுடையது.

‘சண்டியர்’, ‘விஸ்வரூபம்’ என பல பிரச்னைகளுக்குப் பிறகு, இது கமலின் வாழ்க்கை சார்ந்தது. தனது அக்கறை சார்ந்த இந்த விவகாரத்தில் யார் மேலும் பந்தயம் கட்டாமல் அவரே விளையாடுவார். பப்ளிக்காக அதை அவர் என்றாவது சொல்லக்கூடும். ஆனால் யாரை வைத்துக்கொண்டும், அதுவும் முற்றிலும் அந்நியமான, மூன்றாவது மனிதர்களை வைத்துக்கொண்டு அதை அவர் செய்யவே மாட்டார்.

இப்போது தனியாக இருக்கிறார் கமல். அவரின் ஆத்மார்த்த நண்பர்கள் தவிர அவருக்கு பெரிய சம்பாத்தியம் எதுவும் கிடையாது. மக்களை சந்தோஷப்படுத்துகிற அளவுக்குக் கூட அவர் சந்தோஷமாக இல்லை என்பதுதான் உண்மை. சினிமாவை மட்டுமே முழு வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டதின் விளைவு இது. ஆனால் ெகளதமி வெளிப்படையாக அறிக்கையாக தந்ததுதான் கமலை காயப்படுத்திவிட்டது. இப்படி சொன்னது சரியான வழி இல்லை என நினைக்கிறார் கமல்.

எவரும் தனது அந்தரங்கத்தில் தலையிட அவர் அறவே விரும்புவதில்லை என்பதுதான் உண்மை. ஒரு பேட்டியில்,  ‘நான் என் வீட்டுக் கதவைச் சாத்தி வெச்சிருக்கேன். வாசல்ல காலிங்பெல் வெச்சிருக்கேன். கேட்ல ‘நாய்கள் ஜாக்கிரதை’னு போர்டு மாட்டியிருக்கேன். ‘Don’t disturb’னு எழுதியிருக்கேன். எதையும் கண்டுக்காம கதவைத் தள்ளித் திறந்திட்டு உள்ளே வர்றாங்கன்னா என்ன அர்த்தம்?’ என்றார். சரி, கெட்டிக்காரத்தனமான வாதங்களுக்கு இங்கே பஞ்சம் கிடையாது; கெட்டிக்காரர்களுக்கும் பஞ்சம் கிடையாது. ஆனால் கமல் மாதிரியான நல்ல கலைஞனைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு தமிழனுக்கு இருக்கிறது.

-நா.கதிர்வேலன்