திருப்தி-ஐரேனிபுரம் பால்ராசய்யா

தனது மகளின் திருமணத்திற்கு அறுசுவை விருந்து படைக்க சமையல்காரர் சாமிநாதனை புக் செய்தார் சார்லஸ். ‘‘திருமணப் பந்தியில சாப்பாடு பரிமாற ஆட்கள் ஏற்பாடு பண்ணணுமா?’’ என்று கேட்டார் சாமிநாதன். ‘‘வேண்டாங்க... எங்க சொந்தக்காரங்க இருக்காங்க.. நாங்களே பார்த்துக்கறோம்!’’ ‘‘என்னங்க... பந்தியில உணவு பரிமாற நம்ம சொந்தக்காரங்கள விட்டா கடைசி வரைக்கும் பரிமாற மாட்டாங்க, பசிக்குதுன்னு சாப்பிட உட்கார்ந்திடுவாங்க. அப்புறம் பரிமாற ஆட்கள் இல்லாம அவஸ்தைப்படணும்!’’ அவரது மனைவி ரீட்டா மறுத்தாள்.
‘‘பரவாயில்ல... என் தம்பி நின்னு எல்லாத்தையும் பார்த்துக்குவான்!’’ சொல்லிவிட்டு கிளம்பினார் சார்லஸ்.

‘‘ஏங்க பந்தியில உணவு பரிமாறுறவங்களுக்கு இருபதாயிரம் செலவு ஆகத்தான் செய்யும். அதை குடுக்க விரும்பாம நம்ம சொந்தக்காரங்கள நம்பி கடைசியில கெட்டபேருதான் வரப்போகுது!’’ சலிப்பாய் அவருடன் நடந்தபடியே சொன்னாள் ரீட்டா. ‘‘பணத்துக்கு ஆசப்பட்டு வேணாங்கல. நம்ம உறவுக்காரங்க பந்தியில உட்கார்ந்து இருக்குறப்போ முன்னப்பின்ன தெரியாதவங்க உணவு பரிமாறினா, ஏதோ ஹோட்டல்ல உட்கார்ந்து சாப்பிடுற ஒரு ஃபீலிங் வரும்.

இதுவே நம்ம சொந்தக்காரங்க பரிமாறுனா அவங்ககிட்ட சிரிச்சுக்கிட்டும் பேசிக்கிட்டும் பரிமாறுவாங்க. சாப்பிடுறவங்களும் திருப்தியா சாப்பிடுவாங்க!’’ அவர் சொன்ன வார்த்தையில் உறவினர்களின் திருப்திதான் பெரிது என்று சம்மதித்தாள் ரீட்டா.